சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Nov 2015

மழை வெள்ளப் பகுதிகளை நேரில் பார்வையிட்டார் ஜெயலலிதா!

தமது சட்டசபை தொகுதியான ஆர்.கே. நகர் தொகுதி உள்பட  மழை, வெள்ளம் பாதித்த  பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களிடம் பேசிய அவர், நிவாரண  பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். 

கடந்த சில தினங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்படாமல் இருப்பதாக மக்களிடமிருந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் தங்களது தொகுதிகளில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டு, நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.


 


இதன் ஒரு அம்சமாக இன்று காலை திமுக பொருளாளரும், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மு.க. ஸ்டாலின் தமது தொகுதிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினார். 

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, '' மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிடாதது வேதனை அளிக்கிறது. அவர் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட  வேண்டும்.

அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆய்வு கூட்டம் மட்டுமே நடத்துகிறார்கள். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத காரணத்தால் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிடவில்லை" என்று குற்றம் சாட்டி இருந்தார். 

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா சென்னை‬ ஆர்.கே. நகர் தொகுதியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று மதியம் வேனில் அமர்ந்தவாறு நேரில் பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்களிடம் பேசிய அவர், மூன்று  மாதங்களுக்கு  பெய்ய  வேண்டிய  மழை  ஒரு  சில  நாட்களில்  கொட்டி தீர்த்து  விட்டதாகவும், நிவாரண பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினார்.
"வடகிழக்குப் பருவ மழை துவங்கும் முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினேன். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

 
எனினும், 3 மாத காலமாக பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவ மழை ஒரு வார காலத்தில் பெய்திருப்பதால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், மழை நீர் தேங்குவது, சாலைகள் பாதிக்கப்பட்டது போன்ற பாதிப்புகளை தடுத்திருக்க முடியாது.

இருந்தாலும், பாதிப்பை சரி செய்யும் பணியில் தமிழக அரசு உடனடியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுடன் நான் துணை நிற்கிறேன், தமிழக அரசு இருக்கிறது. தமிழக அரசு உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்" என்று ஜெயலலிதா பேசினார்.


ஆர்.கே.நகர் தொகுதியை தொடர்ந்து, வில்லிவாக்கம் சிட்கோ நகர், பெரம்பூர் முத்தமிழ் நகர்,  வில்லிவாக்கம் சிட்கோ நகர், கொளத்தூர் இரட்டை ஏரி, அண்ணா நகர் எம்எம்டிஏ காலனி உள்ளிட்ட பகுதிகளையும் ஜெயலலிதா பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினார். 

முன்னதாக இன்று காலை, தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தினார்.  அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.


No comments:

Post a Comment