சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Dec 2014

ஜூ.வி-யின் பிதாமகன் பேட்டி!

''ஜூனியர் விகடன் வர்த்தக ரீதியில் வெற்றி பெற சுமார் ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்தீர்கள். அப்போது சந்தித்த தடைகள், பிரச்னைகள், என்னென்ன?'
''வெற்றி பெற ஐந்தாண்டுகள் தேவைப்படவில்லை. முதல் ஓர் ஆண்டு மிகவும் சிரமப்பட்டேன். நிர்வாகத்தில் சிலர்கூட 'இந்தப் பத்திரிகையை நிறுத்திவிடலாம். நஷ்டத்தைத் தாங்க முடியவில்லைஎன்று சொல்ல ஆரம்பித்தனர். முக்கியமாக, செய்தித்தாளிலேயே அட்டை அமைத்ததுதான் காரணம். அது பத்திரிகை வாங்குபவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்... அதாவது தயக்கம் என்பது வாங்கும்போதுதான்... படிக்கும்போது அல்ல. 90 பைசாதான் அன்றைய ஜூனியர் விகடனின் விலை. இப்படி குறைந்த விலைக்குப் பத்திரிகையைக் கொடுக்கும்போது அட்டையைத் தனியாகப் போட முடியவில்லை. இது ஒரு காரணம் என்றாலும், என் எண்ணமே செய்தித்தாளிலேயே அட்டை அமைப்பது, நடு முதுகில் 'பின்அடிக்காமல் ஒட்டுவது போன்ற சிக்கன வழிமுறைகளை கடைப்பிடித்து பத்திரிகையைக் குறைந்த விலையில் தயாரித்து, அதனை வாசகர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதுதான்.

