சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Nov 2015

''எண்ணெய் சட்டியில் இருந்து தப்பித்து எரியும் நெருப்பில் விழ வேண்டியது இருக்கிறது''- மூத்த கம்யூனிஸ்ட்வாதியின் குமுறல்

மிழக வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார்.
அவரது உள்ளக் குமுறல்களை கொட்டி எழுதி உள்ள அந்த மடல் இங்கே...

அன்புள்ள வாக்காளர்களுக்கு வணக்கம்,

''சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அதனதன் பாணியில் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. யாரோடு யார் சேருவார்கள்? அல்லது யாரோடு, யார் சேரக்கூடாது என்பது குறித்து, காரசாரமான விவாதம் அரசியல் அரங்கில் நடைபெற்று வருகிறது.கடந்த 1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்ட பிறகு, திமுகவும் அதிமுகவும்தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
இரண்டு கட்சிகளும் எதிரெதிராக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், பல்வேறு விஷயங்களில் இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. மத்தியில் ஆண்ட, ஆள்கிற காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகளின் அதே தாராளமயமாக்கல் கொள்கையைத்தான் தமிழகத்தில் இந்த இரு கட்சிகளும் அமலாக்கி வந்துள்ளன. வகுப்புவாத பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் இரு கட்சிகளுமே தயங்கியது இல்லை. ஊழல், லஞ்சத்தை வளர்த்தது இவ்விரு கட்சிகளும்தான். அனைத்து நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்களுக்கும் அறிவிக்கப்படாத கமிஷன், இயற்கை வளங்கள் சூறையாடல் என்று இரு கட்சிகளின் ஆட்சியும் அவர்களது முந்தைய ஆட்சியின் நீட்சியாகவே இருந்து வந்துள்ளன.

இந்தப் பின்னணியில், திமுக, அதிமுக அல்லாத ஒரு அரசியல் மாற்று தமிழகத்தில் தவிர்க்க முடியாத தேவையாகிறது. மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து ‘மக்கள் நலக் கூட்டு இயக்கம்’ ஒன்றை உருவாக்கியுள்ளன. கடைசி நேரத்தில், தொகுதிப் பங்கீட்டின் அடிப்படையில்தான் இதுவரை கூட்டணிகள் அமைந்து வந்துள்ளன. ஆனால், தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில், குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வாக்காளர்களாகிய உங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு கட்சிகளும் மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி, அந்தக் கள அனுபவத்தின் அடிப்படையில்தான் இந்தக் கூட்டியக்கத்தை உருவாக்கியுள்ளன. இந்தச் செயல்திட்டத்தை முன் வைத்து விவாதம் நடத்துவது, அரசியல் சூழலில் ஆரோக்கியமான விளைவை ஏற்படுத்தும். ஆனால், அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ‘இந்த கூட்டணி கரை சேராது, தேறாது’ என்று சாபம் விட்டுக் கொண்டிருக்கின்றன. திமுக தலைவர் கருணாநிதி, ‘இது ஆரம்பகால சூரத்தனம்’ என்று, அண்ணாவை மேற்கோள் காட்டிக் கூறியுள்ளார். அவரது இந்த விமர்சனம் விரக்தியின் வெளிப்பாடன்றி, வேறல்ல.
தமிழகத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் திமுக அதிமுக ஆகிய கட்சிகளுடன் இடதுசாரிகள் தொகுதிப் பங்கீடு செய்து கொண்டு தேர்தலை சந்தித்துள்ளனர். அப்போதைய அரசியல் சூழலைக் கணக்கில் கொண்டு பார்த்தால், அது சரியான முடிவே ஆகும். ஒரு பிரதான எதிரியை அல்லது பிரதான பிரச்சனையை முன்னிறுத்தி, இந்த உடன்பாடுகள் ஏற்பட்டன. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வெற்றிக்கும் இடதுசாரிகள் பயன்பட்டுள்ளனர். ஆனால், பதவிக்கு வந்த பிறகு, தங்களது சொந்த பலத்தால்தான் வெற்றி பெற்றதாக அந்தக் கட்சிகள் கூறிக் கொள்வது வழக்கம். ஒரு அரசியல் போராட்டம் என்ற வகையிலேயே , இடதுசாரிக் கட்சிகள் அவ்வப்போதைய சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்து வந்துள்ளன. ஆனால், மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத, தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்கான தேவை தற்போது உருவாகியுள்ளது.

