சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Nov 2015

கொட்டித் தீர்த்த மழை... கொண்டாட வேண்டியவர்கள்... திண்டாடிய சோகக் கதை!

'பேய்ஞ்சு கெடுக்கும்... இல்லனா, காய்ஞ்சு கெடுக்கும்' என்று மழையைப் பார்த்து திட்டித் தீர்ப்பது நம்மவர்களின் வழக்கம். ஆனால், 'கொடுக்காட்டியும் திட்டுவானுங்க... கொடுத்தாலும் திட்டுவானுங்க' என்று நம்மைப் பார்த்து மழை சொல்லும் நிலைதான் நீடிக்கிறது தமிழகத்தில்!
ஆம், கடந்த இரு வாரங்களில் பரவலாக பேய்மழைக் கொட்டித் தீர்த்துள்ளது தமிழகத்தில்! அதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 90 சதவிகித நீரும் கடலுக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறதே தவிர... அதை சேமித்து வைத்து பிற்காலத்துக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவே இல்லை!

2008-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பெருமழையைக் கண்டிருப்பது தற்போதுதான். சென்னை மற்றும் அதன் தெற்கு, வடக்குப் பகுதிகளில் விரிந்து கிடக்கும் நகர்ப்புறப் பகுதிகள், தற்போது நாள் கணக்கில் மழைநீரில் மிதந்தது... வரலாறு காணாத நிகழ்வு. எப்போதும் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகள்தான் மழையில் பாதிக்கப்படும். ஆனால், இம்முறை செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், முடிச்சூர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், மாதவரம், எண்ணூர் என்று சென்னை மற்றும் சென்னையை ஒட்டிக் கொண்டிருக்கும் அனைத்துப் பகுதிகளுமே தண்ணீரில்தான் தத்தளித்தன!
இப்படி பெருவெள்ளமாக பாய்ந்து வந்த நீர், சாலைகளை மூழ்கடித்து, வீடுகளைச் சூழ்ந்து ஒட்டுமொத்தமாக இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டதால், மழையின் மீது மக்கள் பலரும் கோபப்பார்வையை வீசியபடி உள்ளனர். போதாக்குறைக்கு, ''மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, மூன்றே நாட்களில் பெய்ததுதான் காரணம்" என்று ஆளாளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், "ஆறு மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை, ஆறே நாட்களில் பெய்தாலும், தாங்கக்கூடிய பூமிதான் சென்னை. அந்தத் தன்மையை மாற்றி, சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொண்டது நாம்தான்" என்று வருத்தம் பொங்கச் சொல்கிறார், 'கேர் ஆஃப் எர்த்' அமைப்பைச் சேர்ந்தவரும், ஏரிகள், நீர் நிலைகளை பற்றி ஆய்வு செய்து வருபவருமான சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ வெங்கடேசன்.

இயற்கையிடம் சதிவலை இல்லை!
“மக்களை அழிக்கும் உள்நோக்கமே, சதித்திட்டமோ எப்போதுமே இயற்கையிடம் கிடையாது. அதன்போக்கில்தான் அது போய்க் கொண்டிருக்கிறது. நமக்கு நாமே சதிவலைகளைப் பின்னிக் கொண்டு, பிறகு இயற்கையின் மீது பழிபோட்டுக் கொண்டிருக்கிறோம். 15 ஆண்டுகளாக சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்து வருகிறேன்.
1840லிருந்து இப்போது வரைக்கும் மழை குறித்தான பதிவை ஆராய்ந்திருக்கிறேன். ஆனால், இப்போது நடந்தது போன்று மக்களிடையே பயமும், பேரிடர்களும் இதற்குமுன் ஏற்பட்டதில்லை. பெருகிவரும் குடியிருப்பு பகுதிகளும், மக்கள் அடர்த்தியுமே காரணமாகி நிற்கின்றன.
50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சுற்றியுள்ள கீழ்க்கட்டளை, மேடவாக்கம் பகுதிகளில் கிணற்று பாசனம் கிடையாது. மழைக் காலத்தில் கிடைக்கும் மழைநீரை வைத்துதான், விவசாயம் நடந்தது. அந்தளவுக்கு தண்ணீர் செழிப்பு கொண்டது சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சென்னை என்பது நெய்தல் நிலப்பகுதி. இந்த நிலத்துக்கான தாமரைப் பூவானது... இங்குள்ள ஏரிகளிலும், குளங்களிலும், தாங்கல்களிலும் தற்போதுகூட இருப்பதிலிருந்தே இது எப்படிப்பட்ட வகை பூமி என்பதை அறிய முடியும். மீனவக் கிராமங்களை உள்ளடக்கிய, விவசாயம் நடந்து வரும் பகுதியாக இருந்ததால், நீரை தக்கவைத்துக் கொள்கிற சதுப்பு நிலப்பகுதிகளாகவும், ஏரிகளாகவும் சென்னை இருந்தது. 1906-ம் ஆண்டு, கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன. 90 சதவிகிதம் களவாடப்பட்டுவிட்டன.
 
