சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Nov 2015

ஆன்ட்ரியாவைத் தெரியும், ஆன்ட்ரிக்ஸ்....? -சேட்டிலைட் 'சீட்டிங்' கதை!

டிகை ஆன்ட்ரியாவைத் தெரியும். ஆன்ட்ராய்டு மொபைல் கூடத் தெரியும். ஆன்ட்ரிக்ஸ்? தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்தடுத்த பரிணாமங்களைத் தீர்மானிக்கும் இந்திய டார்வின்தான் ஆன்ட்ரிக்ஸ்.
தகவல் தொடர்பு உலகத்தை மிகத் துல்லியமானதாக மாற்றி அமைக்கும் இஸ்ரோவின் ஒரு அங்கம்தான் ஆன்ட்ரிக்ஸ். தெருவில் போவோர் வருவோர்க்கெல்லாம் சத்தமில்லாமல் நமது செயற்கைக் கோள்களை விற்க முயன்று வகையாக மாட்டிக் கொண்ட நிறுவனம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்றதில் 1.76 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது,  இந்தியாவே வாய் பிளந்து நின்றது. அதைவிட, ஆன்ட்ரிக்ஸில் வெடித்த 2.32 லட்சம் கோடி ஊழல் வெடித்தபோது ஆடிப்போனார் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்(ISRO) நாட்டின் வளர்ச்சிக்கு சேவை செய்கிறது. இதுபோக, வருமானம் வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட வணிக நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ். சேட்டிலைட் தொலைக்காட்சி, செல்போன் கம்பெனிகள் போன்றவற்றுக்கு செயற்கைக்கோள்களைத் தயாரித்துக் கொடுத்து லாபம் பார்த்து வருகிறது.

அப்படி ஜிசாட் 6, ஜிசாட் 6ஏ என்ற இரு செயற்கைக்கோள்களை பைசா லாபம் இல்லாமல் தேவாஸ் என்ற நிறுவனத்திற்கு வகைதொகையில்லாமல் வாரிக் கொடுத்த பெருமைக்குச் சொந்தக்காரர்கள் மாதவன் நாயர் மற்றும் ராதாகிருஷ்ணன். இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், 'எங்களோடு ஒப்பந்தம் போட்டுவிட்டு ஏமாற்றிவிட்டார்கள்' என சர்வதேச தீர்ப்பாயத்தில் தேவாஸ் முறையிட, ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கு 4,432 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வழக்கின்போது இஸ்ரோ தரப்பில் விளக்கம் கொடுக்கக்கூட ஒருவரும் முன்வரவில்லை என்பது கொடுமையானது. தற்போது மத்திய அரசு சி.பி.ஐ விசாரணையை துரிதப்படுத்தியிருக்கிறது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனிடம் கடந்த 22-ம் தேதி இரண்டரை மணி நேர விசாரணையை நடத்தியது சி.பி.ஐ.

இதுதொடர்பாக, ஸ்டேட்ஸ்மேன் இதழில் கடந்த வாரம் கட்டுரை எழுதிய பிரபல சட்ட நிபுணர் ராம்ஜெத் மலானி, "இப்படியொரு சூழல் வராமல் இஸ்ரோ தடுத்திருக்கலாம். இந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது இஸ்ரோவின் பொருளாதார ஆலோசகராக இருந்த பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். இதனை கடுமையாக எதிர்த்தார். அவரது அறிக்கை பல உண்மைகளைச் சொல்கிறது. அந்த அறிக்கையை முன்வைத்திருந்தால் அபராதம் கட்டுமளவுக்கு நிலைமை போயிருக்காது" என காட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையடுத்து, நாம் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரனை சந்திக்க முயற்சி எடுத்தோம். நீண்ட தேடுதலுக்குப் பிறகு அவரது வீட்டில் சந்தித்தோம். சிவகாசியை பூர்வீகமாகக் கொண்டவர். மேற்கு வங்கத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்தவர். 
"இதுபற்றி நான் வெளிப்படையாக பேசுவதற்கு சற்று யோசனையாக உள்ளது. நான் தெருவில் கொல்லப்படவும் செய்யலாம். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வந்தபோதுதான் வானத்தில் உள்ள வளங்களைப் பற்றியே தெரிந்து கொண்டோம். சாமானியனுக்கும் அப்போதுதான் இதன் வீரியம் தெரிந்தது. ஆனால், விஞ்ஞானிகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வரும் வரையில் மவுனமாகத்தானே இருந்தார்கள்? இந்த மவுனத்தின் பின்னணி மிக அபாயமானது. ஒட்டுமொத்த தேசத்தையும் அடகு வைப்பதைப் போன்றது தேவாஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம்" என எடுத்த எடுப்பிலேயே தடதடத்தார் பாலச்சந்திரன்.

இஸ்ரோவில் உங்கள் பணி என்ன?

"ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிமாற்றத்தில் பல இடங்களில் பணியமர்த்தப்படுவோம். அப்படி இஸ்ரோவின் பொருளாதார ஆலோசகராகவும், கூடுதல் செயலராகவும் பணியமர்த்தப்பட்டேன். நிதி தொடர்பான விஷயங்களைக் கையாள்வது, அரசிற்கு அறிக்கை அனுப்புவது உள்ளிட்டவை என்னுடைய பணிகள்".

ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் பணி என்ன?

"நாம் செயற்கைக் கோள்களைத் தயாரிப்பதற்கு முன்பு வரையில் மேற்கத்திய நாடுகளைத்தான் நம்பியிருந்தோம். தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இஸ்ரோவின் பங்களிப்பு மிக முக்கியமானது. எங்கெல்லாம் நீர்வளம் இருக்குன்னு இஸ்ரோ கண்டுபிடித்துத் தருகிறது. டாடா ஸ்கை, ரிலையன்ஸ், மொபைல் கம்பெனிகளுக்கு செயற்கைக் கோள்களைக் கொடுப்பது எல்லாம் வணிகம் சம்பந்தப்பட்டது. முற்றிலும் வணிக நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் ஆன்ட்ரிக்ஸ்".

ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் என்னதான் பிரச்னை?

"அந்த ஒப்பந்தமே முற்றிலும் ஏமாற்று வேலை. 2010-ம் ஆண்டு நடந்த விவகாரங்கள் இது. அப்போது என்னை சந்தித்த விஞ்ஞானி ஒருவர், 'இந்த ஒப்பந்தத்தால் நமக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால், தேவாஸ் நிறைய ஆதாயம் அடையும். நமக்கு நஷ்டம் ஏற்படும்' என்றார். நான் உடனே, 'இந்தத் தகவல்களை விஜிலென்ஸ் அதிகாரி ஒருவரிடம் சொல்லுங்கள். அவர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் என்னிடம் வாருங்கள்' என்றேன். இணைச் செயலர் அந்தஸ்தில் விஜய் ஆனந்த் என்பவர் விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்தார். அவரும் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில்  பி.என்.சுரேஷ் என்ற விஞ்ஞானி தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்தார் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன். ஆன்ட்ரிக்ஸ் தலைவரும் ராதாகிருஷ்ணன்தான். அந்தக் கமிட்டி, 'தேவாஸ் ஒப்பந்தத்தில் உள்ள டெக்னிக்கல், லீகல், கமர்ஷியல் ஆகிய 3 விஷயங்களை ஆராய்ந்து அறிக்கை கொடுக்க வேண்டும்' என்றார். சுரேஷ் ஒரு விஞ்ஞானி. அவர் லீகல், கமர்ஷியல் பக்கம் வேலை பார்த்ததில்லை, எப்படி அறிக்கை கொடுப்பார் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. சுரேஷ் கமிட்டி விசாரணை நடந்ததால் விஜிலென்ஸ் விசாரணையை முடக்கிவிட்டார்கள். 2010 ஜூன் மாதம் சுரேஷ் கமிட்டி அறிக்கையை என்னிடம் கொடுத்தார் ராதாகிருஷ்ணன், இதிலுள்ள விஷயங்களை ஆராய்ந்து சொல்லுங்கள் என்றார்.