இன்றைக்கு தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிற ஊழல், வறுமை, வேலையின்மை, சமச்சீரற்ற வளர்ச்சி முதலான அனைத்துப் பிரச்னைகளுக்கும் திமுக, அதிமுக பின்பற்றிய தவறான அணுகுமுறை மற்றும் நிர்வாகச் சீர்கேடே காரணமாகும். சமூக நீதி என்று சொல்லிக் கொண்டு இயக்கம் தொடங்கினாலும், இந்த இரு கட்சிகளின் அடுத்தடுத்து வந்த ஆட்சிகளால் தமிழகத்தில் சாதியத்தின் தாக்கம் குறையவில்லை. அதற்குக் காரணம் நிலச்சீர்திருத்தம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்மையான அதிகாரம் போன்றவற்றில், இந்த இரு கட்சிகளுக்கும் ஆர்வமில்லை என்பது மட்டுமல்ல; அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்த இரு கட்சிகளும் சாதி ஆதிக்க அமைப்புகளுடன் கூடிக் குலாவி வந்துள்ளதும் காரணமாகும்.
திராவிடக் கட்சிகள், மாநில சுயாட்சிக்கு முக்கியத்துவம் தருவதாகக் கூறிக் கொண்டாலும், மத்தியில் இருந்த அரசுகள் மாநிலங்களின் அதிகாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து வருவதை, இந்தக் கட்சிகளால் தடுக்க முடியவில்லை.1990 களில் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில், நவீன தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, மாநில கட்சிகளின் அணுகுமுறை மாறத் தொடங்கியுள்ளது. மாநிலக் கட்சிகள் மத்திய அரசில் பங்கேற்கின்றன. குறிப்பாக, திமுக 15 ஆண்டுகள் மத்திய அரசில் பங்கேற்றுள்ளது. தொழில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்த ஆட்சியில் உள்ள மாநிலக் கட்சிகள் முயற்சிக்கின்றன. இதனால் அதிகச் சலுகை தரும் மாநிலத்திற்கு கார்ப்பரேட் மூலதனம் செல்லத் தொடங்கியது. இது மாநிலங்களுக்கிடையே கடுமையான போட்டியை உருவாக்கியது. 

மூலதனத்திற்குக் கொடுக்கும் அதிகச் சலுகை என்பது, மாநில மக்களின் நலனைக் கடுமையாகப் பாதிக்கிறது. உதாரணமாக, மலிவு விலையில் நிலம் கையகப்படுத்தப்படுவது, தங்குதடையற்ற மின்சாரம், வரிச்சலுகை, தொழிலாளர் சட்டங்களை முடக்குதல் போன்ற சிலவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இந்த முதலீடுகள் வேலைவாய்ப்பைக் கணிசமாக உருவாக்கவில்லை என்பதையும் பார்க்க வேண்டும். இதன் விளைவாக, உள்நாட்டு, சிறு குறுந்தொழில்கள் மட்டுமல்லாமல், நடுத்தரத் தொழில்களும் நசிந்து வருகின்றன. விவசாயம் போன்ற தொழில்கள் கை கழுவப்படுகின்றன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புத் தேடி நகரங்களுக்கு ஆயிரக்கணக்கில் குடியேறுவதைப் பார்க்க முடிகிறது. பாரம்பரியத் தொழில்களில் பணியாற்றி வந்த பல்லாயிரக்கணக்கானோர், வேலையிழந்து பரிதவிக்கின்றனர்.

கல்வி, மருத்துவம் போன்ற துறைகள் மேலும் மேலும் தனியார்மயமாக்கப் படுவதால், மக்கள் பெரும் துன்ப, துயரத்தைச் சந்திக்கின்றனர். இயற்கை வளங்கள் வகைதொகையின்றி சுரண்டப்படுவதால், தமிழகம் பாலைவனமாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தடுக்கப்பட வேண்டும்.அதிமுகவுடன் சேரவில்லையென்றால், திமுகவுடன் தான் சேர வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், எரியும் நெருப்பில் குதிக்க வேண்டும் என்பது போன்றதுதான் இது.தற்போது திமுக அதிமுக அல்லாத ஒரு மாற்று உருவாகியுள்ளது. திமுக, அதிமுகவின் அணுகுமுறையை விரும்பாத வேறு பல கட்சிகளும் இதில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சி உருவாக வேண்டும் என்று விரும்பும் தேமுதிக தலைவர் விஜயகாந்தும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனும், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து, மக்கள் விரும்பும் மாற்றத்தைத் தருவதற்கு முன்வர வேண்டும் என்று அழைக்கிறேன்.‘ஊழலற்ற தமிழகம், நேர்மையான நிர்வாகம்’ என்ற கூட்டியக்கத்தின் முழக்கம், தமிழகத்தின் மன சாட்சியின் குரலாக ஒலிக்கிறது.‘எய்தற்கு அரியது இயைந்தகால் அந்நிலையேசெய்வதற்கு அரிய செயல்’-என்பது வள்ளுவர் வாக்கு. கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அதைப் பயன்படுத்திக் கொண்டு, அப்போதே செயற்கறிய செயலைச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருள்.அதன்படி பார்க்கும்போது, தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கும் பெரும் லட்சியத்துடன் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் நலக் கூட்டியக்கத்திற்கு, வாக்காளர்களாகிய நீங்கள் பேராதரவு தர வேண்டுகிறோம். நன்றி!''


No comments:

Post a Comment