முதல் நாள் கோட் போட்டு டாஸ் போட்டுவிட்டு, வெள்ளை உடையில் ஐந்து நாட்கள் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் 'டொக்’ வைத்துக் கொண்டே இருப்பதுதான் 'டெஸ்ட் கிரிக்கெட் போட்டி’களின் இலக்கணமாக இருந்தது... ஷேவாக் வரும் வரை. ஷேவாக் வந்தார்... களம் அதகளமாகிவிட்டது!
டெஸ்ட் போட்டிகளிலும் இவ்வளவு ஆக்ரோஷம் காட்ட முடியும், இத்தனை பவுண்டரிகள் வெளுக்க முடியும், சிக்ஸர் தெறிக்கவிட முடியும் என ஆச்சர்யப்படுத்தியவர் ஷேவாக். ஆனால், மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்காது என உணர்ந்ததும், 37 வயதில் ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார்.
சச்சினுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஷேவாக் களம் இறங்கி விளையாடியபோது, 'யார்றா இவன் சச்சின் மாதிரியே விளையாடுறான்!’ என ஆச்சர்யம் ஏற்படுத்தி பின்னர், 'யார் சாமி இவன்... சச்சினையே தூக்கிச் சாப்புடுறான்?’ என மிரளவைத்தவர். ஷேவாக்கின் ஸ்கோர் 0-வில் இருந்தாலும் சரி, 99-ல் இருந்தாலும் சரி, 295-ல் இருந்தாலும் சரி... அவரது பேட், பந்தைப் பதம் பார்க்குமே தவிர பணியாது!
2001-ம் ஆண்டில், காயம் காரணமாக சச்சின் இந்திய அணியில் இல்லை. கங்குலியுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக யாரைக் களம் இறக்குவது எனக் குழம்பி, கடைசியாக ஷேவாக்கை இறக்கினார்கள். இலங்கையில் நடந்த போட்டியில் நியூசிலாந்து முதலில் களமாடி 260 ரன் குவித்தது. சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான, மிகவும் ஸ்லோவான பிட்ச்சில் அந்த ஸ்கோர், 350 ரன்களுக்கு நிகரானது. கங்குலியுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய ஷேவாக் 69 பந்துகளில் 100 ரன்கள் திரட்டி 'மேட்ச் வின்னராக’ மிளிர்ந்தார். அதற்குப் பிறகு இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் இடம் ஷேவாக்குக்கு என ஒதுக்கப்பட்டுவிட்டது!
பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானின் முல்தானில் டெஸ்ட் போட்டி. இந்திய வீரரின் அதிகபட்ச ரன்னான லக்ஷ்மணின் 281 ரன்களைத் தாண்டி பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறார் ஷேவாக். மறுமுனையில் சச்சின்.
295 ரன்னில் இருக்கும்போது சச்சினிடம் வந்து, 'அடுத்த ஓவரில் சக்லைன் முஸ்தாக் எப்படிப் பந்து வீசினாலும் சரி, கிரீஸைவிட்டு இறங்கி வந்து சாத்துவேன்’ எனச் சொல்லிவிட்டுப் போனாராம் ஷேவாக். 295 ரன்களில் இருக்கும்போது சச்சின் கனவிலும் அப்படியான ஷாட் யோசிக்கவே மாட்டார். ஆனால், சொன்னதுபோல இறங்கிவந்து சிக்ஸர் விரட்டி முதல் முச்சதம் அடித்த இந்தியராக வரலாற்றில் பதிவானார் ஷேவாக். ஆனாலும் அந்தப் போட்டியில் 'வேகமாக முச்சதம் அடித்த வீரர்’ என்ற மேத்யூ ஹேடனின் சாதனையை இரண்டே பந்துகளில் தவறவிட்டிருந்தார். அந்தக் குறையும் விரைவில் நிவர்த்தியானது.
