சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Nov 2015

“இடுப்பளவு வெள்ளத்தில் இருந்து பார்த்தாத்தான் எங்கள் கஷ்டம் தெரியும்...” வந்து பாருங்கள் ‘மாண்புமிகு’களே!

சென்னையில் மீண்டும் படகுப் போக்குவரத்து(!) தொடங்கிவிட்டது. போதும் போதும் என்று மக்கள் சொன்னாலும், விடாது பெய்த அடைமழையால் மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.
கூவம் நதிக்கரையோரத்தில் உள்ள குடிசைகள் முதல் சோழிங்கநல்லூர் எலைட் அடிக்குமாடி குடியிருப்பு வரை மழை வெள்ளம் சூழ்ந்துகொண்டு திரும்பிச்செல்ல மறுத்துவருகிறது. வீட்டுக்குள் முழங்கால் அளவு தண்ணீர், சாலையில் இடுப்பு அளவு தண்ணீர் எனச் சென்னைப் பிரதேசம் மிதவைக்குடியிருப்பாக மாறிப்போனது. மழை ஓய்ந்தாலும் துயரம் ஓயவில்லை. புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பம்மல் போன்ற பகுதிகளில் தண்ணீர் இன்னும் வடிந்தபாடில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்பியதால் மக்கள் ஏரியாக்களைவிட்டு காலிசெய்யும் நிலைமை.
‘‘இடுப்பளவு வெள்ளத்தில் இருந்து பார்த்தாத்தான் எங்க கஷ்டம் தெரியும்? ஒருநாள் எங்க வீட்டுல தங்கிப் பாருங்க. அப்பத்தான் புரியும்’’ என அதிகாரிகளையும், அமைச்சர்களையும், கவுன்சிலர்களையும் நோக்கி மக்களின் குமுறல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த விஷப்பரீட்சையில் இறங்க அவர்களுக்கு என்ன வேண்டுதலா? அதனால், பாதிக்கப் பட்ட பல்லாயிரம் குடும்பங்களில் ஒரு குடும்பத்துடன் நாள் முழுவதும் தங்கி அவர்களின் துயரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முடிவுசெய்தோம்.
நாம் தேர்ந்தெடுத்த பகுதி, பம்மல் அருகில் இருக்கும் பொழிச்சலூர். ஒரு பக்கம் மழை வெள்ளம்... மறுபக்கம் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெள்ளம் என பொழிச்சலூர் விழிபிதுங்கிக் கிடந்தது. வீதிவீதியாகச் சென்று பழைய இரும்பு வியாபாரம் செய்யும் இசக்கிமுத்து தனது வீட்டில் நம்மைத் தங்குவதற்கு அனுமதி கொடுத்தார். மனைவி சத்தியகனி, மகள்கள் பவித்ரா, பவானி, மகன் ராம்குமார் என குடும்பத்துடன் தன்னுடைய ஓட்டுவீட்டில் வசித்து வருகிறார் இசக்கிமுத்து. 1992-ல் திருச்செந்தூரில் இருந்து பிழைக்க சென்னை வந்த இசக்கிமுத்து, சிறுகச்சிறுகச் சேமித்து கட்டிய வீடு இது.
மழைவிட்டு இளஞ்சூரியன் எட்டிப் பார்த்ததால், குவிந்துகிடந்த அழுக்குத் துணிகளைத் துவைக்கும் வேலையில் மும்முரமாக இருந்தது அந்தக் குடும்பம். வீட்டு வாசலில் இடுப்பு அளவு தேங்கி நின்ற நீரில், மகன் ராம்குமார் துணிகளை ஊறவைத்துத் தர, அம்மா சத்தியகனி சோப்புபோட்டுத் துவைக்க, மகள் பவானி அதே நீரில் துணிகளை அலச, சங்கிலித்தொடர்போல வேலை நடந்து கொண்டிருந்தது. ‘‘ஒரு வாரமாச்சு. மாத்துத் துணிகூட இல்லாம கஷ்டப்பட்டோம். அதான் காலையிலேயே துவைக்க ஆரம்பிச்சாச்சு’’ என்று ஆரம்பித்தார் சத்தியகனி.
அப்போது இசக்கிமுத்து, கடையில் இருந்து டீ-யும், பிஸ்கட்டும் வாங்கிவந்து பாசமுள்ள அப்பாவாக அனைவருக்கும் கொடுத்துவிட்டு நம்மிடம் பேசினார். ‘‘10 வருஷத்துக்கு முன்னாடி இப்படி ஒரு வெள்ளம் வந்தப்ப, எல்லா வீடும் அதுல அடிச்சிட்டுப் போயிடுச்சு. அதுக்கப்பறம் இப்பத்தான் இப்படி ஒரு பேய் மழையைப் பாக்கறோம். மழையில வீடே மூழ்கிடுச்சு. ஒருவாரம் பஞ்சாயத்து ஆபிஸ்ல தங்கிருந்தோம். நேத்துதான் மழை தண்ணி வடிஞ்சதால வீட்டைச் சுத்தம் பண்ணிட்டு துணி துவைக்கிறோம்’’ என்றார். அப்பாவின் பேச்சை இடைமறித்த மகன் ராம்குமார், ‘‘அம்மா... தண்ணி வேகமா ஏறிட்டே இருக்கு. சீக்கரமா துவைச்சுப் போடு’’ எனக் குடும்பத்தை விரட்ட, பேச்சைத் தொடந்தார் இசக்கிமுத்து. ‘‘அப்பாடா, மழை தண்ணி வடிஞ்சுதேனு நிம்மதியா வீட்டுக்கு வந்தோம். ஆனா, ஒரு ராத்திரிகூட நிம்மதியா தூங்கல. செம்பரம்பாக்கம் ஏரி நிறைஞ்சிடுச்சுனு சொல்லாம கொள்ளாம ராத்திரியே தண்ணிய திறந்துவிட்டுட்டாங்க. ஆத்தை தூர்வாராததால ஆத்துல போக வேண்டிய தண்ணி எல்லாம் ஊருக்குள்ள வந்துக்கிட்டு இருந்துச்சு. ராத்திரியோட ராத்திரியா யார் வீட்டுக்குப் போறதுனு தெரியாம, கிடைச்ச பொருளை எடுத்துக்கிட்டுப் போய் விடியற வரைக்கும் ரோட்டுலயே உட்காந்துட்டு விடிஞ்ச பிறகு திரும்ப வீட்டுக்கு வந்துட்டோம்’’ என்றார். ஐந்து நிமிட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக இசக்கிமுத்துவின் வீடு மூழ்கிக்கொண்டிருந்தது.
துணிகளை அலசிக்கொண்டிருந்த பவானி கையில் குடிநீர் கட்டண அட்டை ஒன்று மிதந்துவந்து சிக்கியது. ‘‘அட... பக்கத்துத் தெரு அருணாச்சலம் வீட்டுக் குடிநீர் அட்டை. தம்பி, இத அங்க காய வை’’ என்று தம்பி ராம்குமாரிடம் நனைந்த அட்டையைக் கொடுத்தார் பவானி. ‘‘இப்படித்தான் மழையில என்னோட சர்டிஃபிகேட் எல்லாம் நனைஞ்சிடுச்சி. மாமா வீட்டு மொட்டை மாடியில காய வெச்சிருக்கேன்’’ என்றார் ப்ளஸ் 2 படிக்கும் பவானி. பவானியைத் தேடி ஒரு சிறுமி வந்து சில பழைய பேப்பர்களை வாங்கிச்சென்றார். கூச்சத்துடன் பேசிய பவானி, ‘‘சொல்றதுகே கஷ்டமா இருக்கு. டாய்லெட் நிரம்பி தண்ணி வெளியே வந்துகிட்டே இருக்கு. வேற வழியில்லாம பழைய பேப்பரைத்தான் டாய்லெட் போறதுக்கு எல்லாரும் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. ‘பேசும் படம்’ படத்துல கமலஹாசன் செய்யற மாதிரி மலத்த பிளாஸ்டிக் கவர்ல போட்டு, ஒதுக்குப்புறமான இடத்துல தூக்கி எறியறோம்’’ என்றார் வேதனையுடன்.
காலை உணவை மறந்து எல்லாத் துணிகளையும் துவைத்து முடிக்க மதியமாகிவிட்டது. துவைத்த துணிகளைக் காயவைக்க இடம்? வீட்டில் ஓடு மீது ஏறி பீதியுடன் துணிகளை காயவைத்தார் பவானி. வெள்ளக்காட்டில் மிதந்த இவர்களது வீட்டில் அங்கு மட்டும்தான் ஈரமில்லாமல் இருந்தது. ‘அப்பாடா’ என சத்தியகனி முதுகைப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்தபோது, ‘‘அம்மா... சோறு பொங்குமா பசிக்குது’’ என்று வந்தான் ராம்குமார். ‘‘சரி பாலு வீட்டுக்குப் போய் கேஸ் சிலிண்டரை எடுத்துக்கிட்டு வா. சோறு வடிக்க எந்தப் பாத்திரமும் இல்ல. உப்புமா மட்டும்தான் செய்ய முடியும்டா. அண்ணாச்சி கடையில போய் கடனா, ரவையும் எண்ணெய்யும் வாங்கிட்டு வா. தண்ணில ஒரே பூச்சியா இருக்குடா. மறக்காம ஒரு தண்ணி கேனும் வாங்கிட்டு வா’’ என்று மகனை அனுப்பி வைத்துவிட்டு சத்தியகனி அடுத்து சமையல் போராட்டத்துக்குத் தயார் ஆனார்.
அப்போது, ‘‘பவானி அம்மா... ஏதாவது ஜுரம் மாத்திரை இருக்கா’’ - பக்கத்து வீட்டில் இருந்து வயதான பாட்டியின் குரல் கேட்டது. ‘‘இல்லம்மா’’ என்று பதில் அளித்துவிட்டு, நம்மை நோக்கிய சத்தியகனி, ‘‘பாவம்ங்க... பாட்டிக்கு நேத்துலேர்ந்து உடம்பு அனலா கொதிக்குது. அந்தப் பாட்டி வீட்டுல வெச்சிருந்த மாத்திரை எல்லாம் நனைஞ்சிடுச்சாம். மாத்திரை வாங்கித் தரலாம்னு பாத்தா க்ளினிக், மெடிக்கல் கடை எல்லாம் மூடியே கிடக்கு. பாட்டி, வீட்டுல படுக்கவும் முடியாம, வெளிய வரவும் முடியாம தவிச்சுட்டு இருக்காங்க’’ என்றார் கவலையுடன்.