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீரைத் தேக்கி வைக்கும் சதுப்புநிலக் காடுகள், அலையாத்தி காடுகள், மணல்மேடுகள், நீர்ப் பிடிப்பு பகுதிகள் எல்லாம் புறம்போக்கு நிலங்கள் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டன. பிறகு வந்த நம்முடைய அரசுகள் அனைத்துமே 'அரசு நிலங்கள்' என்ற பெயரில்... தொழிற்சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், அரசுக் கட்டடங்கள், பேருந்து நிலையங்கள் என்று பொது நிலங்களை தாரை வார்த்தன... தொடர்ந்து தாரை வார்த்தும் கொண்டிருக்கின்றன. இதனால், பெரும்பாலான நீர்நிலைகள், பட்டா நிலங்களாக மாறிவிட்டன. விளைவு... வெள்ள சோகம்.

இத்தனைக்கும் நடுவே, சென்னையைச் சுற்றிலும் இன்றைக்கும்கூட விவசாயம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், தாறுமாறான குடியிருப்பு பெருக்கத்தால், நீர்நிலைகளில் தேங்கும் கொஞ்சநஞ்ச நீரையும் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏரிகளில் வீடுகளைக் கட்டியிருப்பவர்களில் சிலர், கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் கொடுமையும் நடக்கிறது. இதனால், விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாத கொடுமை ஏற்படுகிறது.

நீர் சேமிக்கும் வரலாறு...
வேளச்சேரி ஏரி ஒரு சோறு!