2008-ம் ஆண்டு மார்ச் மாதம். சென்னையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி. சென்னை மைதானம் என்பது முதல் இரண்டு நாட்களுக்கு பேட்டிங்குக்குச் சாதகமாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு பந்துவீச்சுக்குச் சாதகமாகவும் மாறும் தன்மைகொண்டது. முதல் இரண்டு நாட்கள் ஆடிய தென் ஆப்பிரிக்கா 540 ரன்கள் குவித்து இந்தியாவிடம் பேட்டிங்கை ஒப்படைத்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கினார் ஷேவாக். ஆரம்பம் முதலே பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாகத் தெறிக்கவிட்டு, 278 பந்துகளில் 300 ரன்கள் அடித்து குறைந்த பந்துகளில் முச்சதம் என உலக சாதனை படைத்தார். அதில் 42 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். அதாவது பவுண்டரிகளாலும் சிக்ஸர்களாலும் மட்டுமே 198 ரன்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட 11 டபுள் செஞ்சுரிகளில் 5 ஷேவாக்குக்குச் சொந்தம்.
டெஸ்ட் தொடருக்காக இலங்கை சென்ற இந்திய அணியை முத்தையா முரளிதரன் - அஜந்தா மெண்டீஸ் சுழல் கூட்டணி நிலைகுலையச் செய்தது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்த இருவர் கூட்டணி மட்டும் 47 விக்கெட்டுகளைச் சாய்த்தது. ஆனால், ஆறு இன்னிங்ஸில் ஒரே ஒருமுறை மட்டுமே முரளிதரனால் ஷேவாக்கின் விக்கெட்டை வீழ்த்த முடிந்தது. அஜந்தா மெண்டீஸால் இறுதி வரை ஷேவாக்கின் விக்கெட்டைப் பறிக்க முடியவே இல்லை. காலே டெஸ்ட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய ஷேவாக், 11-வது பேட்ஸ்மேனாக இறங்கிய இஷாந்த் ஷர்மா வரை இணைந்து விளையாடினார். அந்த டெஸ்ட்டில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக 201 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றிபெறக் காரணமாக இருந்தார். அந்தத் தொடரில் ஷேவாக்கின் பேட்டிங் ஆவரேஜ் 62. 'சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான மைதானத்தில், உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை எப்படி இவ்வளவு அநாயசமாக அடித்து ஆடினீர்கள்?’ என ஷேவாக்கிடம் கேட்டார்கள். 'ஸ்பின்னர் என்பவர் பேட்ஸ்மேனால்தான் உருவாகிறார். ஒரு பந்து சுழல்வதற்கு முன்பே பேட்ஸ்மேன் அதை அடித்துவிட்டால், அப்புறம் ஏது சுழற்பந்து? பந்து சுழல்வதற்கு முன்பாகவே தூக்கி கிரவுண்டுக்கு வெளியே அடித்தால், ஒருவர் எனக்கு வாழ்நாள் முழுக்க ஸ்பின்னே போட மாட்டார்’ என்றார் ஷேவாக். அதுதான் அவர் கெத்து... கிரிக்கெட்டில் அவர் சொத்து!
கிரிக்கெட்டின் மிகச் சிறந்த என்டர்டெய்னர், மேட்ச் வின்னர்... சந்தேகமே இல்லாமல் ஷேவாக்தான். சச்சின், கங்குலி, டிராவிட் என 'கிளாசிக் மாஸ்டர்’களுக்கு நடுவே, 'என் வழி... தனி வழி’ என உலகத்தை வசியம்செய்தவர். எதிர் அணி வீரர்களின் பலம் பற்றி யோசிக்காமல், தன் பலத்தை எந்தச் சூழ்நிலையிலும் முழுமையாகப் பிரயோகித்தவர். அதிரடி வியூகம் வகுப்பதில் அவர் ஒரு ஜீனியஸ். இனி ஒருவர் ஷேவாக் ஸ்டைலில் கிரிக்கெட் விளையாடவே முடியாது. அந்த அளவுக்கு ஷேவாக் என்பது பெரும் கனவு; அது சீக்கிரமே முடிந்துபோனதுதான் பெரும் வருத்தம்!
No comments:
Post a Comment