ஒரு பக்கம் உணவுக்காக கையேந்தி நிற்கும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மறுபக்கமோ... உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், தேவையில்லாமல் வீணடிக்கப்படுகின்றன. உற்சாக கொண்டாட்டங்கள், நட்சத்திர உணவகங்கள், ஆடம்பர திருமணங்கள் என்று பல இடங்களிலும் இப்படி வீணடிக்கப்படும் உணவுகள்... காணும்போது கண்ணீரைத்தான் வரவழைக்கும்!
இந்நிலையில்... ''உலக அளவில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் 50 சதவிகிதம்... தேவையற்ற காரணங்களால் வீணாகிக் கொண்டிருக்கிறது'' என்று வருத்தம் பொங்க தன்னுடைய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது... இங்கிலாந்தில் உள்ள 'இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மெக்கானிக்கல் இஞ்ஜினியர்ஸ்' எனும் அமைப்பு.
''கடைகளில் காய், கனிகள் வாங்கும்போது... அவை பார்ப்பதற்கு சீராகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்கிற மனோபாவம் காரணமாக, பணக்காரர்களால் காய்கள் மற்றும் கனிகள் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. இப்படி ஒதுக்கப்படுபவை.... பெரும்பாலும் வீணாக குப்பைக்குத்தான் செல்கின்றன. அதேபோல, கூடுதலாக இறைச்சி சாப்பிடும் பழக்கமும் தற்போது அதிகரித்துள்ளது. இப்படி பல காரணங்களால் உணவுப் பொருட்கள் வீணாகின்றன.
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவை வழங்கத் தேவைப்படும் இயற்கை வளங்கள் பூமியில் குறைவாகவே உள்ளன. இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இன்னும் கூடுதலாக முன்னூறு கோடி பேருக்கு உணவளிக்க வேண்டிய நிலையும் ஏற்படும். இத்தகைய சூழலில்... உணவை விரயம் செய்யும் துர்பாக்கியம் இனியும் தொடரக் கூடாது'' என்று கேட்டுக் கொண்டிருக்கும் அந்த அமைப்பு...
''நீராதாரங்களின் மேலாண்மையும் மோசமாக இருக்கிறது. தவறான இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அரசுகளும் தனியாரும் தோண்டுவது இதற்கு ஓர் உதாரணம். பெருமளவில் நீர் ஆவியாகும் வகையில் விவசாயம் செய்வது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, சொட்டுநீர் பாசனத்தை மேற்கொள்வது பலன் தருவதாக இருக்கும்'' என்றும் அந்த ஆய்வறிக்கையில் கோடிட்டு காட்டியுள்ளது!
No comments:
Post a Comment