சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Nov 2015

கல்விக்கடன்: விழிப்பிதுங்கும் வங்கிகள்!

தானத்தில் சிறந்தது கல்வித்தானம். இதன் அடிப்படையிலோ அல்லது ஓட்டுக்காகவோ... அள்ளி அள்ளி கொடுக்கப்பட்ட கல்விக்கடன் இன்று வாராக்கடன்களாக வங்கிகளை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. 
தற்போதுள்ள கல்விக்கடன் திட்டத்தின் கீழ், உள்நாட்டுப் படிப்பிற்கு பத்து லட்சம், வெளி நாட்டில் படிப்பதற்கு இருபது லட்சம் கடன் கொடுக்கப்படுகிறது. படிப்பு முடியும் வரை மாதத்தவணை செலுத்த வேண்டாம். படித்து முடித்து ஆறு மாதத்திற்குப்பின் அல்லது அதற்கு முன் வேலை கிடைத்துவிட்டால், எது முதலில் வருகிறதோ, அன்றிலிருந்து மாதத்தவணை கட்ட வேண்டியிருக்கும். வட்டியும் சாதா வட்டிதான்(SI) . நாலு லட்சம் வரையிலான கடனுக்கு செக்யூரிட்டி தேவையில்லை. பெண்களுக்கு வட்டிச்சலுகை உண்டு. 
இதில் தற்போது ஏற்பட்டிருக்கும் NPA அதிகரிப்பு இந்த 4 லட்சம் கடன்களில்தான்.

நான் நிறைய வங்கிகளுக்கு ஆடிட்டராக இருந்திருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்படும் கடன் களை அதற்காக அமைக்கப்பட்ட திட்ட வழக்கின்படி கொடுக்கப்பட்டுள்ளதா, பத்திரங்கள் சரியாக எடுக்கப்பட்டுள்ளதா, ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடன்களின் தற்போதைய நிலை, அவை எந்த பாகுபாடில் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் எல்லாம் பார்க்கவேண்டும். இப்படிச்செய்யும்போது கல்விக்கடன்களில் வங்கிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் கண் கூடாகப் பார்க்க முடிந்தது.

நம் நாட்டில் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம்…இலவசம். கொடுப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கிறது. அதனால் கொடுக்கிறார்கள். ஆனால் கடன் வாங்குவோர் இதை தங்கள் உரிமையாக நினைக்கிறார்கள். இது அபாயம்தான். கல்விக்கடனையும் இதைப்போல் நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதனால்தான் இப்போது பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

சரி, இதில் உள்ள பிரச்னைக்கு வருவோம்.
முன்பே சொன்னது போல நாலு லட்சம் கடனுக்கு செக்யூரிட்டி ஏதும் தேவை இல்லை. சொல்லப்போனால் இது சலுகை வட்டி விகிதத்தில் கொடுக்கப்படும்  க்ளீன் லோன். இதனால் வங்கிகளுக்கு எதன் மீதும் பிடிப்பு இல்லை. பணம் கட்ட முடியாமல் போனால் உத்தரவாதம் ஏதும் இல்லை.

நீங்கள் சொல்லலாம், 'வேலைக்கு போகும் இடத்தில் சொல்லி பிடித்தம் செய்யலாமே' என்று. ஆனால் உண்மையில் வேலை கிடைத்த விஷயத்தை கடன் பெற்றவர்கள் சொல்வதே இல்லை. இன்னொரு சோகம் என்னவென்றால், திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது பள்ளி இறுதித் தேர்வில் 60% மேல் மார்க் எடுத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால் இது இப்போது நீக்கப்பட்டுள்ளது. வெறும் பாஸ் மார்க் போதும். அதுகூட இரண்டாம் முயற்சியில் இருந்தாலும் பரவாயில்லை. மேற்படிப்புக்கான கல்விக்கடன் மறுக்கப்படக்கூடாது. உண்மையாகவே படிக்கும் மாணவர்களுக்கு பணம் பற்றாக்குறை காரணமாக படிப்பு தடைபடக்கூடாது என்பதற்காகாத்தான் இந்த திட்டம். ஆனால் செமெஸ்டரில் தேர்வாகாமல், அரியர்ஸ் வைத்து, பாசாகாமல் வேலைக்கும் போக முடியாமல்... கடனை எங்கிருந்து கட்டுவது? 

சரி,  இதன் இன்னுமொரு எல்லைக்கு வருவோம்.

பணத்தட்டுப்பாடு உள்ளவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் இன்று வரித்திட்டமிடுதலுக்கு பயன்படும் மாயமென்ன? இவர்களால் பிள்ளைகளின் படிப்புக்கு சுலபமாக செலவு செய்யமுடியும். ஆனாலும் கடன் வாங்குகிறார்கள். ஏனென்றால் வரிச்சலுகை கிடைக்கிறது. இதனால் யாருக்கு பணம் போக வேண்டுமோ அவர்களுக்குப்போகாமல், அதிகம் இருப்பவர்களுக்கே இத்திட்டம் பயனளிக்கிறது.

KYC Norm Implementation படி கடன் பெறுபவரின் பெயர், விலாசம், வேலை இப்படி பல விவரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்படவேண்டும். கடன் விண்ணப்பத்தைப்பார்த்தால் எல்லாம் சரியாக இருக்கும். ஆனால் பணம், கட்டவேண்டிய தேதிகளில் வந்திருக்காது. ஏனென்று பார்த்தால் முதலில் கொடுத்த விலாசத்திலிருந்து காலி செய்துவிட்டு ஊரை விட்டே சென்றிருப்பார்கள் பெற்றோர்களுடன். இவர்களை எங்கே சென்று கண்டு பிடிப்பது…?

சரி, அப்போதே வங்கியிலிருந்து போய் செக் பண்ணியிருக்கலாமே?

அப்படி சரிபார்க்க  செல்லும் வங்கி ஊழியருக்கு டிஏ, சாப்பாடு, அலவன்ஸ் கொடுக்க வேண்டியதிருக்கும், மேலும் ரொடேஷனில் சென்றால் கூட இந்த வேலையை மட்டுமே பார்க்க முடியுமே தவிர, வேறு வேலை செய்ய முடியாது. மற்ற வங்கி வேலைகளை யார் கவனிப்பது? இந்த அலவன்ஸ், டிஏ முதலியவையும் கடனில் ஏற்றப்படும். கடன் சுமை ஏறினாலும் அது கட்டப்படாததால் வங்கிதான் அந்தச்சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இலவசமாக எந்த உழைப்பும் இல்லாமல் கிடைக்கும் பணத்திற்கு மதிப்பு குறைவு. அதை திரும்ப செலுத்தவேண்டும் என்ற நினைப்பும் குறைவாகவே இருக்கிறது.

இவற்றை மனதில் கொண்டு கல்விக்கடன் திட்டத்தில் தக்க மாறுதல்கள் கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்கின்றன வங்கிகள். அதே சமயம் 'விஜய மல்லையா போன்றவர்களுக்கு வாரி வாரி கடன் வழங்கியபோதும்  இதே கறார் தன்மையையும், மாறுதல்களையும் வங்கிகள் கடைப்பிடித்திருக்கலாமே...?' என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


No comments:

Post a Comment