சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Nov 2015

அறிக்கை அளித்துவிட்டார் சகாயம்... அவருக்குப் பாதுகாப்பு அளிக்குமா அரசாங்கம்?

"மதுரையில் நடைபெற்ற கிரானைட் கொள்ளையை விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம், தினசரி மெய்வருத்தம் பாராது களப்பணி ஆற்றி வருவதையும், அங்குள்ள மக்கள் தினசரி அவரிடம் கிரானைட் கொள்ளையர்களின் அட்டகாசங்களைப் பற்றி முறையிட்டு வருவதையும் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
ரொட்டித் துண்டை வெட்டி எடுத்துச்சென்றதுபோல் தோற்றமளித்த சக்கரை பீர்மலையைப் பார்த்த எல்லோருக்கும் அதிர்ச்சியே மிஞ்சியது. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட்டணி போட்டுக்கொண்டு கடந்த 40 வருடங்களாக கிரானைட் கற்களைக் கொள்ளையடித்ததால், அங்குள்ள குன்றுகள் காணாமல் போயின. கண்மாய்கள் இடந்தெரியாமல் அழிக்கப்பட்டன. தொல்லியல் சான்றுகள் போன இடம் தெரியவில்லை. இவற்றையெல்லாம் சகாயம் உயர் நீதிமன்றத்துக்கு அளிக்கப்போகும் அறிக்கையில் குறிப்பிடுவார் என நம்பலாம்" என ஒருமுறை நம்பிக்கையோடு எழுதினார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு.
சந்துருவின் நம்பிக்கையைப் போலவே, தமிழக மக்களும் ஆவலோடு எதிர்பார்த்த சகாயம் கமிட்டியின் விசாரணை அறிக்கை,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. கிரானைட் மோசடி குறித்து வழக்கு போட்ட டிராஃபிக் ராமசாமிக்கு கமிட்டி அறிக்கை தரப்படவில்லை. ஆனால், கடந்த 24-ம் தேதி காலையில் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்த தகவல்கள் பெருமளவு கசிந்து விட்டன. கிரானைட் மாஃபியாக்களுக்கு எதிராக சகாயம் அளித்த 22 பரிந்துரைகள் குறித்த தகவல்கள் வெளியானது. கடந்த 20 ஆண்டுகளில், கிரானைட் வெட்டியெடுக்கப்பட்டதில் மட்டும் 1,06,145 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சகாயம் கமிட்டி விசாரணை அறிக்கை சொல்கிறது. 

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய சகாயம் கமிட்டி விசாரணை கடந்த வந்து பாதையைப் பார்ப்போம்... 

மதுரை கலெக்டராக சகாயம் இருந்தபோது, 'இப்போது  கிரானைட் விவகாரத்தில் கை வைத்தால் நம்மை முடக்கிப் போட்டுவிடுவார்கள். ஆட்சியாளர்களைவிட கிரானைட் மாஃபியாக்கள் மிக வலுவானவர்கள். நேரம் வரும் வரை காத்திருப்போம்' என மக்கள் நலன் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி வந்தார். ஆனாலும், கிரானைட் தொடர்பாக வரும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சில மாதங்களில் கிரானைட் முறைகேடுகளால் அரசுக்கு 13 ஆயிரம் கோடி இழப்பு என அறிக்கை அனுப்பினார். இந்த அறிக்கையின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2012 மே மாதம் 19-ம் தேதி சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார். மறுநாள் கிரானைட் புள்ளி ஒருவர் அவரை சந்தித்துப் பேச, பிடிகொடுக்காமல் பேசி அனுப்பி விட்டார் சகாயம். வெளியே வந்த நபர், 'சகாயம் மாற்றல் ஆகப் போகிறார். அடுத்த கலெக்டர் அன்சுல் மிஸ்ரா' என அதிர வைத்துவிட்டுப் போனார். அதே மாதம், 23-ம் தேதி சென்னைக்கு மாற்றல் செய்யப்பட்டார் சகாயம். இதுகுறித்து சகாயம் பேசும்போது, ' எங்க போனாலும் மக்களுக்கு சகாயமாகத்தான் இருப்பேன்' என பேட்டியளித்தார். 

