சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jan 2013

மழை நீரை சேமிப்பது காலத்தின் கட்டாயம்.--உபயோகமான தகவல்கள்



        மழைநீரை சேமிக்க வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல்படலாம். ஒன்று மழைநீரை நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது. நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய ஒரு சுமார் மூன்றடி விட்டமும் 8 -10 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கற்களை சுமார் 6 – 8 அடிக்கு நிரப்பி பின் அதன் மேல் 1 – 2 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி, கூரையில் இருந்து வரும் மழை நீர்க்குழாயைக் கொண்டு அதற்குள் விட வேண்டும். இப்படிச் செய்தால் தான் மழை நீர் நிலத்தடி நீரைச் சென்றடையும்.

மழை நீரை நிலத்தடியில் சேமிக்கும் முறை:
சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
        ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும்,  தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும்,  தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.
           இவைகள் தமக்குள்ளும்,  தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சேமிக்கப்படுகிற மழைநீரை,  தம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றன. நம்முடைய மக்கள் அன்றாட தேவைக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து,  கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான ஒரு சில காரணங்கள்... சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டன. அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியை விட குறைவாகவே இருந்தது.
         ஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும், கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும்,  தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் கடின பாறை, ஒவ்வொரு ஆழத்தில் அமைந்துள்ளது.
         உதாரணமாக, சில பகுதியில் மூன்று அடி ஆழத்திலும்,  சில பகுதியில் 60 அடி ஆழத்திலும் ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் அமைந்துள்ளது. இதை பொருத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது.  மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.
       மழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 - 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள்,  மழை நீரை அதிக அளவில் பூமியில் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.

வாஸ்து காரணம் காட்டி கிணறை மூட வேண்டாம்:
                   மழை நீரை, நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தவும்,  அதை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ளவும்,  தமிழக மக்களுக்கு ஒரு சில ஆலோசனைகள்.
ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயல்.
      இக்கிணறுகள், வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.
     அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து,  இப்போது பயன்படுத்தாமல் இருந்தால், அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.
         ஏனென்றால், அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில், மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கிணற்று நீரின் தன்மையையும் சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத ஆழ்துளை கிணற்றை (கடின பாறை வரை) கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
          மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும், மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். அதை அம்மாதங்களில் எடுத்து உபயோகித்து,  தீர்ந்த பின், குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம், கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
         ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை... ஆழமான ஆழ்துளை கிணறுகள், கடின பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இப்படிசெய்வதால், மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடுகிறது. அதற்கு பதிலாக, மேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் விரிசல் (துளையுள்ள) உள்ள குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை. இப்படித்தான் செய்ய வேண்டும் என பொதுமக்கள், கிணறு தோண்டுபவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment