தலையில் ஒரு விக், குர்தா உடை, காதில் கடுக்கண் என, அவர் வந்து நின்றதும் மழலைகளிடம் பொங்குகிறது உற்சாகம். விண்ணை முட்டுகிறது கரவொலி.
தேனி மாவட்டம், வடுகபட்டி மார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் நிகழ்ச்சியை நடத்த வந்திருந்தார், சுந்தர மகாலிங்கம். ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான இவரை, திருக்குறள் தாத்தா என்றே எல்லோரும் அழைக்கிறார்கள்.
‘‘மாணவர்களே, உங்க எல்லோருக்கும் திருக்குறள் பற்றி தெரியும்தானே... அதான், ‘தமிழ்ப் பாடப் புத்தகத்தில் படிச்சு, தேர்வு எழுதுறோமே’னு சொல்வீங்க. அதோடு முடியவில்லை திருக்குறளின் வேலை. ஒண்ணே முக்கால் அடிகள் உடைய ஒவ்வொரு குறளிலும் அற்புதமான கருத்துகள் இருக்கின்றன. வெறுமனே மனப்பாடம் செய்து தேர்வில் எழுதினால், வெளியே வந்ததும் மறந்துபோயிடும். நம்ம வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் இருக்கும் குறளை, மறக்காம இருக்க என்ன செய்யணும்?
10 வருஷத்துக்கு முன்னாடி கேட்ட ஒரு சினிமா பாட்டு ஞாபகத்தில் இருக்கு. ஒரு சினிமா காட்சி ஞாபகத்தில் இருக்கு. அந்த மாதிரி இசையாகவும், நடனமாகவும், நாடகமாகவும் ரசிச்சுப் படிச்சா, திருக்குறளும் மறக்கவே மறக்காது. அதைத்தான் செய்யப்போறோம். இப்போ பாடலாமா... ஆடலாமா?" எனக் கேட்டார் திருக்குறள் தாத்தா.
‘‘ஆடுங்க... ஆடுங்க...’’ என்று சிலரும், ‘‘பாடுங்க... பாடுங்க’’ என்று சிலரும் குதூகலக் குரல் கொடுத்தார்கள்.
‘‘பாடுவோம்... ஆடுவோம்... பாடிக்கிட்டே ஆடுவோம். நீங்களும் என்னோடு சேர்ந்து ஆடிப் பாடலாம்’’ என்றதும் எல்லோரின் முகங்களும் மலர்ந்தன. தொடங்கியது திருக்குறள் பயிற்றுவிக்கும் நிகழ்ச்சி.
‘‘எண்கள் பற்றி வரும் குறள் ஒண்ணு சொல்லுங்க பார்ப்போம்’’ என்றார் திருக்குறள் தாத்தா.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்று சொல்லி சபாஷ் வாங்கினர் மாணவர்கள்.
இந்த மாதிரி எண்கள் வரும் திருக்குறள்களை, எண் விளையாட்டு எனப் பெயர்வைத்து, சில குறள்களைச் சொல்கிறார். மாணவர்களும் சேர்ந்து சொல்கிறார்கள்.
அடுத்து, எழுத்து விளையாட்டு. முதல் எழுத்து எதில் துவங்குகிறதோ, அதே எழுத்தில் முடியும் குறளைச் சொல்ல வேண்டும். உதாரணமாக, கற்க கசடற... குறளின் இறுதியில், அதற்குத் தக என முடியும். இப்படியே... சொல் விளையாட்டு, இசை விளையாட்டு, நாடக விளையாட்டு எனக் குறள்களைப் பிரித்து, ஒவ்வொரு குறளையும் ராகத்தோடு சொல்லச் சொல்ல, மாணவர்களும் சொக்கிப்போய் சொல்கிறார்கள்.
‘‘இதோ, ஒரு குறளை நடனம் ஆடிக்கிட்டே சொல்றேன். நீங்களும் என்னோடு ஆடலாம்’’ என்று சொல்லி ஆரம்பிக்கிறார் திருக்குறள் தாத்தா. ‘இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று’ என்ற குறளுக்கு அவர் காட்டும் அபிநயம், அவ்வளவு அழகு. ‘இனிய உளவாக' என்கிறபோது முகத்தில் மலர்கிறது சிரிப்பு. ‘இன்னாத கூறல்' எனும்போது, முகத்தைச் சுருக்கியும் காதுகளை இரு கரங்களால் பொத்தியும் அபிநயம் பிடித்து ஆடிக் காட்ட, எல்லோரிடமும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
அடுத்த திருக்குறளுக்கு மாணவர்கள் சிலர் முன்வந்து, அபிநயம் பிடித்து, அவரையே ஆச்சர்யப்படுத்தினார்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும் நடன ஆடையை மாற்றிக்கொண்டு சாதாரண தாத்தாவாக வந்தார்.
‘‘பொருள் உணர்ந்து படிக்கும் எதுவும் மறக்காது. இளம்வயதில் நல்ல பண்புகள் மனதில் பதிந்தால், எதிர்காலம் ஒளிவீசும். திருக்குறளை நன்கு புரிந்துகொண்டால், வாழ்வை எளிதில் வெல்லலாம். இதற்கான முயற்சிதான் இந்தப் பயிற்சி. கடந்த 15 ஆண்டுகளாக, 1,700-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்று நடத்திவருகிறேன். தலைமை ஆசிரியராகப் பணியில் இருந்தபோதே, இதைத் தொடங்கிவிட்டேன்.
இதற்காக, எந்தவித பொருள் உதவியும் எதிர்பார்ப்பது இல்லை. ஒரு பள்ளியில் நிகழ்ச்சி நடத்தியதைக் கேள்விப்பட்டு, இன்னொரு பள்ளியில் அழைப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் சென்று, திருக்குறள் கற்பித்தல் நிகழ்ச்சியை நடத்திவருகிறேன். என் உடம்பில் தெம்பு உள்ளவரை இதைச் செய்வேன்" என்று புன்னகையோடு சொல்கிறார் சுந்தரமகாலிங்கம் என்கிற திருக்குறள் தாத்தா.
No comments:
Post a Comment