இதன்பின்னர் சகாயம் அறிக்கை பூதாகரமாக்கப்பட, அடுத்து வந்த கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் 16 டீம்களை அமைத்தது அரசு. அவரும் 18 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு என அறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கையின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன்பின்னர், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கையடுத்து, சகாயம் தலைமையிலான குழு, மாநிலம் முழுவதும் நடந்துள்ள கனிமவள மோசடிகளை விசாரிக்க வேண்டும் என சென்னை, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் சென்ற தமிழக அரசு, 'மதுரையில் நடந்துள்ள மோசடிகளைப் பற்றி மட்டும் விசாரிக்க வேண்டும்' என உத்தரவு வாங்கியது. 

சகாயம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் விசாரணையை மேற்கொள்வதற்கான எந்த வசதியையும் அரசு செய்து தரவில்லை. இதனைக் கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "சகாயம் குழு அமைக்கப்பட்டதும் அதை எதிர்த்து தமிழக அரசே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகும், சகாயம் குழு விசாரணையை தொடங்க அனுமதி அளிக்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. கனிமக் கொள்ளை குறித்த விசாரணையை விரைந்து முடிக்க விரும்புவதாக உயர் நீதிமன்றத்தில் நாடகமாடிய தமிழக அரசு, இப்போது சகாயம் குழு அமைக்கப்பட்டு ஒரு மாதமாகியும் விசாரணைக்கு அனுமதி அளிக்காததிலிருந்தே இப்பிரச்னையில் தமிழக அரசின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது" என காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.
இதனையடுத்து, விசாரணையைத் தொடங்கிய சகாயத்திற்கு எத்தனை எத்தனை மிரட்டல்கள்? கிரானைட் கொள்ளையை விசாரிக்கத் தொடங்கிய நேரத்தில், மதுரை அண்ணாநகர் செண்பகம் மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டியில், 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த இடத்திற்கு வெகு அருகில் சகாயம், கிரானைட் முறைகேடுகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அவரை அச்சுறுத்துவதற்காக இந்த குண்டுகள் போடப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. 

விசாரணை நடந்த பூமாலை வணிக வளாகத்திற்கு சீல் போட்டது, சரியான டைப்ரைட்டர் இல்லாமல் அவதிப்பட்டது என ஒவ்வொரு நாளும் அவருக்கு சவாலாகவே இருந்தது. ஒருகட்டத்தில், அவர் தங்கியிருந்த அறையில் ஒட்டுக் கேட்பு கருவி இருந்ததாக புகார் எழுந்தது. மதுரை பி.ஆர்.பி குழுமத்தால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் முதல் பொதுமக்கள் வரையில் தினம்தோறும் புகார் மனுக்களை அளித்த வண்ணம் இருந்தனர். சட்டத்தின் மீது இருந்த நம்பிக்கையால் பொதுமக்கள் திரண்டு வந்தனர். 

ஊருக்குள் சகாயம் விசாரிக்கச் சென்றால், கூடவே அரிவாளோடு ஒரு மனிதர் பின்தொடர்வதும் நடந்தது. ஏறத்தாழ 11 மாதம் 17 கட்டங்களாக விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. வேளாண்மைத் துறை உள்பட பல துறைகள் சகாயத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. சட்டரீதியாகவே அவர் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக பி.ஆர்.பி நிறுவன டிரைவர் சேவற்கொடியோன் கொடுத்த புகார் மிக முக்கியமானதாக இருந்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து நரபலி கொடுத்ததாக அவர் சில இடங்களைக் கை காட்டினார். அந்த இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப் போன சகாயத்திற்கு காவல்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. 'தோண்டியே தீருவேன்' என சுடுகாட்டிலேயே படுத்துறங்கினார் சகாயம். மறுநாள், தோண்டப்பட்ட குழிகளில் இருந்து நரபலி கொடுக்கப்பட்டதற்கான பூஜை சாமான்களோடு, எலும்புக் கூடுகளையும் கைப்பற்றினார். தமிழகமே பரபரப்பானது. 

இறுதியாக, அறிக்கை தாக்கல் செய்தபின் சகாயத்தின் வக்கீல் சுரேஷ், "இந்த வழக்கில் அரசுத் துறை ஊழியர்கள், பொதுமக்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் எனப் பலர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்ற கோரிக்கையையும் நீதிமன்றத்தின் முன் வைத்தார். விசாரணை அறிக்கையின்பேரில் வருகிற ஜனவரி 4-ம் தேதி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மெளனத்தையே கடைபிடிக்க விரும்புகிறேன்: சகாயம்

இந்நிலையில் கிரானைட் அறிக்கை குறித்து சகாயத்தை நேரில் சந்தித்துப் பேசினோம்.
"விதிகளை மீறி நடந்த மிகப் பயங்கரமான விஷயங்கள் இவை. நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனால் அதீத மெளனத்தையே கடைபிடிக்க விரும்புகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார்.
"சகாயம் கமிட்டி விசாரணையைத் தொடங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும்கூட அவருக்கு எந்தவிதப் பாதுகாப்போ, வசதிகளோ செய்துதரக்கூட இந்த அரசு விரும்பவில்லை. அவருடைய விசாரணையை நீர்த்துப் போகச் செய்யும் அத்தனை வேலைகளையும் தமிழக அரசு எடுத்தது. பலநாள் சர்க்யூட் ஹவுசில் தங்கித்தான் அவர் விசாரணையைத் தொடங்கினார். யார் சார்பாக அரசாங்கம் இந்த நெருக்கடிகளைத் தந்தது? கிரானைட் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகத்தான் அரசு செயல்பட்டது. சகாயத்திற்கோ, அவரது குடும்பத்திற்கோ எந்தவிதப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தரவில்லை. அவரை அச்சத்தோடு வைத்திருக்கும்படி பார்த்துக் கொண்டது.
20 ஆண்டுகளாக கிரானைட் மாஃபியாக்களின் ஆட்சிதான் மதுரையில் நடந்து வந்தது. எல்லா கட்சிகளும் கிரானைட் மாஃபியாக்களிடம் பெரும் பணத்தை வாங்கியுள்ளன. பிரச்னை பெரிதாகும்போது மட்டும் பெயரளவுக்கு கட்சிகள் அறிக்கை வெளியிட்டன. கிரானைட் மோசடியில் ஈடுபட்ட பி.ஆர்.பழனிச்சாமிக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், 'இனிமேல் அவர் மேல் போடப்படும் வழக்குகளுக்கும் சேர்த்து' ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இப்படியொரு தீர்ப்பு உலகில் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. அந்தளவுக்கு கிரானைட் மாஃபியாக்களின் செல்வாக்கு உள்ளது.
அரசு இயந்திரம் முழுக்க சகாயத்திற்கு எதிராகவே இருந்தன. இவர்களா, சகாயத்தின் அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? எதுவுமே நடக்காது. அதுதான் நிதர்சனம். குறைந்தபட்சம் சகாயத்துக்கேனும் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதைச் செய்யுமா இந்த அரசு?" எனக் கொந்தளிக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துக்கிருஷ்ணன். 

அரசு அதிகாரியான சகாயம், அரசுக்கு எதிராகவே போராடி கிரானைட் கொள்ளைக்கு எதிராகப் பெற்ற ஆதாரங்களும், அறிக்கை விவரங்களும் என்ன மாற்றத்தை உண்டாக்கும் என்பது... பெரும் கேள்விக்குறிதான்!


No comments:

Post a Comment