நானும் ஆராய்ந்துவிட்டு, 'இதற்கு முன்பு இன்டல்செட் கம்பெனியோடு ஒப்பந்தம் போட்டிருந்தோம். அதில் நம் நாட்டுக்கான பாதுகாப்பு அம்சங்கள் தெளிவாக இருந்தது. இண்டல்செட் பங்குதாரர்களாக யாரை சேர்த்தாலும் இஸ்ரோ அனுமதியில்லாமல் சேர்க்க முடியாது. ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒருமுறை ஆய்வு நடக்கும். ஆனால், தேவாஸ் ஒப்பந்தத்தில் இந்த இரண்டு அம்சங்களும் இல்லை. அதைவிட ஆபத்தானது, இஸ்ரோவின் அனுமதியில்லாமல் யாரை வேண்டுமானாலும் பங்குதாரர்களாக அவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் என்பது. இதை ஆன்ட்ரிக்ஸ் கேள்வி கேட்க முடியாது' என்றெல்லாம் குறிப்பிட்டேன். அவர்கள் நினைத்தால் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.கூட சேர்த்துக் கொள்ளலாம். தவிர, செயற்கைக்கோளில் உள்ள 90 சதவீத எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரம்கள் தேவாஸ்க்குச் சொந்தமாகும். பத்து சதவீதம்தான் ஆன்ட்ரிக்ஸ் வசம்.

2ஜி இழப்பு ஏற்பட்டபோது சி.ஏ.ஜி சொன்ன விளக்கம், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுத்ததால் இழப்பு என்று. ஆனால், இந்த எஸ் பேண்டு ட்ரான்ஸ்பாண்டர்கள் அதைவிடக் கூடுதல் சிறப்புடையது. இந்த இரண்டு செயற்கைக் கோள் மூலமாகவும் தேவாஸ் நிறுவனம் நமக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாயை பல காலகட்டங்களில் தருவார்கள். ஆனால், செயற்கைக் கோளை நாம் தயாரிக்கவே 900 கோடி செலவாகும். அவர்கள் தரும் 1,100 கோடியில் மீதம் 200 கோடி ஒரு தொகையே இல்லை. லாபமே இருக்காது. சமூக சேவைக்கு லாபம் பார்க்கத் தேவையில்லை. ஆனால், தனியாருக்குக் கொடுக்கும்போது லாபம் பார்த்துத்தான் தர வேண்டும். இதையெல்லாம் எனது அறிக்கையில் குறிப்பிட்டேன்".

தேவாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் எப்படி ரத்தானது?

"அந்த நேரத்தில் சி.ஏ.ஜி.யின் முதல்கட்ட அறிக்கை ஒன்று எங்கள் கைக்கு வந்தது. அந்த அறிக்கையில் எங்களிடம் சில கேள்விகள் கேட்டார்கள். 'இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டால் 2.32 லட்சம் கோடி தேவாஸ் நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கும். அது நமக்கு பேரிழப்பாகும்' எனக் குறிப்பிட்டிருந்தார்கள். அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். அவர்கள் கேள்விகளுக்கு பதில் கொடுத்தேன். தேவாஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக இஸ்ரோவின் பல அதிகாரிகள் செயல்பட்டது தெரிய வந்தது. இதை வைத்து சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினேன். 'தேசத்திற்கு மிகப் பெரிய நஷ்டம். தேவாஸ் கம்பெனி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டேன். அப்போது சட்ட அமைச்சகத்தில், 'நீங்கள் விருப்பப்பட்டால் ஃபோர்ஸ் மெஜூர் (Force mejure) படி ரத்து செய்யுங்கள்' என்று. போர்ஸ் மெஜூர் என்றால் கடவுளின் கை என்று பொருள். இருவர் ஒப்பந்தம்போட்டு ஒரு கட்டடம் கட்டுகிறார்கள் என்றால், அதற்கு நீங்கள் பணமும் தருவீர்கள். ஆனால், திடீரென்று நில நடுக்கம் வந்து கட்டடம் இடிந்துவிட்டால் அந்தப் பணத்தை திருப்பித் தர வேண்டியதில்லை. இதைத்தான் கடவுளின் கை என்று சொல்கிறோம்.

இதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எந்த ஒப்பந்தத்திலும் இந்த வார்த்தையைப் போடுவார்கள். 'இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றால் இந்த அடிப்படையில் கேன்சல் பண்ணுங்கள். நாம் கொடுத்தால்தான் தேவாஸ்க்கு ஸ்பெக்ட்ரம் கிடைக்கும்' என சட்ட அமைச்சகம் சொன்னது. கூடவே, சட்ட அமைச்சக செயலர் விஸ்வநாதன் (தற்போது குடியரசுத் தலைவரின் சட்ட ஆலோசகர்) ஒன்றைச் சொன்னார். 'நாம் கேன்சல் பண்ணலாம். அவர்கள் தீர்ப்பாயம் போக வாய்ப்புள்ளது' எனக் குறிப்பிட்டார். அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மோகன் பராசரன், 'இஸ்ரோ, ஆன்ட்ரிக்ஸ், ஸ்பேஸ் கமிஷன், விண்வெளித் துறை செயலர் என அனைத்தும் ராதாகிருஷ்ணன் வசம் உள்ளது. அதனால் நீங்கள் இதை கேபினட் முடிவுக்கு அனுப்புங்கள்' என அறிவுறுத்தினார். இதன்பிறகுதான் உண்மையான கதை எனக்குத் தெரிய ஆரம்பித்தது".

அதென்ன கதை?

"2010 அக்டோபர் மாதம் கேபினட்டுக்கு அறிக்கை கொடுத்தேன். அதே மாதம் என்னை சந்தித்த ஒரு மூத்த விஞ்ஞானி, 'ஒப்பந்தத்தில் தேவாஸ் நிறுவனம் எஸ்.டி.எம்.பி என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாக சொல்லியிருந்தார்கள். ஆனால் அந்த டெக்னாலஜி மேல் அவர்களுக்கு ஐ.பி.ஆர். புராப்பர்டி ரைட்ஸ் (intelectual property rights) இல்லை' என்றார். உடனே இதை ராதாகிருஷ்ணன் கவனத்திற்குக் கொண்டு போனேன். 'கேபினட் நோட்டில் இந்தத் தகவலும் சேர்க்கப்பட வேண்டும்' என்றேன். காண்ட்ராக்ட்டை டெர்மினேட் பண்ண இந்த ஒரு காரணம் போதும். அந்த ரிப்போர்ட்டில் 3 இடத்தில் இந்தத் தகவலை சொல்லியிருந்தேன். இல்லாத ஐ.பி.ஆர் இருப்பதைப் போல் காட்டிக் கொள்வது மிகப் பெரிய குற்றம். இவர்கள் தீர்ப்பாயம் போகவே முடியாது. ஆனால், கேபினட் நோட்டில் ராதாகிருஷ்ணன் அந்தத் தகவலைச் சொல்லாமல் மறைத்துவிட்டார். எதனால் அவர் அதை மறைத்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அந்த அடிப்படையில் முடிவு எடுத்திருந்தால் இப்போது தீர்ப்பாயத்தில் 4 ஆயிரம் கோடி அபராதத்திற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்".
இஸ்ரோ நிர்வாகிகளுக்கு தேவாஸ் மீது ஏன் இவ்வளவு அக்கறை?

