இப்போது பெட்டிக்கடை முதல் மெகா மால் வரை அழகுப் பொருட்களின் அணிவகுப்புதான். நிறத்துக்கு சிகப்பழகு க்ரீம், பருவைப் போக்க ஆன்டிசெப்டிக் கிரீம், கரும்புள்ளி மறைய ஃபேஸ்பேக், முகம் கழுவ ஃபேஸ்வாஷ், வெயிலுக்கு சன்ஸ்கிரீன் என்று தலை முதல் கால் வரை பயன்படுத்த ஆயிரக்கணக்கில் அழகு சாதனப் பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று பலருக்கும் குழப்பம் வேறு. ஆனால், அத்தனையும் ரசாயனங்கள் கலந்தவை என்பதால், அழகோடு ஆபத்தும் சேர்ந்து வரும் என்பதுதான் நம்மை அச்சுறுத்தும் உண்மை.
பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் சோடியம் லாரில் சல்பேட் Sodium Lauryl Sulfate
(SLS)), தாலேட் (Phthalate), பாரபின் (Paraben) மற்றும் ட்ரைக்ளோஸின் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன' என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த அக்குபங்க்சர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் ஆர். கீர்த்தனா.
அழகு சாதனப் பொருட்களில் உள்ள ரசாயனம் மெதுவாக நம் சருமத்தினுள் ஊடுருவி, உடலின் வெவ்வேறு உறுப்புக்களில் பிரச்னையை உண்டாக்கும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் பிரச்னை அல்லது ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்். ஆனால், நாம் வேறு ஏதோ காரணங்களால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என நினைப்போம். இந்த வகை நச்சுக்களால், புற்றுநோய் வருவதற்கும்கூட வாய்ப்பு உள்ளது .
டியோடரன்ட் மற்றும் சிந்தெடிக் ஷாம்பூகளில் வாசனைக்காகச் சேர்க்கப்படும் தாலேட்ஸ், நகப்பூச்சுக்களில் சேர்க்கப்படும் பென்ஸீன் போன்றவை புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடியவை. உதட்டுச் சாயத்தில் சேர்க்கப்படும் ரசாயனம், சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும். சருமப் பராமரிப்புக்கான சாதனங்களில் கிருமிகள் அண்டாமல் இருக்க சேர்க்கப்படும் ட்ரைகுளோஸின், தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும். அழகுப் பொருட்கள் அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்க, பாரபின் சேர்க்கப்படுகிறது. இது, நம் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியது.
ஆன்ட்டி ஏஜிங் கிரீமைத் தடவும்போது, முகம் பொலிவாகத் தெரியும். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே முகத்தை வறண்டுபோகச் செய்துவிடும். கண்களில் போடும் மஸ்காராவினால் கண் எரிச்சல், கண் இமைகளின் முடி உதிர்தல் போன்றவையுடன், பாக்டீரியா தொற்றும் உண்டாக வாய்ப்பு உண்டு.
பல் மஞ்சளாக இருந்தால், அதற்கு பாலீஷ் போடுவதை விட்டுவிட்டு, பெருங்குடலைச் சுத்தம் செய்தால் போதும். கல்லீரல் சரியில்லை எனில், உணவில் இருக்கும் எண்ணெயைச் செரிக்க முடியாமல், சருமத்தின் வழியாக எண்ணெய் வெளியேறும். முகத்தை ஃபேஸ்வாஷ் போட்டுக் கழுவுவதைவிட, கல்லீரலைச் சரிசெய்தால் போதும். எண்ணெய் இல்லாத, சுலபமாகச் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். மேலும், முகத்தில் கரும்புள்ளிகள், கருவளையம் தோன்றுவதற்கும் நீரின் அளவு குறைவதே காரணம். சருமம் ஈரத்தன்மையுடன் இருக்க, மாய்ஸ்ச்சரைசர் க்ரீம் பயன்படுத்துவதைவிட, அடிக்கடி முகத்தில் தண்ணீரைத் தெளித்துக் கொள்ளலாம். மன உளைச்சலால் முகத்தில் சுருக்கம் வரலாம். அதற்கு, க்ரீம்களைத் தடவாமல், நட்ஸ் எடுத்துக்கொள்ளுதல், யோகா, பிராணாயாமம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான நேரத்தில்தான், கல்லீரலும் பித்தப்பையும் நன்கு வேலை செய்து, உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். சரியான நேரத்தில் தூங்குவது அழகுக்கு அத்தியாவசியத் தேவை. இளம் வெயில் நம் மேல் பட்டால், பாக்டீரியா தொற்று மற்றும் பூஞ்சைத் தொற்று போன்றவை வராமல் காக்கலாம். ஹார்மோன்கள் சமச்சீரின்மையால், பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்தல் போன்ற பிரச்னைகள் வரும். யோகப்பயிற்சிதான் இதற்கு சிறந்த தீர்வு. வேக்ஸிங், திரெடிங் தேவையே இல்லை.
