சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Nov 2015

வடியாத தண்ணீரில் குமுறும் திருநின்றவூர்வாசிகள்...!

டந்த வாரங்களில் பெய்த கனமழையில் சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகள் மிதக்கும் நிலையில் இருந்து வருகின்றன. படிப்படியாக தண்ணீர் வடிந்து வந்தாலும், இன்னும் முழுமையாக வடிந்தபாடில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லைக்குள் வரும், தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் படகு போக்குவரத்தே நடைபெற்றது. அதுபோன்று திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பேரூராட்சி பகுதியிலும் படகு சவாரி நடைபெற்றது.
ஆம், திருநின்றவூர் பெரிய ஏரி. சுமார் 800 ஏக்கர் பரப்பளவையும், அள்ள அள்ள குறையாத மீன் வளத்தையும் உடையது. இந்த ஏரியின் மூலம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் பெரிய ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. ஆனால், இது மகிழ்ச்சி ஏற்படுத்துவதற்கு பதிலாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அலறுகிறார்கள் திருநின்றவூர் ஏரிக்கரை குடியிருப்புவாசிகள். திருநின்றவூர் பெரிய ஏரிக்கரையில் பெரியார் நகர், சுதேசி நகர், முத்தமிழ் நகர், கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் 3500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கனமழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து, செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். படகு சவாரி மூலமாக, சென்று அப்பகுதியில் பயணமானோம்.

தண்ணீர் சூழ்ந்துள்ள அப்பகுதி மக்களிடம் பேசினோம். "கனமழைக் காலங்களில் பெரிய ஏரி நிறைந்து, கரையோர குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இது இன்று, நேற்று நடப்பதல்ல. 2004-ஆம் ஆண்டிலிருந்தே இதே நிலைதான் நீடித்து வருகிறது. மழைக் காலங்களில் தண்ணீரை வெளியேற்றச் சொல்லி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எந்த பயனும் இல்லை. இது ஆக்கிரமிப்பு பகுதி, நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள்.

1994-ம் வருட்த்தில் இந்த நிலத்தை குடிசைமாற்று வாரியம் எங்களுக்கு கொடுத்தது. நாங்களும் மனைக்கான பணத்தை கொடுத்து, கிரைய பத்திரமும் வாங்கி இருக்கோம். அப்படி இருக்கும்போது இத ஆக்கிரமிப்பு பகுதி என்று சொல்வதே தவறு.
இந்த ஏரியில் மீன்பிடித் தொழில் ஜோரா நடந்து வருது. அவங்கதான், இந்த ஏரி தண்ணீரை வெளியேற்ற விடாமல் தடுக்கிறார்கள். இந்த திருநின்றவூர் பேரூராட்சியில் இருப்பவர்களுக்கும், இந்த மீன்பிடி தொழில்ல இருக்கிறவங்களுக்கும் தொடர்புண்டு. அவங்களுடைய கூட்டுச்சதியால் மக்கள் சாக்கடை கலந்த தண்ணீரோடு, பல நாட்களாக கஷ்டத்தை அனுபவிச்சிட்டு வருகிறோம்" என கண்ணீருடன் தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.
இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்புச் செழியன் மற்றும் ராபர்ட் ஆகியோரை சந்தித்து பேசினோம்.

“பெரிய ஏரிக்கரையில் 1994-ஆம் ஆண்டு எங்களுக்கு குடிசை மாற்று வாரியம் பட்டா வழங்கியது. அப்போதெல்லாம் இந்த ஏரியில் தண்ணீர் குறைவாகத்தான் இருந்தது. ஏரி நிரம்பினால் தண்ணீர் வடிவதற்கு தனியாக கால்வாய் இருக்கும். அந்த கால்வாய் வழியே தண்ணீர் வழிந்து சென்றுவிடும். ஆனால், காலப்போக்கில் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டு விட்டன.

இந்த பெரிய ஏரி இன்று பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எப்போதெல்லாம் கனமழை பெய்கிறதோ அப்போதெல்லாம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துவிடும். முறையாக ஏரியை தூர்வாராததும் இதற்கு காரணம். கரையோரத்தில் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்டப்பட்ட நிலையில் அதுவும் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது.
ஏரியின் தடுப்பு சுவரின் உயரம் நீர் நிரம்பும் அளவிற்கு கீழேயே இருந்தது. அதனால் சுவர் அமைக்கும் திட்டமும், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் வீணானது. குடியிருப்புக்குள் வெள்ளம் வந்து சூழ்ந்துக் கொள்ளும்போது அதிகாரிகளிடம் முறையிட்டாலும், ‘நடவடிக்கை எடுக்கிறோம்’ என சொல்லி மழுப்பி விடுகின்றனர்.

முக்கியமாக இந்த ஏரியில் மீன்பிடித் தொழில் நடக்கிறது. அதனால் கால்வாயில் வெளியேற்றப்படும் நீரில் மீனும் வெளியேறினால் நமக்கு ஏதும் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என பயப்படுகிறார்கள் ‘சில குறிப்பிட்ட நபர்கள்’. இந்த நபர்களில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடு கிடையாது. அதனால்தான் தண்ணீர் வடிந்து செல்லும் கால்வாய்களையும் ஆக்கிரமிப்புகளால் அடைத்துவிட்டனர்.
இப்போது மழைத் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுபற்றி கேட்டால் ஏரி தண்ணீரை கொண்டு விவசாயம் செய்கிறோம் என்று போலித்தனமாக நாடகமாடுகிறார்கள். ஆனால், அதெல்லாம் இப்போ வீட்டுமனைப் பட்டாக்களாக மாறி நீண்ட நாட்களாயிடுச்சு.

தற்போது எங்கள் குடியிருப்புகளுக்குள்ளே கழிவுநீரும் சேர்ந்து காய்ச்சல், தலைவலி என நோய்கள் வர ஆரம்பித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் 26.11.2015 வழக்கு விசாரணையின் முடிவில் ‘ஏரி தண்ணீரை திறந்து விடவேண்டும்’ என்று தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனால், சென்ற முறையும் வீடுகளில் தண்ணீர் வடிவதற்கு ஏரியை திறந்து விடவேண்டும் என தீர்ப்பு வந்து. அதையும் அப்படியே விட்டுவிட்டனர். இம்முறையும் கலெக்டருக்கு உத்தரவு வந்துள்ளது. எங்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் உள்ளோம்" என்றனர்.

இது பற்றி மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் ஆகியோரிடம் இப்பிரச்னை குறித்து தெரிவித்தோம். ஆனால் பதில் வரவில்லை.

கழிவுநீரும், மழைத் தண்ணீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் பல நோய்கள் பரவி வருகின்றன என குருயிருப்புவாசிகள் புகார் வாசித்துக் கொண்டிருக்கின்றனர். நீதிமன்ற தீர்ப்புக்காகவும், வீடுகளில் புகுந்த நீர், எப்போது வடியும் என சோகத்துடனும் காத்திருக்கிறார்கள் திருநின்றவூர் ஏரிக்கரைப் பகுதி மக்கள்.


No comments:

Post a Comment