சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Nov 2015

கரூரில் பஸ் அதிபர் அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களா?

கரூரில் தனியார் பேருந்து அதிபரின் அலுவலகத்துக்குள் புகுந்து கண்டக்டர், டிரைவர் மீது  கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

கரூரில் உள்ள விகேஏ டிரான்ஸ்போர்ட்டுக்கு சொந்தமான பேருந்தை, கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரைவர் கணேசன், கண்டக்டர் மோகன்ராஜ் ஆகியோர் டெப்போவில் இருந்து எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, கோயம்பள்ளி ஊராட்சி தலைவரும், அதிமுக கரூர் மாவட்ட தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளருமான பாஸ்கரன், அந்த வழியாக தனது காரில் வந்துள்ளார். இதை டிரைவர் கவனிக்காத நிலையில், பேருந்து பாஸ்கரன் கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரன், பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது தகராறு முற்றவே பேருந்து ஊழியர்கள் பாஸ்கரனை கீழே தள்ளி விடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன், தனது நண்பர் கரூர் நகராட்சி 33-வது கவுன்சிலரான தானேஷ் என்கிற முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு செல்போனில் தகவல் சொல்ல, அடுத்த சில நொடிகளில் அவர் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்துள்ளார். அதனைத் தொடந்து அவர்கள் பேருந்து அலுவலகத்துக்குள் புகுந்து ஊழியர்களை அடித்து உதைத்துள்ளனர். இந்த தாக்குதல் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த கண்டக்டர் மோகன்ராஜ்,  கார் டிரைவர் விக்னேஷ் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கரூர் டவுன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து விகேஏ டிரான்ஸ்போர்ட் மேலாளர் நல்லுசாமி நம்மிடம் கூறுகையில், "அதிமுக கொடிக்கட்டின வண்டி வருவதை பார்த்து,  'பேருந்தை பின்னால் எடுத்தியா?' என்று கூறி பாஸ்கரன் பிரச்னை பண்ணி கண்டக்டரை அடித்து இருக்கிறார். அங்கு இருந்தவர்கள் சமாதானம் பேசி இருக்கிறார்கள். ஆனாலும் சமாதானம் அடையாத பாஸ்கரன், பஸ் நிலையத்தில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் தானேஷ் உள்ளிட்ட அதிமுகவினரை வரவழைத்து, அலுவலகத்தில் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். கண்டக்டரை அலுவலகத்தில் புகுந்து அடித்ததோடு, வெளியே இழுத்துக் கொண்டுபோய் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பா முதலில் சமாதானம் பேச ஓடிவந்தார். பிறகு நான் வந்தேன்.  பேசிப்பார்த்தோம், அவர்கள் ஒத்துவரவில்லை. பிறகு அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்க போனோம். முதலில் டாக்டர்கள் மருத்துவமனையில் சேர்க்க மறுத்தார்கள். விடாமல் நாங்கள் பிரச்னை செய்ததால், வழியில்லாமல் 11 மணிக்கு சேர்த்தார்கள். இது நடந்து கொஞ்ச நேரத்திற்கு பிறகு, விக்னேஷ் என்பவரை நாங்கள் தாக்கியதாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். சம்பவம் நடந்தபோது பாஸ்கரன் போதையில் இருந்துள்ளார். அவர்தான் காரை ஓட்டிக்கிட்டு வந்தார். ஆனால் அதை மறைக்க விக்னேஷை தாக்கியதாக நாடகமாடுகிறார்கள். போலீஸாரும் இதுக்கு துணை போகிறார்கள். கூடவே சமாதானம் பேசிய எங்க அப்பா மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு போட்டிருக்கிறார்கள்.
நடந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக பதிவாகி இருக்கிறது. அதுதான் ஆதாரம். இப்போது போலீஸ் அதை கேட்டுக்கிட்டு இருக்கிறார்கள். அரசியல் அதிகாரம் இருக்கிறது என்று இப்படி எங்களிடம் பிரச்னை செய்கிறார்கள். எல்லாத்தையும் ஆண்டவன் பாத்துக்கிட்டு இருக்கான்" என்றார். 

தாக்குதல் நடத்தியவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment