சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Dec 2014

இறந்த பின்னும் பயன்பட...


சில வருடங்களுக்கு முன்பு, நண்பர்களின் உதவியோடு மருத்துவக் கல்லூரிக்கு சென்று, தன் உடலை தானமாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார் ஒரு பெரியவர். இந்த விஷயம் அவரது வீட்டில் யாருக்கும் தெரியாது. சமீபத்தில் உடல்நலம் பாதித்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோமா நிலையில் நினைவு திரும்பாமலேயே இறந்துபோனார். அவரது இறப்பைக் கேள்விப்பட்டு நண்பர்கள், அவரது உறவினர்களுக்குப் பெரியவர் விரும்பி செய்த உடல் தானத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல, மருத்துவமனைக்கு தகவல் போனது. மருத்துவக் குழுவினர் ஆம்புலன்ஸுடன் அந்த வீட்டுக்கு விரைந்தனர். முறைப்படி அந்த பெரியவருக்கு செய்ய வேண்டிய சடங்குகள் ஒவ்வொன்றாக முடியும் வரை பொறுமையோடு காத்திருந்தது அந்தக் குழு. எல்லாம் முடிந்து, உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படாமல், ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. நெகிழவைத்த நிஜ சம்பவம் இது. மண்ணுக்குப் போகும் உடல் மருத்துவத்துக்குப் பயன்படட்டுமே என்று நினைத்தால், மரணத்தையும் வெல்லலாம். ''உடல் தானம் பற்றி விழிப்புஉணர்வு மக்களிடம் பரவலாக இருந்து வருகிறது என்பதே வரவேற்கத்தக்க விஷயம்தான். இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் உடல் தானம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உடல் தானம் பற்றி விவரங்கள் தேவைப்படுபவர்கள் எப்போது வேண்டுமானாலும், மருத்துவக் கல்லூரியை அணுகி ஆலோசனை பெறலாம்' என்கிறார் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம். உடல் தானம்? இறந்த பின், உடலை மருத்துவக் கல்லூரியின் மாணவர்களின் படிப்புக்காகவும், மருத்துவ ஆராய்ச்சிக்காகவும் பயன்படும் வகையில், தானமாகக் கொடுப்பதுதான் உடல் தானம். 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் உடல் தானம் செய்ய உரிமை உண்டு. நம்முடைய உடல் இறந்த பிறகு வெறுமனே மண்ணுக்குள் போவதைவிட மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படட்டும் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். உடல் தானம் யாரெல்லாம் செய்யக்கூடாது? எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலைத் தானமாகப் பெற அனுமதி இல்லை. திரவங்களின் வழியாக, அதுவும் முக்கியமாக உடம்பில் உள்ள திரவங்களின் வழியாக பரவக்கூடிய வைரஸ் தொற்றுநோய் உள்ளவர்கள், தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் இறந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் உடலை தானமாகப் பெறுவது கிடையாது. அதிலும், உடல் தானத்தில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயமே, உடல், போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டோ அல்லது சிதிலமடைந்தோ இருக்கக் கூடாது. உடல் தானம் செய்ய விதிமுறைகள் என்ன? உடல் தானம் செய்ய நினைக்கும் ஒருவர், எந்த மருத்துவக் கல்லூரிக்கு வேண்டுமானாலும், தன் உடலை தானமாக எழுதித் தரலாம். அதில், குறிப்பிட்ட மருத்துவமனைக்குதான் தர வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஒருவர் உயிரோடு இருக்கும்போதே உடல் தானம் செய்ய நினைத்தால், அவர் முதலில், தன் விருப்பத்துக்கான படிவத்தை நிரப்பி, ஒரு நோட்டரி