ஒரு வீட்டில் மின் கோளாறு காரணமாக தீ பற்றி எரிகிறது. அந்த வீடு இருக்கும் பகுதி மிகவும் குறுகலான சந்து. தீயணைப்பு வாகனம் செல்ல வழியே கிடையாது. பின் எப்படித்தான் தீயை அணைப்பது?
கேரள மக்களுக்கு இதற்கு இப்போது ஒரு உபாயம் கிடைத்திருக்கிறது. மிகச் சிறிய சந்துகளில்கூட தீயணைப்பு வாகனமும் வீரர்களும் வந்துவிடுகிறார்கள். எப்படி இது சாத்தியம்..?
மாய மந்திரம் எதுவும் கிடையாது. கேரளாவில் தீயணைப்புத் துறையில் இப்போது ராயல் என்ஃபீல்டு பைக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. சைரனுடன் பெரிய வாகனம் செல்வதற்கு முன்பாகவே, இந்த பைக் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று விடுவதோடு, அதில் செல்லும் இரு வீரர்கள், முதல் கட்டமாக தீயை அணைக்கும் முயற்சியைத் துவங்கிவிடுகிறார்கள்.
தீயணைப்புத் துறையில், இதற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்கள் ரெடி. வாகனத்தின் பின் பகுதியின் இருபுறமும் இரண்டு பெரிய சிலிண்டர்களில் தலா 10 லிட்டர் தண்ணீர் அடைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் சிறிய சிலிண்டர்கள் ஒவ்வொன்றிலும் ஒரு லிட்டர் அளவுக்கு ஃபோம் நுரையும் நைட்ரஜன் வாயுவும் கலந்துவைக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன் முதலுதவிப் பெட்டியும் இந்த வாகனத்தில் இருப்பதால், தீயால் காயம் அடைந்தவர்களுக்கும், தண்ணீரில் மூழ்கியவர்களுக்கும் சம்பவ இடத்திலேயே முதல் உதவியும் கொடுக்கப்படுகிறது. தீயணைப்புச் சாதனங்களுடன் ராயல் என்ஃபீல்டு வடிவமைத்துள்ள இந்த பைக்கின் விலை, 10 லட்சம். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள முக்கியமான சாலை ஒன்றில் சென்றுகொண்டு இருந்த கார் திடீரெனத் தீப்பிடித்தது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, இருபுறமும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் தேங்கி நின்றன. அதனால், தீயணைப்பு வாகனம் அந்த இடத்தை எட்ட முடியாத நிலை உருவானது.
அந்தச் சமயத்தில் பைக்கில் சென்ற வீரர்கள் போக்குவரத்து நெருக்கடியை ஈஸியாகக் கடந்து சென்று, அந்த காரில் ஏற்பட்ட தீயை அணைத்தார்கள். கார் தீப்பற்றி எரிந்த இடத்துக்கு அருகே பெட்ரோல் பங்க் இருந்ததால், அந்த இடத்தில் பெரிய விபத்து ஏற்படும் ஆபத்துகூட இருந்தது. இந்த மோட்டார் சைக்கில் வீரர்களால், அந்த ஆபத்தும் தவிர்க்கப்பட்டதாம்.
No comments:
Post a Comment