நீர் பயன்பாட்டுக்கு முன்னோடிகளான நாம், இன்று ஏரிகள் அழிவு குறித்து வரலாறு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சென்னை ஏரிகளின் அமைப்பு எப்படி இருந்தது, அது எப்படி ஆக்கிரமிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது என்பதற்கு ஒரு சோறு பதமாகத் திகழ்கிறது வேளச்சேரி ஏரி. 1965-களில் வேளச்சேரி ஏரி என்பது செக்போஸ்ட் பேருந்து நிலையத்திலிருந்து, எதிர்புறமாக உள்ள ஆதம்பாக்கத்தை வளைத்துக் கொண்டு, இன்றைய வேளச்சேரி ரயில் நிலையம் வரை இருந்தது. ஏரியின் இக்கரைகளாகத்தான் தண்டீஸ்வரர், எல்லைக் காத்த மாரியம்மன், நரசிம்மர் கோயில்கள் இருக்கின்றன. ஆனால் இப்போது, இந்த மாரியம்மன் கோயிலை மாநகராட்சி அலுவலக கட்டடங்களுக்கு இடையில்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். எதிர்ப்புறம் இப்போதுள்ள மடுவாங்கரை மேம்பாலம் வரையிலும் கரை இருந்தது. சதுப்புநிலப் பகுதிகளில் நெல், காய்கறிகள் விவசாயமும், ஏரிக் கரைகளில் பனைத் தொழிலும், ஏரிகளில் மீன்பிடித் தொழிலும், கரையோரங்களில் நெசவுத்தொழிலிலும் மக்கள் ஈடுபட்டு வந்தனர்.
வேளச்சேரி ஏரியின் தண்ணீர், வீரங்கால் ஓடை (வாய்க்கால்) வழியாக பள்ளிக்கரணை சதுப்புநிலக் காடுகளுக்குச் செல்லும். அங்கிருந்து ஒக்கியம் மடுவு வழியாக, பக்கிங்காம் கால்வாய் சென்று, கடலுக்கு செல்லும். இப்படிதான் வேளச்சேரி ஏரியின் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. ஏரியில் ஆங்காங்கே குடியிருப்புப் பகுதிகளையும், சாலைகளையும் துண்டு துண்டாக உருவாக்கினார்கள். குடியிருப்புப் பகுதிகள் மேடாக, மேடாக சாலைப் பகுதிகள் பள்ளமாகின. அதிக மழையால் வேளச்சேரி சாலைகளில் படகு போக்குவரத்து நடப்பதற்கு இந்த ஆக்கிரமிப்பே காரணம். இதற்கடுத்து ரானே கம்பெனி, ஹோட்டல்கள், ஃபீனிக்ஸ் மால் என்று அடுக்கடுக்காக வேளச்சேரி ஏரிப் பகுதிகளில் உருவாகின. ஆனால், தண்ணீர் வெளியேற்றுவதற்கான வடிகால் பாதைகளை உருவாக்காமலே விட்டுவிட்டனர். வேளச்சேரி ஏரியின் 70 சதவிகித பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஒழிக்கப்பட்டுவிட்டது. இன்று 100 அடி சாலையின் ஓரத்தில் 75 ஏக்கரில் பரிதாபமாக காட்சியளிக்கிறது வேளச்சேரி ஏரி. மொத்தத் தண்ணீரையும் இந்த ஏரிக்குள் அடைக்க முயல்கிறார்கள். அது முடியுமா?

தென்சென்னையில் வேளச்சேரி என்றால், வடசென்னையில் மாதவரம், கொளத்தூர், ரெட்டேரி என பல ஏரிகளும் இதே முறையில்தான் ஆக்கிரமிக்கப்பட்டு, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்து வருகின்றன. மத்திய சென்னையில் மாம்பலம், நுங்கம்பாக்கம் ஏரிகள் அழிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டன. கோயம்பேடு பகுதியில் பரந்துவிரிந்து கிடந்த நீர்நிலை அழிக்கப்பட்டு இன்று அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. மதுரவாயல் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிள் உள்ள ஏரிகள் அழிக்கப்பட்டதால், அந்தப் பகுதிகளும் இந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளன.
சென்னை மாநகராட்சி, இருக்கிற ஏரிகளின் பரப்பளவுகளுக்குள்ளே வெள்ளநீரை சேமிக்க நினைக்கிறது. ஆனால், தண்ணீரை பங்கீட்டு முறையில் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பிச் சேகரித்தால் மட்டுமே வெள்ளப்பெருக்கை தடுக்க முடியும். பல ஆலோசனைகள், திட்டங்கள் அரசுகளுக்கு சென்றாலும், அவையாவும் மாறி மாறி வரும் அரசுகளால் கண்டுகொள்ளப்படாமலே கிடப்பில் போடப்படுகின்றன. கண்முன்னே ஆக்கிரமிப்பின் காரணமாக ஏரிகள் அழிந்து கொண்டிருந்தாலும், கண்டுகொள்ளாமல் கடந்து விடுகிறார்கள் மக்கள். காரணம்... ஆக்கிரமிப்பாளர்களுக்கு இருக்கும் அரசியல் உள்ளிட்ட இன்னபிற செல்வாக்குகள்தான். இதற்கு சட்டத்தில் வழிவகை செய்து, நீர்நிலைகளின் மீதுள்ள மக்களுக்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்.

