சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Nov 2015

திருமணத்தில் ஏமாற்று வேலைகள்... உஷார் உஷார்!

‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை முடிக்கலாம்’ என்பார்கள். இதற்கு, ‘ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு திருமணத்தை முடிக்கலாம்’ என்பதுதான் உண்மையான பொருள் என்று கூறப்படுகிறது. அர்த்தங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால், பொய் சொல்லி திருமணத்தை முடிப்பதும் நடக்கத்தானே செய்கிறது. இதோ... கல்யாணச் சந்தையில் எப்படியெல்லாம் ஏமாற்றப்படலாம் என்பதற்கான எச்சரிக்கைக் குறிப்புகள்! இவையெல்லாம் பலரிடமும் பேசி தொகுக்கப்பட்ட நிஜ அனுபவங்களே!
 பெண் / மாப்பிள்ளையின் ஜாதகத்தையே பொருத்தத்துக்கு ஏற்றவாறு மாற்றி எழுதி வாங்கிக்கொண்டு, ‘நாங்க ஜாதகம் பார்த்துட் டோம். அருமையா பொருந்தியிருக்கு. நீங்களும் உங்க திருப்திக்கு பார்த்துக்கோங்க!’ என்று பொய் ஜாதகம் கொடுக்கப்படலாம்.
 பையனுக்கோ, பெண்ணுக்கோ ஜாதகத் தில் தோஷம், திருமணத் தடை போன்றவை இருந்தால், ‘ஜாதகமே எழுதலை’, ‘நாங்க ஜாதகமெல்லாம் பார்க்கிறதில்லை’, ‘எங்க கிராமத்துல வண்டி (பஸ்) போற சத்தத்தைக் கேட்டுத்தான் நேரத்தை தெரிஞ்சுக்குவோம். அதனால, பிறந்த நேரமெல்லாம் துல்லியமா தெரியாது; ஜாதகமும் சரியா இருக்காது’ என்றெல்லாம் சமாளிப்பார்கள். விசாரிப்பது அவசியம்.
 ஜோதிடப் பொருத்தத்தை பெண்/மாப்பிள்ளை வீட்டார் பரிந்துரைக்கும் இடத்தில் மட்டும் பார்க்காமல், ஒன்றுக்கு இரண்டு, மூன்று இடங்களில் பார்த்துத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.
 ஒரு பையன்/பெண்ணை பணத்துக்காக, அழகுக்காக, குடும்பத்துக்காக என ஏதோ ஒரு காரணத்துக்காக திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால்... புரோக்கர்களையும், ஜோசியர்களையும் ‘அது சூப்பர் வரன்!’ என்று சொல்ல வைக்கப் பயன்படுத்திக்கொள்வார்கள்... கவனம்.
 ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ என ஆசை வார்த்தைகள் சொல்லிப் பேசினால், வெளிநாட்டில் என்ன வேலையில் இருக்கிறார், குணத்தில் எப்படி, ஏற்கெனவே திருமணமானவர் போன்ற பிரச்னைகள் ஏதும் இருக்கிறதா என்று தீர விசாரிக்க வேண்டும். வெளிநாட்டுக்குக் கூட்டிச் சென்று பெண்ணை கண்ணீர் வடிக்க வைத்தால், சிக்கலாகிவிடும்.
 எந்த நிபந்தனையும் இல்லாமல் பெண்ணை மட்டும் கொடுக்கச் சொல்லி அவசரப்படுத்தினால், அவரின் பின்புலத்தை ஆராய வேண்டியது அவசியம்.
 திருமணத் தகவல் மையங்கள், மேட்ரி மோனியல் சைட்கள் மூலமாக வரன் தேடுபவர்கள், அங்கே அளிக்கப்பட்டுள்ள தகவல்களை மட்டும் வைத்து முடிவெடுக்காமல், அவற்றை எல்லாம் அப்படியே நம்பி விடாமல், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்களின் உறவினர்கள் என்று ஏதாவது ஒரு சோர்ஸ் மூலம் கண்டிப்பாக விசாரித்த பின்னரே முடிவெடுங்கள்.
 தரமில்லாத மாப்பிள்ளைக்கு எப்படி யாவது ஒரு ஏமாளி, ஏழைக் குடும்பத்தில் பெண் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பு, உறவுகளுக்குள் அதிகம் இருக்கும். ‘கல்யாணமானா சரியாயிடுவான்’ என்று மாறிமாறி வந்து பெண் கேட்டாலும் மசியாதீர்கள். திருமணத்துக்குப் பின்னும் திருந்தாமல் போனால், பாழாவது பெண்ணின் வாழ்க்கைதான்.
 28 வயது என்று சொன்ன மாப்பிள்ளை, பார்க்க 35 வயது ஆள் போலத் தெரிகிறாரா? ‘வெயிலில் அலைஞ்சு இப்படி முடி கொட்டிருச்சு’ என்று சப்பைக்கட்டு கட்டினால், உடனே நம்பி 20 வயதுப் பெண்ணைக் கொடுக்காதீர்கள். ‘கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணிடுவோம். விண்ணப்பிக்க பர்த் சடிஃபிகேட் கொடுங்க’ என்று நைச்சியமாகப் பேசி, பிறந்த தேதிச் சான்றிதழ் வரை வாங்கிப் பார்த்து செக் செய்துவிடலாம்... தவறில்லை.
 ‘பையன் பிசினஸ் பண்றான். நல்லா சம்பாதிக்கிறான். அப்பா, அம்மா இறந்துட்டாங்க. நாங்கதான் அவன் சொந்தம்’ என்று மொத்தமே ஐந்து, ஆறு ஆட்களுக்குள் வந்து சம்பந்தம் பேசுகிறார்களா? அவர்களின் பூர்விகம் புலப்படவில்லையா? உஷார். சொந்தம் என்று சில ‘கேரக்டர்களை’ பணம் கொடுத்து செட் செய்து, பெண் பார்த்து, திருமணம் முடிக்கும் ஃபோர்ஜரிகள் பெருகிய உலகம் இது. கூறியது போல அவனுக்கு சொந்த வீடும் இருக்காது, நல்ல வருமானமும் இருக்காது.
குறிப்பு: இது மிகச் சிறிய எச்சரிக்கைப் பட்டியலே! கல்யாணக் களத்தில் யாராலும், எப்படி வேண்டுமென்றாலும் ஏமாற்றப்படலாம். பையன் அல்லது பெண் என இரண்டு தரப்பிலுமே ஏமாற்று வேலைகள் இருக்கலாம் ஜாக்கிரதை!
தீர விசாரிப்பது மட்டுமே தீர்வு!



No comments:

Post a Comment