சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Nov 2015

ரஷ்ய சிறுமி உடலில் துடிக்கும் திருவாரூர் இதயம்: சென்னை மருத்துவர்கள் சாதனை!

சென்னையில் ரஷ்ய சிறுமிக்கு திருவாரூரை சேர்ந்த சிறுவனின் இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளது மருத்துவர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு.
 
ரஷ்யாவிலுள்ள, சைபீரியாவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி விக்டோரியா Restrictive Cardio Myopathy என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். விக்டோரியாவின் இதய சதைச் சுவர்கள் இறுகிப்போனதோடு, துடிக்கக் கஷ்டப்படத் தொடங்கியுள்ளது.

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் விக்டோரியா பிழைப்பது அரிது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்டோரியாவின் குடும்பத்தினருக்கு மேலும் ஒருபேரிடி விழுந்தது. அது, ரஷ்ய நாட்டின் மருத்துவச் சட்டப்படி, மழலையரின் உடம்பில் அங்க மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதி கிடையாது. இதனால், செய்வதறியாது திகைத்தனர் விக்டோரியாவின் குடும்பத்தினர். இந்த நிலையில், தரமான இதய மாற்று அறுவை சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குறித்து இணையத்தில் தேடியபோது தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி மருத்துவர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை பற்றி அறிந்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த 2 வயது குழந்தையான ’க்ளெப் குட்ரியாவ்ட்கேவா’விற்கு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில், வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றியவர் டாக்டர் பாலகிருஷ்ணன்.

இவற்றை அறிந்தவுடன் தாமதிக்காத விக்டோரியாவின் குடும்பத்தினர், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து விண்ணப்பித்துள்ளனர். நிலைமையை புரிந்துகொண்ட புதின், இந்தியாவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுவதற்கான அனுமதியை வழங்கினார்.

இந்நிலையில், கடந்த மாதம் திருவாரூர் அருகே, சாலை விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் அனுமதி அளித்திருக்கின்றனர். இதையடுத்து, விக்டோரியாவுடன் குடும்பத்தினர் சென்னை வந்து, குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் விக்டோரியாவை அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, சிறுவனின் இருதயத்தை விக்டோரியாவின் உடலில் பொருத்தி மீண்டும் ஒரு சாதனை படைத்திருக்கிறது டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழு.

இது குறித்து மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "மழலையர் உடல் மாற்று அறுவை சிகிச்சை என்பது அத்தனை சுலபமானதல்ல. எனக்கு இது ஒரு விந்தையாகவே அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து  சிறுவனின் இதயத்தை எடுத்து வந்து ரஷ்யாவில் இருந்து  வந்த ஒரு சிறுமியின் உடலில் பொருத்தி அது துடிக்கிறது என்பது எத்தனை பெரிய விந்தை. மேலும் என் தாயார் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பதால் இது என் மனதிற்கு மிகவும் சந்தோஷமான நிகழ்வாகும்” என்றார்.

விக்டோரியாவின் தாயார் கூறுகையில், "எங்களின் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. என் மகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய மருத்துவர்களுக்கும், அவள் வாழ, தன் மகனின் இதயத்தை அளித்த அந்தத் தாய்க்கும் நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களோடு இந்திய இதயத்தை எடுத்துச் செல்கிறோம் என்பது அளவிடாத மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.


No comments:

Post a Comment