சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Nov 2015

'ஒரு வேலையும் செய்யலை... சஸ்பெண்ட் செஞ்சாத்தான் சரிப்படுவீங்க!'- டென்ஷனான அதிகாரி

"ஒரு வேலையும் உருப்படியா செய்யலை. உங்களை எல்லாம் சஸ்பென்ட் செஞ்சாத்தான் சரிப்படுவீங்க போல!" என்று ராமநாதபுரத்தில் வெள்ள நிவாரண பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி விஜயகுமார்,  அதிகாரிகளை ஒரு பிடி பிடித்தார்.
தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பாதிக்குள்ளாகும் மக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் வெள்ள நிவாரண பணிகளை கண்காணிக்க தமிழக மீன்வளத்துறை இயக்குனர் விஜயகுமார் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் நிவாரண பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சுந்தர்ராஜ், மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
ராமேஸ்வரம் பர்வர்தவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு மையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், ''ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைப்பதற்காக 37 வரவேற்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அழைத்து வரப்படும் மக்களுக்கு உணவு, வேட்டி சேலை, படுக்கை விரிப்புகள், குடிநீர் வசதி போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வரவேற்பு மையங்களில் தங்கியிருப்போருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கும் தனி டீம் உருவாக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் மழை காலங்களில் தேவைப்படும் அவசர உதவிகள் குறித்து 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்" என்றார்.
இதன் பின் வேர்க்கோடு கடற்கரை பகுதி அருகே உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு மையத்திற்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சென்று செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை பார்வையிட்டனர். அங்கு உணவு தயாரிப்பதற்கான பொருட்களோ, பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண பொருட்களோ வைக்கப்படாததை  கண்ட சிறப்பு அதிகாரி விஜயகுமார், ராமேஸ்வரம் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளை அழைத்து இது குறித்து விசாரித்தார். அவர்கள் உரிய பதில் சொல்லாததால் டென்ஷன் ஆனார். ''ஒரு வேலையும் உருப்படியா செய்யலை. உங்களை எல்லாம் சஸ்பென்ட் செஞ்சாத்தான் சரிப்படுவீங்க போல. உடனே எல்லா பொருட்களையும் ஏற்பாடு செய்யுங்க’’ என அதிகாரிகளை ஒரு பிடி பிடித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் விஜயகுமார் கூறும்போது, ''மாவட்டத்தில் மழையினால் ஏற்படும் சேதங்களை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கமும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து மழையுடன் கூடிய காற்றும் வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ராமநாதபுரத்தில் தங்கியிருந்து மழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க உள்ளேன்" என்றார்.

இதனிடையே பாம்பன் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. பாம்பன் கடலின் மேல் அமைந்துள்ள ரயில் பாலத்தின் துவக்கத்தில் ஆக்ரோஷமான அலைகள் அடிக்கின்றன. இதனால் பாலத்தில் செல்லும் ரயில்களின் வேகம் வழக்கத்தைவிட குறைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment