சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Nov 2015

கனமழையில் வெளுத்த கழக அரசுகளின் சாயம்!

புயல், ழை வெள்ளத்தால் தமிழகம் தத்தளித்துக்கொண்டிருக் கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு தமிழகம் சேதாரத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஏரி கால்வாய் தூர் வாராதது, மராமத்துப் பணிகளில் சுணக்கம் காட்டியது உள்ளிட்ட மெத்தனங்களுக்கெல்லாம் அரசு இப்போது கையை பிசைந்துகொண்டிருக்கிறது. 

அடுத்து உடையப்போவது இந்த ஏரியா அல்லது அந்த ஏரியா என பதற்றம் கூடிக்கிடக்க, பார்த்து பார்த்து கட்டிய வீட்டை சாத்திவிட்டு தெருவில் பரிதவிப்போடு நிற்கிறார்கள் மக்கள். 

தமிழக முதல்வர் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பான தன் காரில், 10 பாதுகாவலர்கள் புடைசூழ தன் தொகுதிக்கு வந்து  'ஆறுதல்' அளிக்கும் உரையை ஆற்றிவிட்டு சென்றுவிட்டார்.
பெருந்திரளான மக்களை பார்த்ததாலோ என்னவோ தன் உரையில் 'எனதருமை வாக்காளர்களே' என அவர்களை விளித்திருக்கிறார். தான் கொடுத்த நிவாரணத்திற்கு நன்றிக்கடனாக வரும் தேர்தலில் தன் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என நினைவுபடுத்திச் சென்ற அவரது அரசியல் 'சாதுர்யம்' வியப்பை ஏற்படுத்துகிறது. 

மழை வெள்ள பாதிப்பு பற்றி பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டாலும், முதல்வரை அது பாதித்தது என்னவோ அவரது தொகுதிமக்கள் அல்லலுற்றபோதுதான். ஓடோடி வந்தார். தன் தொகுதி மக்களை பார்க்க வந்த அவர், அப்படியே அருகிலிருந்த மற்ற பகுதிகளுக்கும் சென்றது ஆச்சர்யம்.  காரின் கண்ணாடியைக் கூட திறக்காமல் உள்ளிருந்தபடியே மைக்கில் பேசிச் சென்ற ஜெயலலிதா, தன்னை பார்க்க வந்த மக்கள் அதன்பின் எந்த உறவினரின் வீட்டில் போய் தஞ்சம் அடைந்திருப்பார்கள் என பயணத்தின் எந்த கணத்திலாவது சிந்தித்திருப்பாரா எனத் தெரியவில்லை. 

மழை சேதம் பற்றி கருத்துச் சொன்ன அவர், 'மழை பெய்தால் சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாது' என கூறியிருக்கிறார். இக்கட்டான இந்த தருணத்தில் கூட அவரால் அக்கறையான வார்த்தைகள் வெளிப்படுத்த முடியவில்லை.

ஆளும் கட்சியை வசைபாட சரியான தருணம் இது என்பதால் முட்டிவரை மூடிய பூட்ஸ்கள் , தலை தவிர உடம்பின் அத்தனை பாகங்களையும் மறைத்த மழைக்கோட்டு சகிதம் 'நமக்கு நாமே' அடுத்த கட்ட படப் பிடிப்புக்கு வந்ததுபோல், இருப்பதிலேயே இயல்பான பகுதி எது எனக்கேட்டு மழை நின்ற ஒரு தருணத்தில் வந்த ஸ்டாலினும் தன் பங்குக்கு கொஞ்சம் உணவுப்பொருட்களை கொடுத்துவிட்டு போய்விட்டார்.
பாதுகாவலர்களுடன் வந்து கண்ணீர் சொறிந்த ஜெயலலிதாவும், மழைக்கோட்டுடன் வந்து மக்களை சந்தித்த ஸ்டாலினின் திமுகவும்தான் கடந்த கால்நுாற்றாண்டுகளுக்கு மேலாக அரசியலையும், அதிகாரத்தையும் சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக தாங்கள் வந்து நலத்திட்ட உதவிகளை தந்துவிட்டு செல்வது தாங்கள் ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கிற தமிழகம்தான் என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இருந்திருக்காது. 

அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆண்டும் ஒரு கனமழைக்கு கூட தாங்காத அளவுக்கு தமிழகத்தை வைத்திருக்கிற காட்சியை கண்டபோது நிச்சயம் கூனிக்குறுகிப்போயிருப்பார்கள் ஒரு கணம். ஆனால் வெளிக்காட்டியிருக்கமாட்டார்கள். காரணம் அவர்கள் திரையுலகைச் தேர்ந்தவர்கள். 

தமிழகத்திற்கு வெள்ளம், மழை, புயல் என்பது புதிதா இல்லை ஆட்சியாளர்கள் கவனத்திற்கு வந்திருப்பது இதுதான் முதன்முறையா? மக்களின் மீது நிஜமான அக்கறையுள்ள ஆட்சியாளர்களாக இவர்கள் இருந்திருந்தால், கடந்த காலங்களில் கற்ற பாடத்திற்கு தக்கபடி சரியான முன்னேற்பாடுகள் செய்திருக்கவேண்டாமா?
கடலூர் மற்றும் சிதம்பரத்தில் பெய்த மழையால் கடலூர் மாவட்டம் மீட்க இயலாத நட்டத்தை சந்தித்திருக்கிறது. இந்த மாவட்டத்தில், மழை நீரை ஆறுகளுக்கு கொண்டு செல்லும் கால்வாய்களில் 40 விழுக்காடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. 

ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் ஆறுகளில் கலக்க வகை செய்யப்பட்டிருந்தாலே கடலுார்  மாவட்டம் கலக்கம் அடையாமல் இருந்திருக்கும். ஆனால், அதிகாரிகள் அதை செய்யாததற்கு காரணம் ஆக்கிரமிப்பாளர்களின் கார்களில் பட்டொளி வீசி பறக்கும் கட்சிக்கொடி. இதில் பலர் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் என்கிறது எதிர்க்கட்சிகள் தரப்பு. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியை கூட அதிகாரிகள் பார்வையிடாததன் விளைவு,  கடலுாரில் புழு வைத்த அரிசியை மக்களுக்கு வழங்கிச் சென்றார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவர்களின் கவலையெல்லாம் அம்மாவின் பார்வையில்படும்படி பத்திரிக்கைகளில் இடம்பெறும் தங்கள் புகைப்படம் பளிச் என புகைப்படக்காரர்களால் எடுக்கப்படுகிறதா என்பதுதான்.
மழை வெள்ள பாதிப்புக்குள்ளான இந்த நேரத்திலும் அதிகாரிகள், தங்கள் ராஜவிசுவாசத்தை காட்டுவதில் முனைப்பு காட்டுவது வேடிக்கையான வேதனை. உச்சகட்டமாக, வெள்ள நிவாரணம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சேலம் ஆட்சியர் சம்பத், “மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் உத்தரவின்படி சேலம் மாவட்டத்தில் அதிக அளவு மழைபெய்துள்ளது" என்றிருக்கிறார். விசுவாசத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் மல்லுக்கட்டும் இதுபோன்ற அதிகாரிகள் பற்றி என்ன சொல்வது ? 

இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனமான நடவடிக்கையே காரணம் என்கிறார்கள். காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை உணர்ந்து, அபாயகரமான தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தால் குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
கடலுார் மாவட்டத்தில் பல லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர், வாழை, மணிலா, மரவள்ளி ,அரும்பு, சவுக்கு மற்றும் காய்கறிகள் போன்றவை அழிந்துபோய்விட்டன. நெற்பயிர் மரவள்ளி அரும்பு இவற்றுக்கு தலா 25 000 ரூபாயும், கரும்பு, வாழை, சவுக்கு, முந்திரி இவற்றுக்கு தலா ஒண்ணரை லட்சமும் மற்றும் ஆடு மாடுகளுக்கு தக்கபடி 5000, 10000 என தரும்படி அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 

மற்றநேரங்களைப்போல் அல்லாமல் உயிர்ப்போராட்டத்திற்கு ஈடான இந்த நேரத்திலாவது விவசாயிகள்தானே என அரசு ஒதுங்கிக்கொள்ளாமல் ஆவண செய்யவேண்டும். 

சென்னையின் நிலை இன்னும் மோசம். சென்னை 125 ஐக் கொண்டாடி அதன் உற்சாகம் குறையாத சில மாதங்களிலேயே ஒருநாள் பெய்த மழைக்கு சென்னையின் சில பகுதிகள் மூழ்கிவிட்டன. அதிக பாதிப்புக்குள்ளான வேளச்சேரி, முகப்பேர், அம்பத்தூர் ஆகிய பகுதிகள் நீர்நிலைகளை தூர்த்து உருவாக்கப்பட்டவை.

இப்படி சென்னை பெருநகர பகுதியின் 40% முறையான திட்டமிடல் இல்லாமல் உருவாக்கப்பட்டவை. அரசின் இந்த அலட்சியம்தான் மக்கள் தெருவுக்கு வந்து உணவுக்கு வரிசைகட்டி நிற்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது இப்போது.