பப்ளிக்கிடம் கையெழுத்து பெற்றிருக்க வேண்டும். மேலும், அதில் நிச்சயம் சட்டப்பூர்வமான வாரிசுகள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இவற்றை முழுமையாகச் செய்த பின் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வரிடம் தர வேண்டும். உடல் தானம் செய்பவருக்கு அடையாள அட்டை வழங்கப்படும். உடல் தானத்துக்கு சம்மதம் தெரிவித்த ஒருவர் இறந்துபோனால், 'இந்த இறப்பு இயற்கையான காரணத்தினால் ஏற்பட்டது’ என்று ஒரு மருத்துவரின் சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகு அவரது உறவினர்களோ அல்லது சட்டப்பூர்வமான வாரிசுகளோ, உடனே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் பேராசிரியரிடம் (Anatomy Professor) தெரிவிக்க வேண்டும். பிறகு, அந்த உடல் மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த இடத்தில், சட்டப்பூர்வமான வாரிசுகள் 'இறந்த உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடுக்க முடியாது’ என்று சொன்னால், ஒன்றுமே செய்ய முடியாது. ஆகவே இந்த உடல் தான விஷயத்தில் சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு அதிக ஆர்வம் இருக்க வேண்டும். இறந்தவுடன் அவர்கள் தெரிவித்தால்தான், மருத்துவக் கல்லூரிக்கு உடல் சென்று சேரும். அதன் பிறகுதான், அந்த உடலை வைத்து படிப்பையும் ஆய்வையும் தொடர முடியும். இறந்த உடலை வைத்து என்ன ஆய்வு செய்வார்கள்? தானமாக பெறப்பட்ட உடலானது மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கு முன்பு அந்த உடலின் ரத்த நாளங்களுக்குள் ரசாயனங்கள் செலுத்தப்படும். அவ்வாறு செலுத்திய ரசாயனம் உடலில் சென்று உடல் விரைப்பாக இருக்க உதவுகிறது. இதற்கு எம்பால்மிங் (Embalming) என்று பெயர். இந்த நிலைக்கு வந்த உடல் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு, அந்த உடலை வைத்து உடற்கூறு அமைப்பு, உடல் உறுப்புகளின் அமைவிடம் போன்றவற்றை மருத்துவ மாணவர்கள் கற்றுக்கொள்ள லாம். அதே வேளையில், மருத்துவ மாணவர்களுக்கு இறந்த உடலைப் பார்ப்பதால் ஏற்படும் பயம் போகவும் காரணமாக இருக்கிறது. ஆபரேஷனும் மருத்துவமும் உண்மையாகவே செய்ய வேண்டும் என்பதால்தான் மனிதனின் உடலை வைத்து இந்தப் பயிற்சி. இறந்தவர்களின் உடல் மூலம் ஒரு புதிய விஷயம் கண்டுபிடிக்கப்பட்டால், அது மருத்துவ உலகுக்கே சாதனையான விஷயம். மனிதனின் இறப்புக்குப் பிறகும், புதுப்புது நோய்களின் பிடியிலிருந்து மீட்டு, காப்பாற்றவைப்பதும் அவர்களது உடலே! உடலுக்கு இல்லை உரிமை! தானமாகக் கொடுக்கப்பட்ட உடலை உறவினர்கள் வந்து மீ்ண்டும் பார்க்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ முடியாது. உடல் தானத்துக்கு எழுதிக் கொடுத்த நபர், வேறு ஓர் ஊரில் இருக்கும்போது இறக்க நேரிட்டால், அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் பேராசிரியரை அணுகி, தகவல் தரலாம். எழுதிக் கொடுத்த இடத்தில் மட்டும்தான் தர வேண்டும் என்கிற எந்த நிபந்தனையும் இல்லை. உடல் தானத்தின்போது உறவினர்களோ அல்லது சட்டப்படி வாரிசுகளோ உடலைத் தர மறுக்கிற நேரத்தில், உடலை தானமாகப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இயற்கைக்கு மாறாக ஒருவர் தற்கொலை செய்துகொண்டாலோ அல்லது விபத்தினால் இறந்தாலோ, அவர்கள் உடலை தானமாகக் கொடுக்க முடியாது. உடல் தானம், மானுட வாழ்வுக்குப் பிரதானம்!

No comments:

Post a Comment