சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Nov 2015

ஒருநாள் இரவில் - படம் எப்படி?

சிங்கப்பூர் சென்று கைநிறையப் பணம் சம்பாதித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கும் சத்யராஜூக்கு, கல்லூரியில் படிக்கும் மகள் தீக்ஷிதா நண்பருடன் இருசக்கரவாகனத்தில் வருவதைப் பார்த்ததும், காதலோ என்று சந்தேகம். உடனே மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருமண ஏற்பாட்டில் இறங்குகிறார். மனைவி கல்யாணிநடராஜன் அதைக் கடுமையாக எதிர்க்கிறார். இதனால், நம்மை நம் குடும்பம் புரிந்துகொள்ளவில்லையே என்று மனம் புழுங்கும் சத்யராஜ், நண்பர்களுடன் சேர்ந்து மதுக்குடிக்கிறார். மதுவின் போதையும் மனதின் புழுக்கமும் சேர்ந்துகொள்ள, பாலியல்தொழிலாளி அனுமோலை நாடுகிறார். அவருக்கு ஆட்டோஒட்டுநரான அறிமுகநடிகர் வருண் உதவிசெய்கிறார்.
அவர் வீட்டுக்கு முன்வரிசையில் உள்ள அவருக்குச் சொந்தமான கடையொன்று காலியாக இருக்கிறது. விடுதிகளில் பாலியல்தொழிலாளியுடன் தங்கப்பயப்படும் மத்தியதரவர்க்க மனநிலையின் காரணமாக காலியாக இருக்கும் கடையையே பயன்படுத்த முடிவுசெய்கிறார் சத்யராஜ். பக்கத்துக்கடைக்காரர்கள் எல்லாம் கடையை மூடிவிட்டுச் செல்லும்வரை காத்திருந்து அந்தக்கடைக்குள் சென்றபின் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு கடையை விட்டு வெளியே வரமுடியாத சூழல்.ஒரு பக்கம் குடும்பம் சத்யராஜைத் தேடுகிறது. வருணின் ஆட்டோவில் தன்னுடைய திரைக்கதை அடங்கிய பையைத் தவறவிடுகிறார் இயக்குநராக நடிக்கும் யூகிசேது. பூட்டிய கடைக்குள் அந்தத்திரைக்கதைப் பையும் மாட்டிக்கொள்கிறது.
சத்யராஜூம் அனுமோலும் எப்படி வெளியே வந்தார்கள்? யூகிசேதுவின் திரைக்கதை அவருக்குக் கிடைத்ததா? என்பதைப் பதட்டத்துடன் எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள். மத்தியதரவர்க்கத்திள் உறவுகள் மற்றும் உணர்வுகளை மையப்படுத்திப் பின்னப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் திரைக்கதையே இதன்பலம். அந்த உணர்வுகளை தமது நடிப்பால் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் சத்யராஜூம் அனுமோலும்.
மகள், ஒரு பையனின் பைக்கில் வருவதைப் பார்த்ததும் கொதிப்பதும், திருமண ஏற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீங்கள் ஏழு வருஷம் சிங்கப்பூரில் இருந்தப்போ நாங்க உங்கள நம்பலையா? என்று கேள்வி கேட்ட மனைவியை ஓங்கிஅறைவதும், பூட்டிய கடைக்குள் மாட்டிக்கொண்டு, மானம்போய்விடுமோ என்று துடிப்பதும், நண்பர்களின் உண்மைமுகம் தெரியும்போது ஆத்திரமும் அதை வெளிப்படுத்தமுடியாத அவலநிலையையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் சத்யராஜ்.
பேருந்துநிறுத்தத்தில் நின்றுகொண்டு கண்களாலேயே வாடிக்கையாளரை அழைக்கும் அனுமோல் அந்தமுதல்பார்வையில் ரசிகர்களைக் கிறங்கடிக்கிறார். கடைக்குள் மாட்டிக்கொண்டதும், முதலில் மற்ற வாடிக்கையாளர்களைப்போலவே நடத்துவதும் சத்யராஜின் நிலை தெரிந்ததும் அவருக்காகப் பரிந்து பேசி, பெண்ணைப் படிக்கவையுங்க என்று மிகப்பெரிய விசயத்தைப் போகிறபோக்கில் சொல்லிக் கவர்கிறார். படத்தின் இன்னொரு முக்கியபாத்திரம் யூகிசேது, பல வெற்றிப்படங்களை இயக்கிவிட்டு தற்போது நலிந்துபோயிருக்கும் இயக்குநர்.
ஒரு கதையை வைத்துக்கொண்டு தற்போது பிரபலமாக இருக்கும் நாயகனின் தேதிக்காக அலைந்துகொண்டிருக்கும் வேடம். படைப்பாளிக்கான கம்பீரம் தற்காலத் தொய்வினால் துவண்ட மனம் ஆகியனவற்றைத் தன் உடல்மொழியிலேயே காட்டிவிட முயன்றிருக்கிறார். உங்க பைக்குள்ள ஒரே பேப்பரும் குப்பையுமா இருந்துச்சு என்று வருண் சொல்லும்போது, அதை ஆடியன்ஸ் சொல்லட்டும் என்றும், சும்மா சேகர் சேகர் என்று சொல்லுறியே அந்தப்பொண்ணப் பத்தி யோசிச்சியா? ஆகிய வசனங்கள் உட்பட பல இடங்களில் கவனிக்கவைக்கிறார் வசனகர்த்தா யூகிசேது.
ஆட்டோஒட்டுநராக வருகிற வருண் உள்ளிட்ட நடிகர்களும் பொருத்தமாக இருக்கிறார்கள். கடைசியில இதெல்லாம் ஒரு பொழப்பா என்று மா மாசனத்திடம் எகிறுவது ரசிக்கும்படி இருக்கிறது.
நண்பர்களாக நடித்திருப்பவர்களின் உண்மைமுகம் தெரியவரும்போது நமக்கே பதறுகிறது. அதிலும் தன் வீட்டுக்குளியலறையை திருட்டுத்தனமாக எட்டிப்பார்ப்பவனைப் பார்த்துத் துடிக்கும் சத்யராஜ் கடைசியில் அவனை அறைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மகளின் கைபேசி வழியே நடந்த உண்மையை, சத்யராஜ் தெரிந்துகொள்ளும் நேரத்தில் மகள் தீக்‌ஷிதா வரும்போது கைதட்டல் நிச்சயம். 
படிக்காதவர்கள் அறிவாளிகளாக இருக்கமாட்டார்கள் என்கிற கேரளாவின் பொதுப்புத்தியை மையமாகக்கொண்ட இந்தத் திரைக்கதைக்குள் பல கேள்விகள் இருந்தாலும், அவற்றை மத்தியதர குடும்பத்தலைவன் தன் குடும்பத்தின் முன்பும் மக்கள் முன்பும் அவமானப்பட்டுவிடுவாரோ என்கிற பதட்டம் மறைத்துவிடுகிறது. படத்தொகுப்பாளராக அதிர்வை ஏற்படுத்திய ஆண்டனி, முதல்படத்திலேயே இயக்குநராகவும் வரவேற்புப் பெறுகிறார்.


No comments:

Post a Comment