அண்மையில் செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி பலரையும் அருவெறுப்புடன் முகம் சுளிக்கவைத்தது. சென்னை, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவர் சட்டவிரோதமாக 19 பூனைகளை அடைத்து வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டார். 'நடக்கப்போகும் தன் திருமணத்துக்காக, விருந்துக்காகத்தான் பூனைகளை அடைத்துவைத்தேன்’ என்று அவர் சொன்னது முதல் அதிர்ச்சி என்றால் அருகில் இருக்கும் டாஸ்மாக் பார்களில் பூனைக்கறியை அவர் விற்றுவந்தது இன்னொரு அதிர்ச்சி.
'இப்படியெல்லாமா நடக்கும்?’ என்று பார் வட்டாரங்களில் விசாரித்தால், 'இதுக்கு மேலேயும் நடக்கும்' என்கிறார்கள். இப்போதெல்லாம் நடுத்தர மற்றும் பிரீமியம் வகை சரக்கு பாட்டில்களில் மூடியின் டிசைனை மாற்றிவிட்டதால் பெரும்பாலும் அதில் கலப்படம் செய்ய வாய்ப்பில்லை. சாதாரண வகை பாட்டில்களில் மூடியின் சீலினை உடைக்காமல் கழற்றி 60 மில்லி எடுத்துவிட்டு அதே அளவு தண்ணீர் கலந்துவிடுவார்கள்.
சத்துணவு முட்டை அல்லது அளவு மிகக்குறைந்த முட்டைகள் பெரும்பாலான பார்களில் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஆம்லேட் ஆர்டர் செய்தால், வெங்காயம் அதிகமாகப் போட்டு முட்டை குறைபாட்டை சரிசெய்துவிடுவார்கள்.
பிராய்லர் சிக்கனில் கழிவாக வெட்டிவீசப்படும் பகுதிகளே பெரும்பாலான பார்களில் சிக்கன் 65யாக சிவக்க சிவக்கப் பரிமாறப்படும். அதுபோல் நிறைய பார்களில் கோழிக்கறியை வினிகரில் ஊறவைத்து பின்னர் வெறும் உப்பு மட்டும் போட்டு அரை வேக்காடாக வேகவைத்துக் கொள்வார்கள். நீங்கள் என்ன ஆர்டர் செய்தாலும் அந்த வகை கோழிக்கறியாக அது மாறும்.
ஏற்கெனவே மசாலாவுடன் தயார் செய்து வைத்திருந்த சிக்கனாக இருந்தால் சிம்பிள். எடுத்து நன்றாகத் தண்ணீரில் அலசி மீண்டும் ப்ரிட்ஜில் வைத்துவிடுவார்கள்.
என்ன ஒன்று, இதையெல்லாம் கண்டு பிடிக்கும் நிலையில் நீங்கள் இருக்கமாட்டீர்கள். மப்பு மாமோய் மப்பு!
No comments:
Post a Comment