சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Jan 2013

நெல்லை கல்லூரி மாணவிகளின் பொங்கல்.



         கிட்டத்தட்ட நகர வாசிகள் மறந்தே விட்ட பொங்கல் பண்டிகையின் 


பாரம்பரியத்தை விடாமல் கடைபிடித்து வருவது கிராம மக்கள்தான். மற்ற 

பண்டிகைகளைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத கிராமவாசிகள் பொங்கல் 

பண்டிகை என்றாலே ஒரு மாதத்திற்கு முன்னரே உற்சாகமாக 

தயாராகிவிடுகின்றனர். வீடுகளுக்கு வெள்ளையடிப்பது. பழைய பொருட்களை 

தூக்கி கடாசிவிட்டு வீட்டை சுத்தம் செய்வது இப்படி பல வேலைகள் மார்கழி 

மாதம் முழுக்க நடக்கும்.

           நகர்புறங்களில் நாகரிக மாற்றம், மக்கள் நெருக்கம் போன்ற பல்வேறு 


காரணங்களால் பொங்கல் பண்டிகையின் தாக்கம் மெல்லமெல்ல 

குறைந்துகொண்டே வருகிறது. ஆனால் எந்த நாகரிகம் வந்தால் என்ன, நாங்கள் 

இன்னும் மாறவில்லை. பழமையை விடாது கடைப்பிடிப்போம் என 

உற்சாகமாகச் சொல்கிறார்கள் சில தாவணி நங்கையர்கள். இவர்கள் கல்லூரி 

மாணவிகள் என்பதுதான் இன்னும் விசேஷம்.

                நெல்லை மாவட்டம் குற்றாலம் பராசக்தி கல்லூரியைச் சேர்ந்த 


மாணவிகள்தான் இந்தப் பெருமைக்குரியவர்கள். குற்றாலத்திற்கு அருகில் 

இருக்கும் லாலா குடியிருப்பு என்ற கிராமத்தில் & புகையில்லா பொங்கலை 

கொண்டாடுகிறோம் வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தனர் அம் 

மாணவிகள்.

             சுடிதார், ஜீன்ஸ் என கலக்கலாய் உடையணிந்து கல்லூரி மாணவிகள் 


பொங்கலிடுவார்கள், வித்தியாசமாய் இருக்கும் என நினைத்து 

லாலாகுடியிருப்பு கிராமத்திற்குச் சென்றால் அங்கே எதிர்பாராத காட்சி. 

அத்தனை மாணவியரும் பாவடை தாவணியில் வந்திருந்தனர். ஒரு சில 

மாணவியர்கள் மட்டும் சேலை (வீட்டில் தாவணி இல்லையோ?)அணிந்து 

வந்திருந்தனர். மருந்துக்கு கூட ஒரு சுடிதார், ஜீன்ஸ் அணிந்த மாணவிகளைக் 

காணோம்.

            ஊரின் மையப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் வாசலை சுத்தப்படுத்தி 


அழகாகக் கோலமிட்டு தயார் படுத்தியிருந்தனர். இரண்டு பொங்கல் பானைகள்.. 

ஆனால் கிராமத்து மண் அடுப்பு இல்லை ஏதோ வித்தியாசமாக இருந்தது. அட.. 

கேஸ் ஸ்டவ். ஆஹா, நீங்களும் நகரத்து ஸ்டைலை விடலியா என்று 

மாணவிகளிடம் கேட்டாம்.

          அதற்கு ஹலோ இங்கே வாங்க...நான் விளக்கம் சொல்கிறேன் என்று ஒரு 


குரல்.. திரும்பினால் கயற்கன்னி மேடம். குற்றாலம் பராசக்தி கல்லூரி 

பொருளாதாரத்துறை பேராசிரியை. (சே.. பொண்ணுங்க கூட பேசவே 

விடமாட்டாங்களே...) எங்கள் கல்லூரி பொருளாத்துறை சார்பில் சுற்றுச்சூழல் 

பாதுகாப்பு அமைப்பு என்ற ஒரு அமைப்பை இயக்கி வருகிறோம். சுற்றுச்சூழல் 

மாசு படுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பிரச்சாரம் செய்வது இந்த 

அமைப்பின் நோக்கம் என்று மேடம் லெக்சர் எடுக்க ஆரம்பிக்க, பின்னாடி 

மாணவிகள் மத்தியிலிருந்து, ஐயோ பாவம், அந்த ஆளு (நம்மைத்தான்) 

புரொபசர் கிட்ட வசமா மாட்டிக்கிட்டாரு என்று ஒரு குரல் வந்தது. மேடம் 

அதை அலட்சியப்படுத்திவிட்டு நம்மிடம் தொடர்ந்தார்.

              இந்த கிராமத்தில் எங்களோட கான்செப்ட்டே புகையில்லாத பொங்கல் 


என்பதுதான். அதனால சாண எரிவாயு மூலமா பொங்கல் வைக்கிறது குறித்து 

கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இந்த கொண்டாட்டம். 

அதனாலத்தான் கேஸ் அடுப்பு. மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி இது சிட்டி 

ஸ்டைல் இல்லே. கிராமங்களில் பொங்கல் வைக்க பனை அல்லது தென்னை 

ஓலை, விறகு போன்றவற்றைத்தான் பயன்படுத்துவாங்க, அதனால் ஏற்படும் 

புகையால் காற்று எவ்வளவு மாசு படுகிறது என்பது கிராம மக்களுக்கு 

தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால்தான் அதை வலியுறுத்தி ஓலை, 

விறகிற்குப் பதில் சாண எரிவாயுவை பயன்படுத்தி பொங்கல் வைக்க 

வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். எங்கள் மாணவிகள் வீடுவீடாகச் 

சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர் என்றார்.

