ஒருவர் மட்டும் அமர்வதற்கான இருப்பிடம் காலியாக இருந்தது .. தந்தை மகளிடம் அதில் அமரும்படிச் சொன்னார்.. அவள் மாட்டேன் என மறுத்தாள்.. அவர் அமரப் போனார்.. தடுத்தாள்.. நின்றபடியே பயணம்.. அப்பாவின் வயிற்றைக் கட்டிக் கொண்டாள்.. மூக்கால் அவன் வயிற்றில் உரசினாள்.. முத்தமிட்டாள்.. தலை நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள்.. அவர் சிரித்ததும் ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.. மீண்டும் வயிற்றில் முகம் புதைத்தாள்.. செல்லமாகக் கடித்தாள்.. அவன் நெளிந்தான் .. மீண்டும் அப்பாவின் முகம் பார்த்தாள்.. அவர் வலிப்பதுபோல் பாசாங்கு காட்டினார் .. இப்போது சிரிப்பில்லை அவள் முகத்தில்.. சடுதியில் கடித்த இடத்தில் முத்தம் கொடுத்தாள்.. மீண்டும் முகம் பார்த்தாள் .. அவன் சிரித்தபோது மிகுந்த சந்தோஷத்தில் அவளும் சிரித்தாள்..
அடுத்த நிலையம் ... மூன்று பேர் இறங்கியதால் இடம் கிடைத்தது .. இருவருக்கும் அமர .. அப்பாவும் மகளும் ஒவ்வொன்றில் அமர்ந்தார்கள் ..அடுத்த நொடி… தாவி அமர் மடியில் உட்கார்ந்துக் கொண்டாள் .. அவரும் சந்தோஷமாக ஒரு முத்தமிட்டு அவளை இறுக்கிக் கட்டிக் கொண்ட படியே அமர்ந்தார்.. கொஞ்ச நேரத்தில் அவளின் கை அப்பாவின் காதை ..மூக்கை ..கன்னத்தை என இழுக்கவும் ..தடவவும் .. கிள்ளவும் தொடங்கியது.. அவளது உலகத்தில் அவளும் அவளின் தந்தையும் மட்டுமே..வேறு யாருமே இல்லை... திடீரென கழுத்தை இறுக்கிக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டாள் ..
ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் பெண் இப்படித் தான் தன் அன்பைப் பொழிகிறாள் ... அதில் மாற்றமில்லை..அவள் எந்நாட்டைச் சார்ந்தவளாய் இருப்பினும் .. உரசியும் ..முத்தமிட்டும்..கடித்தும் இழுத்தும் ..கிள்ளியும் ..அது அப்பாவில் தொடங்கி . அண்ணன் தம்பியில் வளர்ந்து ..கணவனிடம் பரிணமித்து ..மக்களிடம் செல்கிறது.... காலம் மாறுகையில் ஆட்கள் தான் மாறுகிறார்கள் ..அவளின் அன்பில் மாற்றமில்லை.. வெளிபடுத்துவதிலும்
பத்து நிமிடம் நானும் வாழ்ந்தேன் .. இதில் சற்றும் குறையா மகள் எனக்கும் இருக்கிறாள் இதே உயரத்திலும் வெளிப்படுத்துதலிலும்... நேற்றும் என் நெஞ்சோடு துயின்றாள் ....
No comments:
Post a Comment