அடிக்கடி முகம் மலரச் சிரித்தால், முகத்தில் சீக்கிரம் சுருக்கங்கள் வராது. காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள்தான் அழகைக் கூட்டுகிறது என்பது பலரது அபிப்பிராயமாக இருக்கிறது. ஆனால், நம் உடல் ஆரோக்கியமாக இருந்தாலே போதும்... அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்கிற டாக்டர் கீர்த்தனா, செயற்கை அழகு சாதனப் பொருட்களுக்கான மாற்று அழகுப் பொருட்களையும் பட்டியல் இடுகிறார்.
அப்புறம் என்ன, அழகா இருங்க... அலர்ட்டா இருங்க!
மாற்று வழிகள்
- க்ளென்ஸர்: வறண்ட சருமத்துக்கு, பயத்த மாவுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி, சிறிதுநேரம் கழித்துக் கழுவலாம். எண்ணெய்ப் பசையுள்ள சருமத்துக்கு, கடலைமாவும் தயிரும் சேர்த்து உபயோகிக்கலாம். பழக்கூழை முகத்தில் தடவி வைத்திருந்து கழுவுவதால், முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடலாம். எலுமிச்சைச் சாறும் தேன், கஸ்தூரி மஞ்சள் கலந்த கலவையும் சருமத்தை சுத்தப்படுத்தக்கூடியவை.
-
- ஃபவுண்டேஷன்: அரோரூட் மாவு, கொக்கோ பவுடர், லவங்க பவுடர் தலா கால் டீஸ்பூன் எடுத்துக் குழைத்து, முகத்தில் போட்டுக்கொள்ளலாம்
- ரூஜ்: கன்னங்கள் சிவப்பாக, செம்பருத்திப் பூவைக் காயவைத்து அல்லது பீட்ரூட் துருவலைக் காயவைத்துப் பொடித்து, அதை லேசாகத் தடவலாம்.
- லிப்ஸ்டிக்: பீட்ரூட் துருவிக் காயவைத்துப் பொடித்து, வெண்ணெயுடன் குழைத்து உதடுகளில் பூசினால், இயற்கை உதட்டுச் சாயம் பளபளக்கும்.
- ஐ லைனர், ஐ ஷேடோ: ஸ்பைருலினா (பச்சை நிறம்), கரிசலாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் போன்றவை, கண்களின் மேலும், கீழும் அழகுசெய்யச் சிறந்தவை.
- சன்ஸ்கிரீன்: பாதாம் எண்ணெய், ராஸ்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி விதை எண்ணெய்களில் எஸ்.பி.எஃப் (Sun protecting factor) உள்ளது. இந்த எண்ணெய்கள் கடைகளில் கிடைக்கின்றன. வெயிலில் செல்வதற்கு முன்பு, சருமத்தில் லேசாகத் தடவிக் கொள்ளலாம். நல்ல பலன் கிடைக்கும்.
- பருக்களைப் போக்க: இரவில் படுக்கும்போது, கற்பூரத்தில் துளி பன்னீர் சேர்த்துக் குழைத்து, பருக்களில் தொட்டு வைத்து, காலையில் கழுவி விடலாம்.
- வெயிலால் ஏற்படும் கருமையைக் குறைக்க: தக்காளி அல்லது உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி வைத்திருந்து, குளிர்ந்த நீரில் கழுவினால், கருமை நீங்கிவிடும். தலைப்பை மாற்றவும். தலைப்பு : அழகுசாதனப் பொருட்கள் பின்னே, ஆபத்து வரும் முன்னே!
அகத்தின் அழகு முகத்தில்...
No comments:
Post a Comment