"தேவாஸ் கம்பெனி நடத்துபவர் சந்திரசேகர். இவர் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி. இஸ்ரோ தலைவர் உள்பட பலரும் கூட்டுச் சேர்ந்து நடத்தி வரும் கம்பெனிதான் இது. முதலில் போர்ஜ் என்ற ஒரு அமெரிக்கன் கம்பெனி இவர்களோடு ஆலோசனை நடத்தியது. அதன்பிறகு மொரிஷீயஸில் ஒரு கம்பெனி ஆரம்பித்தார்கள். ஆன்ட்ரிக்ஸ், தேவாஸ் ஒப்பந்தம் போட்டதும் டாய்ஸ் டெலிகாம் என்ற ஜெர்மனி கம்பெனி பார்ட்னராக வந்தார்கள். இவர்களுக்குப் பின்னால் அந்த அமெரிக்கன் கம்பெனி இருந்தது. அந்த நேரத்தில் 10 ரூபாய் பங்கு 17 ஆயிரத்திற்குப் போனது. ஒப்பந்தம் போட்ட சில நாட்களில் தேவாஸ் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபாய் வந்துவிட்டது. இந்த மாயமந்திரத்துக்கு சொந்தக்காரர்களாக இஸ்ரோ தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இருந்தார்கள்.

தேவாஸ் கம்பெனி, தகவல் தொடர்பு கனெக்டிட்டிவிக்காக இதைப் பயன்படுத்துகிறோம் என்றார்கள். அபார்ட்மெண்ட்களில், கம்பெனிகளில் டி.வி, மொபைல் போன், நெட் போன்றவை சரியாக வேலை செய்யாது. அந்த கனெக்ட்டிவிட்டியை இவர்கள் கொடுக்கலாம். இந்தக் கம்பெனி பக்கம் அனைத்து நிறுவனங்களும் வந்துவிடும். மிகப் பெரிய லாபம் கிடைத்திருக்கும். தகவல் தொடர்புக்காக கொண்டு வரப்படும் செயற்கைக் கோள், உளவு செயற்கைக் கோளாக மாறுவது மிக எளிதானது. நமது பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்திருக்கும்".

இப்போது பேசும் நீங்கள் அப்போதே வெளியில் அம்பலப்படுத்தியிருக்கலாமே?

"இப்போது நான் பேசுவதற்கு முக்கியக் காரணம் உண்டு. நான் கொடுத்த அறிக்கையால் இவர்களது கொள்ளை நின்றுபோய்விட்டது. தவிர, நான் அனுப்பியது அனைத்தும் மிக மிக ரகசியம். இதனைக்கூட தகவல் உரிமைச் சட்டத்தில் சிலர் விண்ணப்பித்து இஸ்ரோவில் கேட்டார்கள். 'தேசப் பாதுகாப்பு தொடர்பானது. தர முடியாது' என இஸ்ரோ மறுத்துவிட்டது. ஆனால், தேவாஸ் கம்பெனி ஆர்.டி.ஐ.யில் கேட்டபோது, இஸ்ரோ எனது அறிக்கையை முழுவதுமாகக் கொடுத்துவிட்டது. இந்த சம்பவம் என்னை ரொம்பவே அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. என்னுடைய கடிதம் பப்ளிக் ப்ராப்பர்டி ஆனதால்தான் நான் இப்போது பேசுகிறேன்".

சி.பி.ஐ விசாரணை எப்படித் தொடங்கியது?

மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக, சதுர்வேதி கமிட்டியை நியமித்தது. அந்தக் கமிட்டியில் என்னுடைய ரிப்போர்ட் எதுவும் வைக்கப்படவில்லை. இரண்டாவது கமிட்டியில், 'மாதவன் நாயரில் தொடங்கி நான்கு விஞ்ஞானிகள் அரசு சேவையில் தொடரக் கூடாது' என குறிப்பிட்டனர். இதையடுத்துத்தான் சி.பி.ஐ வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது. ஒப்பந்தம் நீக்கம் ஒரு விஷயம். ஒப்பந்தத்தால் ஏற்படக் கூடிய நஷ்டத்தை நிறுத்திவிட்டோம். ஆனால், அந்த ஒப்பந்தத்தை சரியான முறையில் நீக்கும் செயலை ராதாகிருஷ்ணன் செய்யவில்லை. நான் கொடுத்த அறிக்கையை கேபினட்டுக்குக் கொண்டு போகாமல் ராதாகிருஷ்ணன் மறைத்தார்".