பொங்கப்பானைய அடுப்புல வெச்சு, தேங்காயை உடைச்சு அந்த தண்ணியை 


பானையில் ஊற்றி, அப்புறம் அரிசியை களைந்து அந்த தண்ணீரையும் ஊற்றி 

டிபிக்கல் கிராமத்து பொங்கலை நம் கண்முன்னே கொண்டு வந்தனர் 

மாணவிகள். அவ்வூர் பஞ்சாயத்து தலைவியான ராதா சீனித்துரைதான் 

அவர்களுக்கு இந்த விஷயத்தில் ஒத்தாசையாய் இருந்தார்.

எத்தனையோ கிராமங்கள் இருக்கையில் எங்க ஊரை இவர்கள் தேர்ந்தெடுத்து 


எங்களுக்கு பெருமையான விஷயம்ங்க. அதான் நானும் அவங்க கூடமாட 

இருந்து பிளைங்களுக்கு எல்லாம் சொல்லித்தேன் என்றார் பெருமை பொங்க.

       சரி, பொங்கல் பொங்கட்டும் அதுவரை ஆட்டம் பாட்டம் நடத்தலாம் என்று 

மேடம் அறிவித்ததும் கும்மி, கோலாட்டம், கிராமிய நடனம், மிமிக்ரி என 

பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கலக்கினர் மாணவிகள். அதிலும் டான்ஸ்தான் 

மாணவிகள் ஆடிய ஆட்டத்திற்கு ஊர் மக்களில் சிலரும் சேர்ந்து ஆட 

ஆரம்பித்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கையில் திடீரென 

குலவையிடும் சத்தம் காதைப்பிளந்தது. பொங்கல் பொங்கிடுச்சாம். 

அதற்குதான் இந்த குலவை. சில மாணவிகளுக்கு குலவையிடத் 

தெரியவில்லை. இருந்தாலும் ஹோ..வென்று உற்சாகக் கூச்சலிட்டனர். 

அட..பரவாயில்லையே இந்தக்காலத்து புள்ளங்க அதுவும் காலேசு புள்ளைங்க 


கொல வுடுதே (குலவையிடுவதைத் தான் இப்படிச் சொல்கிறார்) என்று 

வியந்ததுடன் தன் இளமைக்கால நினவுகளில் மூழ்கினார் இசக்கியம்மாள் 

என்ற 90 வயதான மூதாட்டி. நாங்கள்லாம் அந்தக் காலத்துல இப்படித்தான் 

கும்மியடிப்போம், குல வுடுவோம், ஆனா எம் மக்கமாருகளுக்கு அது தெரியல, 

இந்த புள்ளைங்க நல்ல குல வுடுதே, சபாசு என்று தன்பங்குக்கு பாராட்டினார். 

பாட்டியின் பாராட்டைப் பெற்ற மாணவிகள், ஹேய் எல்லோரும் பாட்டிக்கு ஒரு 

ஓ போடுங்க என்று சொல்ல அடுத்த நிமிடம் ஓ என்ற கரவொலி 

காதைப்பிளந்தது.

            அடுத்த சில நிமிடங்களில் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி காரில் வந்து 


இறங்க, மாணவிகள் உற்சாகமிழந்தனர். ஏய், பிரின்ஸ் மேம் வந்தாச்சுடி.. என்று 

கிசுகிசுத்துக் கொண்டனர். இதைக் கண்ட முதல்வர் இயல்பா இருங்க நல்ல 

விஷயம்தானே என்று மாணவிகளைப் பாரட்ட மாணவிகளிடம் மீண்டும் 

உற்சாகம் தொற்றிக் கொண்டது. பிரின்ஸ்பால் பார்க்க வேண்டும் என்பதற்காக 

மறுபடியும் ஆட்டம் பாட்டத்தை நடத்தினர்.

             மல்கர்பீவி என்ற மாணவி இந்த பொங்கல் பண்டிகையை ரொம்பவும் 


உற்சாகமாய் கொண்டாடினார். அவரிடம் இது பற்றி கேட்டபோது, இது 

புகையில்லா பொங்கல் மட்டுமல்ல, சமத்துவப் பொங்கலும் கூட, எங்களைப் 

போன்ற இஸ்லாமிய மாணவியரும், கிறிஸ்தவ மாணவியர்களும் எந்த 

பாகுபாடுமின்றி இணைந்து கொண்டாடினோம். ரொம்பவே மகிழ்ச்சியான அதே 

சமயம் வித்தியாசமான அனுபவம் என்றார்.

          அப்புறம் நாங்க கிளம்புறோம் என்றதும், அவ்வளவு சீக்கிரம் நீங்க தப்பிக்க 


முடியாது. நாங்க பண்ணின பொங்கலை டேஸ்ட் பண்ணிட்டுதான் போகனும் 

என்று சில மாணவிகள் சொல்ல, ஏய் விட்டுருடி அவங்களை பாவம், ஒரே 

நேரத்துல பல தண்டனையை அவங்க தாங்க முடியாது என்று ஒரு மாணவி 

கமெட்ன்ட் அடிக்க.. ஆஹா, அப்ப நாமாளாத்தான் வந்து மாட்டிக்கிட்டோமா 

என்று வடிவேலு ஸ்டைலில் சொல்லிவிட்டு ஆளை விடுங்கப்பா என்றபடி நாம் 

எஸ்கேப். 

No comments:

Post a Comment