நீர்நிலைக்கு அருகே கட்டடங்கள் கட்டவேண்டும் என்றால், பொறியாளர் மூலம் வரைபடம் தயாரித்து கட்டி முடித்துவிடுகிறார்கள். அப்படியில்லாமல் சமூக ஆர்வலர், சூழலியலாளர், பழைய தண்ணீர் பாசன முறையை அறிந்த ஒருவர் என்று ஒரு குழுவை அமைத்து, அதன் மேற்பார்வையில்தான் குடியிருப்புப் பகுதிகளையோ, அரசு கட்டடங்களையோ உருவாக்க வேண்டும். ஏனோதானோவென்று இன்றைக்கு இருப்பது போலவே உருவாக்கினால், மழை வெள்ள பாதிப்புக்கு என்றைக்குமே விடிவில்லை" என்று ஆதங்கம் பொங்கச் சொல்லி முடித்தார்.

அக்கறை கொள்ள வேண்டியவர்கள்... கவனிப்பார்களா?!

காணாமல் போன ஏரிகள், இன்று என்னவாக இருக்கின்றன?
ஏரிகள்... முன்பு                                இப்போது...

நுங்கம்பாக்கம் ஏரி         வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில பகுதிகள்
மாம்பலம் ஏரி                  பனகல் மாளிகை, மாம்பலம் பகுதியின் சில பகுதிகள்
வேளச்சேரி ஏரி               100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்
அல்லிக்குளம்                  நேரு ஸ்டேடியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
கோயம்பேடு ஏரி             கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்
முகப்பேர் ஏரி                    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு
விருகம்பாக்கம் ஏரி        தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு

ஒரே நாளில் 31.5 செ.மீ!

ஒருங்கிணைந்த சென்னையின் மழையளவு கடந்த 220 ஆண்டுகளில் சராசரியாக 1,248 மி.மீ. 1910, 1980 ஆகிய இரண்டு ஆண்டுகளில்தான் மிகவும் குறைவான மழை பதிவாகியுள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கனமழை கிடைக்கிறது. 2005க்கு பிறகு, இந்த ஆண்டு நவம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரத்தில் 31.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது!

90% நீர்நிலைகள் போயே போச்சு!

1906-ம் ஆண்டு, கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன. 90 சதவிகிதம் களவாடப்பட்டுவிட்டன.

பாடம் சொல்லும் கொல்கத்தா!

அடிப்படையில் சென்னை, கடலூர், திருச்சி போன்றவை நீர்ப்பிடிப்புள்ள நகரங்கள். கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, சேலம் மாநகரங்கள் வனம் மற்றும் நீர்ப்பிடிப்பு சார்ந்த பகுதிகள். திருச்சி, கடலோர பகுதியாக இல்லாததால் தப்பிக்கிறது. ஆனால், சென்னை, கடலூர் நகரங்களை இந்த அடிப்படையைப் புரிந்து, கட்டமைத்திருக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் அப்படித்தான் வடிவமைத்தார்கள். ஆனால், அதன் பின் வந்தவர்கள் சிதைத்துவிட்டனர். அரபிக் கடலை ஒட்டியுள்ள மும்பை நகரமும் இதேநிலையில்தான் உள்ளது. அதேசமயம், இப்போதும்கூட கொல்கத்தாவில் வெள்ளப்பெருக்கு சற்று குறைவு. ஏனெனில் அங்கு சதுப்பு நில காடுகளும், மாங்குரோவ் காடுகளும் ஓரளவுக்கு பராமரிக்கப்படுவதுதான். இன்றைக்கு நம்மைப் போலவே உள்ள தென்அமெரிக்கா, கியூபா போன்ற நாடுகள் நகர நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்பதையும் நாம் மனதில்கொள்ள வேண்டும்!

சென்னையில் ஒரே நாளில் அதிக மழைப்பொழிவு...

அக்டோபர், 21 1846 52 செ.மீ
அக்டோபர் 27 2005 27.3 செ.மீ
நவம்பர் 16, 2015 24.6 செ.மீ

No comments:

Post a Comment