சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Nov 2015

படித்தது எம்.இ... தொழில் உடுக்கை அடிப்பது!

நாகர்கோவிலிருந்து ஈத்தாமொழிக்கு செல்லும் வழியில் சுண்டப்பற்றிவிளை அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென "டுன்ட்டுடூன்டுன்டுன்... டுன்ட்டுடுடூன்டுன்டுன்" என உடுக்கை ஒலித்துக் கொண்டிருந்தது.
சுற்றிப் பார்த்தால் கோயில் கொடை விழா எதும் இல்லை! மறுபடியும் அதே சத்தம் கருப்பசாமியை வருவிக்க அடிப்பதுபோல ரிதமாக ஒலித்துக் கொண்டிருந்தது. சத்தம் வந்த திசையில் திரும்பி பார்க்க,  கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ள ஒரு வீட்டு மாடியில், இளைஞர் ஒருவர் உடுக்கு அடித்துக் கொண்டிருந்தார்.
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் ஒரு அரசியல்வாதியை போல இருந்த அவரிடம் மெதுவாக  பேச்சு கொடுக்க... தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச தொடங்கினார்.

"என் பேரு வெங்கடேஷ்குமார், வயசு 28 ஆகுது. நான் மெக்கானிக்கல் இஞ்சினீயரிங் (எம்.இ.) படிச்சிருக்கேன். உடுக்கை கலைஞன் நான். சின்ன வயசுல இருந்தே கிராமிய கலைகளை பாத்து கத்துட்டு வாரேன். எங்க அம்மா கலைமாமணி சரஸ்வதி பெரிய வில்லிசைப் பாடகி. அவங்க நிகழ்ச்சிக்கு போகும் போது என்னையும் கூட்டிட்டு போவாங்க. நானும் ரசித்து பாப்பேன். அப்படி வந்ததுதான் இந்த கலை ஆர்வம். எங்க குடும்பமே கலைக் குடும்பம்தான்.

தென்னிந்தியா முழுக்க எங்க அம்மா நிகழ்ச்சி பண்ணிருக்காங்க. வில்லிசையில பல வாத்தியங்களை வச்சி வாசிப்பாங்க. அதுல ஒண்ணுதான் இந்த உடுக்கை.  நான் எங்க ஊரு பக்கத்துல நிகழ்ச்சி நடந்துச்சுனா, கண்டிப்பா பாக்க போயிருவேன். அப்போதும் இந்த உடுக்கை அடிப்பதைதான் நான் பாப்பேன். என் கவனமும் அது பக்கம்தான் இருக்கும். படிப்பை  விட வில்லிசை நிகழ்ச்சியை அதிகம் படிக்க  தொடங்கினேன்.
இன்னொரு விசேஷம் என்னான்னா,  எங்க அம்மாவை அட்டைப் படத்துல போட்டு,  26.2.1984 அன்று வெளியான ஆனந்த விகடன் பெருமைப்படுத்திச்சி. அப்போ நான் பொறக்கவே இல்ல. பெரும்பாலான பத்திரிகைகளில அவங்கள  பற்றிய  செய்தி வந்துருக்கு. நான் பத்தாம் வகுப்பு படிக்குறப்போ வில்லிசையில ஒரு முக்கிய வாத்தியமான உடுக்கை மேல ஒருவித ஈர்ப்பும், ஈடுபாடும் வந்துச்சி. அதுக்கப்புறம் என் கவனம் உடுக்கை பக்கம் திரும்பிச்சு. உடுக்கை பத்தி முழுசா தெரிஞ்சிக்க தொடங்கினேன். எங்க அப்பா அய்யாதுரையும் அதுக்கு பல உதவி  செய்தாரு.
உடுக்கை, வில்லிசையில பின் வரிசையில ஓரமா இருந்து அடிப்பதுதான். காலை மடித்து, வலது கால் முட்டை தூக்கி வெச்சி அதுல உடுக்கை வெச்சி அடிப்பாங்க. நானும் அது போல பழக தொடங்கினேன். இது ஒரு கையில அடிப்பதுதான். வட மாவட்டகளில் கருப்பசாமியை வருவிக்க இத அடிப்பாங்க. வில்லிசையில முக்கிய வாத்தியமே உடுக்கைதான். இந்த கலையை முழுசா படிக்கத் தொடங்குனதுக்கு அப்புறம் நானே உடுக்கை செய்யவும் கத்துக்கிட்டேன். ஆட்டு தோலையும், மாட்டு சவ்வையும் பயன்படுத்தி செய்தேன். இந்த உடுக்கை  அடிக்கும் போது, சுத்தி கட்டிருக்க கூடிய கச்சைதான் சத்தம் வித விதமாக வர உதவும். உடுக்கு சத்தம்தான் வில்லிசை நடத்துறவங்களுக்கு ஊக்கம் கொடுக்கும்.

நானும் இதுவரை கிட்டதட்ட தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்துட்டேன். நான் படிச்ச படிப்பு சம்மந்தமான வேலைக்கு இதுவர போகல, போவேனா என்றும் தெரியல. நான் இந்த கலையை நேசிக்கிறேன். இதை முறையா கற்று விட்டேன். இந்த உடுக்கு கலையில இதுவரை யாரும் விருதுகள் வாங்கல; நான் வாங்கியே தீருவேன். தமிழ்நாடு முழுக்க நிகழ்ச்சிக்கு போயிட்டுருக்கேன். இப்போகூட என் மனநிம்மதிக்குதான் உடுக்கு அடிச்சிட்டுருக்கேன். இந்த வில்லிசை கிராமியக் கலை கொஞ்சம் கொஞ்சமாக அழிஞ்சிட்டு வருது.
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் போன்றவங்க இந்த கலையை ஆவணப்படுத்திட்டு வாராங்க. இன்னும் 50 வருஷம் கழிச்சி அந்த ஆவணங்களை பாத்துதான் மக்கள் கிராமிய கலைகளை தெரிஞ்சிக்க முடியும். முறையாக இதை இசைப் பள்ளியில சொல்லிக் கொடுக்கணும். இப்போ உள்ள இளைஞர்கள் டிரம்ஸ், கிடார், கீ போர்டுனு கத்துக்க போயிட்டாங்க. அதை நான் தப்புனு சொல்ல வரல. ஆனா நம்ம பாரம்பரியமான நாட்டார் கலைகளையும் இளைஞர்கள் கத்துக்கணும், பாதுகாக்கணும். அவைகளை நாம அடிக்கடி வழக்கத்தில் கொண்டு வரணும். அப்போ இந்த கலைகள் எல்லாம் அழியமா நிலைச்சு நிக்கும்" என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் "டுன்ட்டுடூன்ட்டுன்டு" என உடுக்கை அடிக்கத் தொடங்கி விட்டார் வெங்கடேஷ்குமார்.

கிராமியக் கலைகளை வளர்க்கும் கலைஞர்கள்தான் நம் வரலாற்று பண்பாடுகளை அடிக்கடி சமூகத்துக்கு நினைவுபடுத்துபவர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. உடுக்கை அடிக்கும் பட்டதாரி வெங்கடேஷ்குமாரையும் உலகம் ஒரு நாள் திரும்பி பார்க்கும்.

No comments:

Post a Comment