'தங்கம் மாதிரி ஏறிக்கிட்டே இருக்கு பெட்ரோல் விலை.’ பெட்ரோல் விலையேறும் நாட்களில் டீக்கடை பெஞ்சுகளில் இந்த வசனத்தை கேட்கலாம். தங்கத்தின் விலையில்கூட சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், பெட்ரோல் விலை... 'வாய்ப்பே இல்லை’ என்கிறார்கள்
இந்த நிலையில் பெட்ரோல் - டீசலுக்கு மாற்றாக, உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே வாகனங்களை இயக்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. தாவர எண்ணெய்களில் மோட்டார்களை இயக்கும் முறையும் பரவலானப் பயன்பாட்டில் இருக்கிறது. இதில், திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் இணைந்து, 'கோபர் கேஸ்’ எனப்படும் சாண எரிவாயு மூலமாக பைக்கை இயக்கிக் காட்டினர். நம்மிடம் பேசிய நால்வர் அணியின் கேப்டனான ரெகு, ''நான், என்னோட ஃப்ரெண்ட்ஸ் மார்ஷல், வெங்கடேஷ், கோபிநாத் நாலு பேரும் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில இந்த வருஷம்தான் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் முடிச்சிருக்கோம். இது எங்க ஃபைனல் இயர் புராஜெக்ட். பெட்ரோலுக்கு மாற்றா விலை குறைஞ்ச, சுற்றுச் சூழல் மாசுபாடு குறைஞ்ச ஒரு எரிபொருளைக் கண்டுபிடிக்க நினைச்சோம். அப்பதான் கோபர் கேஸைப் பயன்படுத்துற ஐடியா வந்தது. பக்கத்து ஊர்ல கோபர் கேஸ் போட்டிருந்த ஒருத்தர்கிட்ட கேட்டு, அந்த கேஸை எங்க ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திகிட்டோம்'' என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மார்ஷல், ''இந்த பைக்குல பெட்ரோல், எல்.பி.ஜி, சாண எரிவாயு - இது மூன்றையும் பயன்படுத்தி ஓட்டலாம். சாண எரிவாயு டேங்க்குல இருந்து கேஸை எடுத்து, கம்ப்ரஸ் பண்ணி பைக் டேங்க்குல ஃபில் பண்றோம். அதுல, அசிட்டலின் கேஸை 1:1 விகிதத்துல கலந்து பயன்படுத்துறோம். கார்பைட் கல்லை தண்ணியில போட்டதும் ஒரு கேஸ் வெளியாகும்; அதுதான் அசிட்டலின் கேஸ். இது ரெண்டையும் மிக்ஸ் பண்ணி, பைக்குல இருக்கிற டேங்க்குல நிரப்பிடுவோம். 100 மில்லி கேஸ் நிரப்புனா 7 கிலோ மீட்டர் போகும். இதுக்காக வாக்யூம் கிட் வெச்சிருக்கோம். இது சரியான அளவுக்கு கேஸை கார்புரேட்டருக்கு அனுப்பும். கார்புரேட்டர்ல கேஸ், ஏர் ரெண்டும் மிக்ஸ் ஆகி, இன்ஜின்ல ஃபயர் உண்டாகி பைக் ஓடும்.
இந்த டேங்க்ல 100 மில்லி கேஸ்தான் பிடிக்கும். அதே நேரத்துல சாண எரிவாயுவை, திரவமா மாத்தி நிரப்புனால் 3 கிலோ பிடிக்கும். அதை வெச்சு 300 கிலோ மீட்டர் பைக்கை ஓட்டலாம். சாண எரிவாயுவை திரவ நிலைக்கு மாத்தினா அசிட்டலின் கேஸ் தேவையில்லை. வெறும் சாண எரிவாயு மட்டும் பயன்படுத்தி பைக்கை ஓட்டலாம்.
சாண எரிவாயுவைப் பயன்படுத்தி 4 ஸ்ட்ரோக் இன்ஜினை மட்டும்தான் இயக்க முடியும். 2 ஸ்ட்ரோக் இன்ஜினை ஓட்ட தனியா ஆயில் பம்ப் ஃபிட் பண்ணணும். சாண எரிவாயு டேங்கை பைக்குல அமைக்க 2,500 ரூபாய்தான் செலவாகும். சாண எரிவாயுவை கம்ப்ரஸ் பண்ணி திரவ நிலைக்கு மாத்தினா, பொது பயன்பாட்டுக்கு வந்திடும். அப்படி வந்தா, ஒரு கிலோ கேஸுக்கு 85 பைசா மட்டும்தான் செலவாகும். திரவநிலைக்கு மாத்த நிறைய பணம் செலவாகும். பெரிய யூனிட் வேணும். எங்ககிட்ட அதுக்கான தொழில்நுட்பம் இருக்கு... ஆனா, பணமும், யூனிட்டும் இல்லை.
இப்ப எங்க கண்டுபிடிப்பை காப்பீடு செய்றதுக்கான முயற்சியில இருக்கோம். நல்ல ஸ்பான்ஸர் கிடைச்சா திரவ நிலைக்கு மாத்தி, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கிற எரிபொருள் செலவைக் கணிசமா குறைச்சிடலாம். அதுவுமில்லாம இந்த கேஸ்ல பைக் ஓட்டும்போது வர்ற புகையில் கார்பன் ரொம்ப கம்மியா இருக்கும். அதனால, சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும்'’ என்றார்.
நல்ல முயற்சிதான்!
No comments:
Post a Comment