பத்திரிகை ஆரம்பித்து முதல் வருடக் கடைசியில், கரிகாலனின் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. புலிகளைப் பற்றி அவ்வளவு விளக்கமாக அதுவரை கட்டுரைகள் வந்தது இல்லை. அதனால், அதனைப் படிக்க நல்ல ஆர்வம் வாசகர்களிடம் இருந்தது. அந்தத் தொடரில் இடம்பெற்றிருந்த மூன்று கதாநாயகர்களின் தியாகம் மெய்சிலிர்க்கும்படியாக இருந்ததாலேயே, அந்தத் தொடருக்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்போதே 'ஜூ.வி. மாறுபட்ட பத்திரிகை, இதனை மற்றவைபோல எடைபோட்டுவிடக் கூடாதுஎன்ற நல்ல எண்ணம், படிப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் ஏற்பட்டது. இப்படி படிப்பவர்களுக்கு இதெல்லாம் பிடித்துப் போய் வற்புறுத்தத்  தொடங்கியதாலேயே, ஜூ.வியை வாங்க வேண்டியவர்கள் அட்டை பற்றி கவலைப்படாமல் வாங்குவதைத் தொடர்ந்தார்கள். அதைத் தொடர்ந்து விகடன் மாணவர் திட்டத்தின் கீழ் அறிமுகமான மாணவப் பத்திரிகையாளர்களின் கட்டுரைகள் ஜூ.வியை மேலும் ஆர்வத்தோடு படிக்கத் தூண்டியது. அதுவரை பத்திரிகைகளே போகாத குக்கிராமங்களுக்கெல்லாம்கூட ஜூ.வி. போகத் தொடங்கியது. இதையெல்லாம் நானே பார்த்திருக்கிறேன். கிராமங்களில் திங்கட்கிழமையன்று மாலையில் ஆலமரத்தடியில் ஜூ.வியை இரு கிராமவாசிகள் எழுத்துக்கூட்டி வாசித்துக் கொண்டிருப்பார்கள். அவரைச் சுற்றிலும் இருக்கும் மற்றவர்கள் அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இதைப் பார்த்து நான் ஆனந்தப்பட்டிருக்கிறேன். ஒரு பிரதியை வாங்கி 10 பேர் படிக்கிறார்களே என்று ஒருபோதும் ஆதங்கப்பட்டது இல்லை.''
''ஜூனியர் விகடன் வெற்றிக்கு யார் காரணம்? என்னென்ன அம்சங்கள் காரணம்?''
''மக்கள்தான் காரணம்! நான் அரசியல்வாதியைப் போல் பேசுவதாக எண்ண வேண்டாம். உண்மையிலேயே ஆரம்பம் முதல் இன்று வரை ஜூ.விக்கு உள்ள மக்கள் நல எண்ணமும், அரசியல் கட்சி சார்பற்ற தன்மையும், யார் தவறு செய்திருந்தாலும் அதைத் தட்டிக்கேட்கத் தயங்காத குணமும்தான் எங்கள் மீது மக்களுக்கு ஏற்பட்ட காதலுக்கு முக்கியமான அம்சங்கள். இதுதான் அதன் வெற்றிக்குக் காரணம்.''
''ஜூனியர் விகடனில் படக்கதைகள், நகைச்சுவைத் தொடர்கள், இலக்கியத் தொடர்கள் எல்லாம் முதல் 15 ஆண்டுகளில் வெளி வந்திருக்கின்றன. இப்போது முற்றிலும் அரசியல் சார்ந்த பத்திரிகையாகவே இருக்கிறது. இது ஏன்?''
''முதலில் ஜூ.வி. ஒரு வாரப் பத்திரிகையாகத்தான் வெளியாகிக்கொண்டு இருந்தது. அப்போது அதில் அரசியலைத் தவிர மற்றவற்றுக்கு அதிக இடம் கொடுக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து ஜூ.வியைப் போலவே பல பத்திரிகைகள் வரத் தொடங்கின. மாணவப் பத்திரிகையாளர்களும் நல்ல பல விஷயங்களை எழுதிக் குவித்தனர்... அதற்கு ஈடுகொடுக்க அதிகப் பக்கங்கள் தேவைப்பட்டன. வாசகர்களும் மேலும் மேலும் படிக்க ஆர்வம் காட்டினார்கள். பக்கங்களைக் கூட்டி வெளியிட, அச்சகத்தில் அச்சு இயந்திரம் இருக்கவில்லை. என்ன செய்வது என்று மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டதில் தோன்றிய எண்ணமே, ஜூ.வியை வாரம் இருமுறை ஆக்குவது என்ற முடிவு.
பக்கங்களை அதிகரித்ததால், 'பின்அடிக்காமல் ஒட்டித்தரும் புதுமையைத் தொடர முடியாமல் போனது. அந்த வருத்தம் இருந்தாலும், 'ஜூ.விதான் உலகத்திலேயே வாரம் இருமுறையாக வெளிவந்த முதல் பத்திரிகைஎன்ற தனிப் பெருமை கிட்டியது! அதன் பிறகு அதைப் பின்பற்றி பல பத்திரிகைகள் வந்துவிட்டன.
'வாரம் இருமுறைஎன்றவுடன் செய்திகளை உடனுக்குடன் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வாரம் 32 பக்கம் படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வாரம் 96 பக்கம் கிடைக்கிறது. ஏறத்தாழ ஒரு தினசரிபோல செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
அதனாலேயே ஆற அமர உட்கார்ந்து ரசித்துத் தேர்ந்தெடுத்துப் போட வேண்டிய படக்கதைகள், நகைச்சுவை, இலக்கியத் தொடர்களுக்கு இடமளிக்க முடியாமல்... அரசியல் நடவடிக்கைகளை அதிகமாகக்கொண்ட பத்திரிகையாக ஜூ.வி. தோற்றமளிக்கிறது. ஆனால், இன்றும் மக்கள் நல தொடர்களும் கட்டுரைகளும் தொடர்ந்து     ஜூ.வியில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.''
''போலி சாமியார்களை அம்பலப்படுத்தும் ஜூனியர் விகடன், மேல்மருவத்தூர் பங்காரு அடிகள் போன்ற பிராமணரல்லாத சாமியார்களைத்தான் அதிகம் கிண்டலடிக்கிறது. காஞ்சி மடம் உள்ளிட்ட பிராமண சாமியார்களைக் கண்டுகொள்வது இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?!''

