சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Nov 2015

வெள்ளத்திற்கு என்ன காரணம்? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ழக்கமாக பெய்யும் பருவமழைதான் என்றாலும், வீடுகளும், சாலைகளும் வெள்ளத்தில் மிதப்பதால் வரலாறு காணாத மழையாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துக் கொண்டது  மழை. கடந்த சில தினங்களாக  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பெரும்பகுதிகள் மழைநீரில் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன. 

வெள்ளத்திற்கு காரணம் சரியான வடிகால் வசதி இல்லை என்பதே பெரும்பாலோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால் சரியான வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலும் வெள்ளம் தொடரும்... காரணம் பிளாஸ்டிக்! வெள்ளம் வடிந்த பகுதிகளில் இந்த உண்மையை உணர முடியும்!
ஏரிகளில் பிளாஸ்டிக்!

ஒவ்வொரு நீர் நிலைகளிலும் டன் கணக்கில் குப்பைகள் இருக்கின்றன. மக்கும் குப்பை, மக்காத குப்பை என எதுவாக இருப்பினும், ஏரிகள்தான் நமக்கு குப்பைதொட்டி. சரியான திடக்கழிவு மேலாண்மை தமிழகத்தில் இல்லாததால், குப்பைகள் வருடக்கணக்கில் ஏரிகளில் கொட்டப்பட்டு வருகின்றன. மக்காத குப்பைகளான கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஏரியின் மேற்பரப்பில் இருப்பதால், மழை நீரை பூமிக்குள் வேகமாக உறிஞ்சும் திறனை ஏரிகள் இழந்துவிட்டன. இதனால் ஏரிகள் நீரை அதிக அளவு வெளியேற்றுகின்றன.

ஓடைகளில் பிளாஸ்டிக்!


ஏரி, குளம் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் மழைநீர், வேகமாக செல்ல முடியாத அளவிற்கு கட்டடங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. மீதமுள்ள குறுகிய பாதையில் புதர்களும், குப்பைகளும் உள்ளன. நீர் ஓடைகளில், நாம் கொட்டிய பிளாஸ்டிக் பொருட்கள் ஆக்கிரமித்து உள்ளன.
பலவருடங்களாக பயன்படுத்தி வீசிய பிளாஸ்டிக் பைகள் மக்காமலேயே ஓடைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் பிளாஸ்டிக் பைகள்  அடித்துச் செல்லப்படும் போது, மரங்களிலும், புதர்களிலும் சிக்கி மழைநீர் வடியும் வேகத்தை குறைத்துவிட்டன. இதனால் மழைநீர் வடியும் வேகம் குறைந்து விடுகின்றது. அவை குடியிருப்பு பகுதிகளில் உட்புக ஆரம்பித்துவிட்டது. 

கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக்!

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி போன்ற இடங்களில், கழிவுநீர் கால்வாய்கள் முழுக்கவே பிளாஸ்டிக் பைகள் நீரின் போக்கை தடுத்து நிறுத்திவிடுகின்றன. பிளாஸ்டிக் பைகள் கால்வாய்க்குள் புகுந்து கொள்வதால்,  நீர் வெளியேற்றப்படாமல் சாலைகளில் நீர் மட்டம் உயர ஆரம்பித்துவிடுகின்றன. எந்த நகராட்சியும் குப்பைகளை சரியாக பராமரிப்பது கிடையாது. வீட்டில் கழிவு நீரை வெளியேற்றும் பைப் லைன் முதல் ஆற்றில் வெளியேற்றும் நீர் வரை பிளாஸ்டிக் பொருட்கள் அடைப்பு அதிகம்.
நிறையாத குளங்கள்!

ஆறுகளிலும், ஏரிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிறையவே இல்லை. காஞ்சிபுரத்தில் உள்ள ரங்காசாமி குளம், வைகுண்ட பெருமாள் கோவில் குளம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள சங்குதீர்த்த குளம் என மாவட்டத்தில் பெரும்பாலான குளங்களில் தண்ணீர் செல்லமுடியாத நிலையில், குளத்திற்கு வரும் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் வீதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. 

பிளாஸ்டிக் குப்பையை என்ன செய்யலாம்?

ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் திட்டமிடப்பட்ட வடிகால் வசதிகள் இருந்தாலும், குப்பைகள் அங்கே வீதிகளில் கொட்டப்படுவதில்லை. ஸ்வீடன் போன்ற நாட்டு மக்கள் சுற்றுச் சூழழை மிகவும் நேசிக்கின்றார்கள். ஸ்வீடன் மக்கள் குப்பைகளை தரம் பிரித்துதான் கொட்டுவார்கள். ஸ்வீடனில் மக்கும் குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள், மருத்துவக்கழிவு, அபாயகரமான கழிவுகள், உணவுக்கழிவுகள், உலோகக்கழிவுகள் என 8 வகைகளாக குப்பைகளை பிரித்து சேகரிப்பார்கள். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவார்கள். 
பெரும்பாலான நாடுகளில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள், இயந்திரம் மூலம் அரைக் கப்பட்டு, தார்சாலைக்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. 10 சதவீத அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகளை தாரில் சேர்த்து சாலைகள் அமைத்தால் தரமாக இருக்கும். பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். மேலும் நிலத்தடி நீரின் அளவையும் உயர்த்த முடியும்.

பிளாஸ்டிக் தடை

நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் பெயரளவில் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பிளாஸ்டிக் பைகள் விற்பனையாகின்றன. ஏரிகளிலும், ஆறுகளிலும் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கடலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. மீனவர்கள் கடலில் வலையை விரித்தால், பிளாஸ்டிக்கைதான் அள்ளி வரமுடிகிறது.
சாப்பிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர்கள், கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாக்கெட்டுகள், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பேக்கிங் போன்றவற்றை அரசு தடை செய்ய வேண்டும். 

பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் முறையை நமது அரசு செய்வதில்லை. திடக்கழிவு மேளாண்மை மூலம் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதால் குப்பைகளை குறைக்கலாம். சுற்றுச்சூழல் பாதிப்பையும், வெள்ளம் போன்ற அபாயங்களையும் பெருமளவு தவிர்க்கலாம். தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற வெள்ள அபாயங்களை தவிர்க்க முடியும்! 

No comments:

Post a Comment