ஒருவேளை இந்த நகரங்கள் உருவாக்கப்பட்ட பகுதிகளைத் தவிர நீர்நிலைகளின் மற்ற பகுதிகள் தூர்வாரப்பட்டு, அவற்றின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டிருந்தால் இந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதை தவிர்த்திருக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். அறிஞர் பெருமக்களை கொண்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தும் அரசுக்கு இந்த யோசனையை எந்த நிபுணரும் தரவில்லையா அல்லது அப்படி ஒரு நிபுணர் அந்த ஆய்வுக் கூட்டத்திற்கு வரவில்லையா அல்லது ஆய்வுக் கூட்டங்களில் தரப்பட்ட முந்திரி பக்கோடா அவர்களை மயக்கத்திற்குள்ளாக்கிவிட்டதா?
இதுமட்டும்தான் அரசு காட்டிய அலட்சியங்களா...? இன்னும் இருக்கிறது...

பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் புதிதாக மழைநீர் வடிகால்களை உருவாக்குவதற்கான எல்லைக்கோட்டு வரைபடங்களை (Contour Maps) சென்னை அண்ணா பல்கலைக்கழக தொலையுணர்வு மையம் தயாரித்துக் கொடுத்தது. தேர்ந்த நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட அந்த வரைபடங்களை அரசு கண்டுகொள்ளவே இல்லை. 

ஒருவேளை அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு, அரசு அதற்கு முக்கியத்துவம் தந்திருந்தால் சென்னையில் நீர்மூழ்கி பேருந்தை பார்க்கும் அவலம் நேர்ந்திருக்காது. முறையான வடிகால் வசதி சென்னை மக்களை நாடோடிகளாக்கி இருக்காது. உள்ளாட்சி அமைப்புகள், மக்களின் நன்றிக்குரிய பட்டியலில் இடம்பெற்றிருக்கும். 

48 செ.மீ. மழைக்காக 40 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோயிருக்காது. பல நுாறு கோடி அளவு இழப்புக்கு தமிழகம் உள்ளாகியிருக்காது.
மேலும் நீர்நிலைகள், பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கித் தந்த Chennai Second Master Plan என்ற இரண்டாவது பெருந்திட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், அரசியல் லாவணி பாடிக்கொண்டிருந்த அ.தி.மு.க. அரசோ, முந்தைய தி.மு.க அரசோ அதை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல ஆய்வுகளை நடத்தி அரசுக்கு வழங்கிய பல முக்கிய திட்டங்கள் எதுவும் இன்னும் நடைமுறைப்படுத்தும் நிலைக்கு கூட வரவில்லை. தமிழகத்தில் தண்ணீரில் வீடுகளும், கண்ணீரில் மக்களும் மிதக்க காரணமான ஆட்சியாளர்களின் கடந்த கால அணுகுமுறை இதுதான். 

எல்லா செயல்பாடுகளிலும் கருத்து முரண்பட்டு நிற்கும் திமுகவும் அதிமுகவும் ஒன்றுபட்டு நிற்கிற ஒரே விஷயம் மேற்சொன்ன 'மக்கள் சேவை' தான். 

மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிற இந்த நேரத்திலும், வழக்கம்போல் நேற்று புதிதாக முளைத்த கட்சியைப்போல் அரசு மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டிருக்கிற திமுகவின் செயல், மக்களால் பரிதாபமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் இன்றைய இந்த நிலைக்கு அதிமுக திமுக என 2 கட்சிகளை யும் காரணமாக சொல்லியிருக்கிற பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் இந்த 2 கட்சிகளும் மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததன் விளைவுதான் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்று கனல் கக்கியிருக்கிறார்.
மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க சிறு துரும்பை கூட நகர்த்தாமல், எல்லா பாதிப்புகளுக்கும் இயற்கை மீது பழி போட்டு தப்பிக்க முயல்வது பொறுப்பற்றத்தனம் என ஜெயலலிதா மீது சீற்றம் காட்டி தன் அறிக்கையை முடித்திருக்கிறார் அவர்.

பெரிய அறிஞர்களோ அல்லது நிபுணர்களோ அல்லாத விகடன் வாசகர்கள் பலரும் பல மாதங்களுக்கு முன்பே மழை வந்தால் ஏற்படக்கூடிய தமிழகத்தின் நிலவரத்தை ( வாசகர் பக்கம் பகுதியில் ) படம்பிடித்துக்காட்டியிருந்தார்கள். சாமானியர்கள் கொடுத்த குறைந்தபட்ச எச்சரிக்கையை மதித்திருந்தால் கூட தமிழகத்தை கொஞ்சம் காத்திருக்கலாம்.
ஆனால் அதற்கு தமிழகத்தின் மீது நிஜமாக அக்கறை கொண்ட காமராஜர்கள் வேண்டும். அந்த அதிர்ஷ்டம் தமிழர்களுக்கு வாய்க்க இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆகுமோ? 


No comments:

Post a Comment