2ஜிக்கும், ஆன்ட்ரிக்ஸுக்கும் என்ன வித்தியாசம்?

"2ஜி-யில் முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுத்ததால் ஊழல் என்று சொல்கிறோம். அதுகூட கேபினட் முடிவு. ஆனால், தேவாஸ் நிறுவனத்திற்கு எந்த நடைமுறையும் இல்லாமல் வாரிக் கொடுக்க முன்வந்தார்கள். இஸ்ரோவின் 99 சதவீத விஞ்ஞானிகள் நாட்டிற்காக கடுமையாக உழைக்கிறார்கள். ஒரு சதவீதம்பேர் தங்களுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். 2005-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் பற்றிய விழிப்பு உணர்வு இல்லை. அதன் மதிப்பை இன்றைக்குப் பேசுகிறோம். சாமானிய மனிதனுக்குத் தெரியவில்லை. உலகில் விண்வெளி உலகில் கோலோச்சுபவர்கள் 6 பேர் தான். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய யூனியன், இந்தியா. இவர்களுக்கு ஸ்பெக்ட்ரமின் மதிப்பு தெரியும். மக்களுக்கு இவர்கள் சொல்வதில்லை. இஸ்ரோ அதிகாரிகள் யார் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்டதை எல்லாம் மறைத்துவிட்டார்கள்".

தவறு செய்த அதிகாரிகள் யார் யார்?

"பாஸ்கர் நாராயணன், ஸ்ரீதர மூர்த்தி உள்ளிட்ட சில அதிகாரிகள்".

இஸ்ரோ மீதான ஊழல் புகார்கள் அதன் நம்பகத்தன்மையைக் கெடுக்காதா?

"அதுதான் வேதனையாக இருக்கிறது. இந்த ஆப்ரேஷன் நடக்கலைன்னா 98 சதவீத விஞ்ஞானிகள் உழைப்பு வீணாகப் போயிருக்கும். அவர்களுடைய உழைப்பை யாரோ ஒரு தனியார் திருட்டுத்தனமாக சம்பாதிக்கப் போகிறார் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தகவல் தொழில்நுட்ப உலகில் ட்ரான்ஸ்பேண்டர்களின் தேவை அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒரு சேட்டிலைட் 14 வருஷம் இருக்கும் என்பார்கள். அவ்வளவு வருஷம் இருந்துச்சா? என்ற கேள்விக்கெல்லாம் இஸ்ரோவிடம் பதில் இருக்காது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். இது மாதிரி ஊழல் அரசியல்தான் இஸ்ரோவின் பெயரைக் கெடுக்கிறது".

இதனால் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பாதிப்பு வந்ததா?

"2 லட்சத்து 30 ஆயிரம் கோடியை வராமல் அழித்துவிட்டேன் என்ற கோபம் அவர்களுக்கு நிறையவே உண்டு. என்னைப் பற்றிய தவறான தகவல்கள் பரப்பினார்கள். 2ஜி ஊழலால் தி.மு.க பாதிப்புக்கு உள்ளானபோது, '2ஜியை ஒன்றும் இல்லாமல் செய்ய ஆன்ட்ரிக்ஸ் ஊழலை பாலசந்திரன் கிளப்பிவிட்டார். கருணாநிதியோட முதல் குடும்பத்தோடு அவர் நெருக்கம்' என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். இதனால் நான் அரசு செயலர் ஆகும் வாய்ப்பையும் கெடுத்தார்கள். நம் நாட்டின் நன்மைக்காக சண்டை போட ஆரம்பித்தால் இதுதான் நடக்குமா? 'இனி ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன?' என்ற மனநிலை வராதா?" எனக் கொந்தளிப்போடு பேசி முடித்தார் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.

No comments:

Post a Comment