வெள்ளத்தில், வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜ், டி.வி நனைந்து பார்த்திருப்போம். ஆனால் இசக்கிமுத்து வீட்டில் சீலிங் ஃபேன் முதற்கொண்டு வெள்ளத்தில் நனைந்து வீணாகியுள்ளது. இசக்கிமுத்து கழற்றி வைத்த ஃபேனை, ராம்குமார் அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றித் துடைத்துக்கொண்டி ருந்தார். மூணு நாளா ஃபேன் தண்ணில மூழ்கியிருந்திச்சு. வார்னிஷ் போட்டு துடைச்சா ஓடும்னு நினைக்கறேன். பாக்கலாம்...’’ என்றபடி நம்பிக்கையாக வேலையில் மூழ்கினார், ராம்குமார். தளத்தில் மாட்டப்பட்டிருந்த ஃபேனுக்கே இந்த நிலைமை என்றால், மற்ற பொருட்கள் எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. “பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்தபோது கையில் 10 பைசா இல்லை. ஆரம்பத்துல ரோட்டுலதான் குடும்பத்தை நடத்தினோம். 20 வருஷ உழைப்பில வாங்கிய டி.வி., ஃப்ரிட்ஜ், கிரைண்டர் எல்லாம் இப்ப பாழாப்போச்சு” என்றார் இசக்கிமுத்து.
உப்புமா தயாராகி முடிந்ததும் ராம்குமார், அக்கம்பக்கத்து வீட்டினருக்குக் குரல் கொடுத்தார். ‘‘பாவம் சார்... பக்கத்து வீடுகள்லகூட அடுப்பு பத்தவைக்க முடியாத நிலைமை’’ என்றபடி உப்புமாவை சாப்பிட ஆரம்பித்தார் ராம்குமார். சில நிமிடங்களில் ராம்குமாரின் நண்பன் பாண்டி, ‘காக்கா முட்டை’ படச் சிறுவர்கள்போல ஓர் அட்டை மீது படுத்துக்கொண்டு நீச்சல் அடித்தப்படியே உப்புமா வாங்கவந்தார்.
‘‘தரையில தண்ணி ஊறிக்கிட்டே இருக்கு’’ என்றபடி நின்றுக்கொண்டே உப்புமாவைச் சாப்பிட்டு முடித்தனர். அதற்குள், “ஏம்பா... கலைஞர் பொண்ணு கனிமொழி நிவாரணம் தர வந்துட்டாங்களாம். சீக்கரம் வாங்க. மறக்காம டோக்கன் எடுத்துட்டு வந்திடுங்க’’ என்று குரல் கேட்க, சத்தியகனி நிவாரணம் வாங்கக் கிளம்பினார். நிவாரணம் வாங்க கூட்டம் நெருக்கியடித்தது. முட்டி மோதி அரிசி, பருப்பு, போர்வை வாங்கிக்கொண்டு சத்தியகனி வீட்டுக்குள் நுழையவும் மீண்டும் மழை வெளுத்துக்கட்டவும் சரியாக இருந்தது. ‘‘வயசு பொண்ணுங்கள வெச்சிக்கிட்டு ஸ்கூல்லயும், பஞ்சாயத்து ஆஃபீஸ்லயும் ராத்திரி தங்க முடியல. பசங்களும் இந்த ஊரே வேணாம். சொந்த ஊருக்கே போயிடலாம்னு சொல்லிட்டு இருக்காங்க. 10 நாளா வேலைக்குக்கூட போக முடியல. பெரிய பொண்ணை, அவ ஃப்ரெண்டு ரூம்லயே தங்கச் சொல்லிட்டேன். எவ்வளவுதான் பசி, கஷ்டம் இருந்தாலும் தூங்கற நேரம் மட்டும் நிம்மதியா இருக்கும். இப்போ தூக்கத்தக்கூட தொலைச்சிட்டு இருக்கோம். ராத்திரிக்குள்ள வீடு மூழ்கிடும். அதுக்குள்ள முக்கியமான பொருட்களை எடுத்துக்கிட்டு வடபழனில இருக்கற மச்சான் வீட்டுக்குப் போகலாம்னு இருக்கோம்’’ என்ற இசக்கிமுத்துவின் குரல், மழை இரைச்சலில் மெலிதாகக் கேட்டது.
கழுத்து அளவு தண்ணீரில் தத்தளித்தபடி 20 வருடங்கள் வாழ்ந்த வீட்டைவிட்டு புகலிடம் தேடி, இசக்கி முத்து குடும்பம் கிளம்பியபோது இருள் சூழ்ந்திருந்தது!


No comments:

Post a Comment