''இதுவும் முழுக்க முழுக்கத் தவறான கருத்துதான். பிராமணன், பிராமணரல்லாதவன் என்ற பாகுபாடே ஜூ.விக்கு என்றும் இருந்தது இல்லை. இந்தப் பத்திரிகையைப் பிரசுரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளராகவும் தொடக்கத்திலிருந்து அதன் ஆசிரியராகவும் இருந்த நான், பிராமண குலத்தில் பிறந்தவன் என்பதனாலேயே அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். இல்லையென்றால், அப்படி ஒரு எண்ணமே ஜூ.வி. மீது வந்திருக்காது.
நான் பிராமண குலத்தில் பிறக்காமல்... முதலியாராகவோ நாடாராகவோ பிறந்திருந்தால், அப்போதும் குறிப்பிட்ட அந்தச் சாதிக்கு சார்பாக இருப்பதாகத்தான் சொல்வார்கள். அது, இங்கே எந்த அளவுக்கு சாதி மனப்பான்மை ஊறிக்கிடக்கிறது என்பதன் அடையாளம்தானே தவிர, நான் சாதி சார்பானவன் அல்ல. விண்ணப்பப் படிவத்தில் சாதி, மதம் இரண்டையும் கேட்காமல் நடத்தப்பட்டு வரும் ஒரே திட்டம், எங்கள் 'விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்தான்.
அதேபோல, 'ஜெயேந்திரர் தண்டத்தை வைத்துவிட்டு மடத்தைவிட்டு ஓடிப் போய்விட்டார்என்ற செய்தியில் ஆரம்பித்து சமீபத்தில் அவர் மீதுள்ள கொலை வழக்கு வரை விரிவாக மக்களுக்கு ஜூ.வி. விருப்புவெறுப்பில்லாமல் எடுத்துச் சொல்லியிருக்கிறது. மகா பெரியவர் காலமானபோது செய்தி சேகரிக்கப்போன எங்கள் நிருபரை எப்படியெல்லாம் மடத்தில் அவமானப்படுத்தித் துரத்தினார்கள் என்றும் விளக்கமாகக் கூறியிருக்கிறோமே. அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் நடந்திருந்தால், எங்களை அந்தச் சமயத்தில் விரட்டியிருப்பார்களா?''
''அரசியல் பற்றி பொதுவாக அவநம்பிக்கையே அதிகரித்து வரும் இன்று, அரசியல்வாதிகளின் தவறுகளை மேலும் மேலும் வெளிப்படுத்தி வரும் ஜூனியர் விகடனால், இந்த அவநம்பிக்கை அதிகரிக்கத்தானே செய்கிறது? அரசியல் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில், அடுத்த தலைமுறையை வழிநடத்த ஜூனியர் விகடனிடம் என்ன திட்டம் இருக்கிறது?''
''அரசியல் மீது அவநம்பிக்கையை நாங்கள் ஏற்படுத்தவில்லை. அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் சூழ்நிலையைத்தான் வெளிப்படுத்துகிறோம். தொழில் செய்ய விரும்புபவருக்குத் துணையாக இருப்பதுதான் அரசியல்வாதிகளின் கடமையாக அமைய வேண்டும். ஆனால், அரசியலையே அவர்கள் ஒரு தொழிலாக ஆக்கும்போது, அதை சுட்டிக்காட்டி, தட்டிக்கேட்டால்தான் 'தவறான பாதையில் போகக் கூடாதுஎன்ற பயம் அவர்களுக்கு ஏற்படும். அந்த வகையில் ஜூ.வி மிகச் சரியாகவே தன் பணியை செய்திருக்கிறது.
மக்களும் அரசியல் மீது அவநம்பிக்கை கொள்ளவில்லை. சட்டதிட்டங்கள், நீதிநிர்வாகம் எல்லாம் ஒழுங்காக இருக்கவேண்டும், சமூகம் அமைதியாக இயங்க வேண்டும் என்றுதான் மக்கள் ஆசைப்படுகிறார்கள். இதற்குத் தடையாக அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை எப்படி சொல்லாமல் இருக்க முடியும்.? அப்படிச் சுட்டிக்காட்டுவதையே எப்படி அவநம்பிக்கை ஊட்டுவதாகக் கருத முடியும்? சுட்டிக்காட்டாமல் இருந்தால், இன்னும் பெரிய ஆபத்தாகிவிடும். 'இந்தத் தவறான நடைமுறைகள்தான் சரியானவை. நாமும் இப்படித்தான் நடக்க வேண்டும்என்று தோன்றிவிடும். புதிய தலைமுறை அப்படி வளர்வதையா நாம் விரும்புகிறோம்? இல்லையே! அவர்களும் இதே தவறுகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்கிற ஆசையில்தான் இப்போதைய அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம். அப்போதுதான் அவர்களைத் திருத்தவும் முடியும்!''
''கடந்த 25 ஆண்டுகளில் அப்படி ஏதாவது திருத்த முடிந்திருக்கிறதா?''
''தவறு செய்ய இப்போது பயப்படுகிறார்கள். வெளிப்படையாகத் தவறு செய்ய பயமாவது வந்திருக்கிறது. 'தவறு வெளியே தெரிந்தால் ஜூ.வியில் போட்டுவிடுவார்கள்என்ற பயம் இருக்கிறது. 'ஜூ.வியில் வந்துவிட்டால், மக்கள் கேள்வி கேட்பார்கள்என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது முதல் படிதான். இன்னும் நிறைய படிகள் போக வேண்டியிருக்கிறது...''
''வெள்ளி விழா கண்டிருக்கும் ஜூனியர் விகடன்... பொன்விழாவும் வைர விழாவும் காணும் காலத்தில், அந்தப் பத்திரிகை எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''

''ஒரு நல்ல பத்திரிகை என்று எல்லோராலும் சொல்லப்பட வேண்டும். அதுதான் எனது ஆசை!''


No comments:

Post a Comment