'மாதுளை, சப்போட்டா, கொய்யா
என நம் ஊர்
பழங்களுக்குப் பதிலாக, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். ஆனால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெளிநாட்டில் மட்டுமே விளையக்கூடிய பழங்களை, பெரும்பாலானோர் வாங்குவது இல்லை. நம் ஊரில் விளையாமல் இறக்குமதியாகும் அவகேடோ, கிவி போன்ற பழங்களைச் சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம்தான்'' என்கிற தஞ்சையைச் சேர்ந்த உணவு நிபுணர் ஜெயந்தி தினகரன்,
வைட்டமின்கள், தாது உப்புகளின் 'பவர் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் கிவிப் பழத்தின் மருத்துவப் பலன்கள் பற்றிச் சொல்கிறார்.
வைட்டமின் ஏ, சி, கே, புரதம், கார்போஹைட்ரேட், நீர்ச் சத்து என மனிதனுக்குத் தேவையான ஒன்பது சத்துக்கள் நிறைந்த ஒரே பழம் 'கிவி’தான். பெரிய சைஸ் சப்போட்டா பழம்போலத் தெரியும், கிவிப் பழத்தில், நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. உடல் பருமனாக உள்ளவர்கள், கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், எடை குறைக்க நினைப்பவர்கள் இதைச் சாப்பிடலாம்'' என்கிற ஜெயந்தி தினகரன், கிவிப் பழத்தின் பலன்களைப் பட்டியலிட்டார்.
'கிவி’ ஆன கதை
சீனாவின் தேசியப் பழம் இது. இந்தப் பழத்தை சீனர்கள், 'யாங் டா’ (Yang Tao) என்று அழைக்கின்றனர். 1930-களில் நியூசிலாந்தில் அதிக அளவில் விளைவித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரின்போது நியூசிலாந்தில் இருந்த அமெரிக்க ராணுவத்தினர் விரும்பிச் சாப்பிட்டுள்ளனர். அமெரிக்கர்கள் இந்தப் பழத்தை விரும்பிச் சாப்பிடுவதால் நியூசிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு இந்தப் பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது. நியூசிலாந்தின் சின்னமான 'கிவி’ பறவையின் தோற்றத்தைப் போன்று, அதே நிறத்தில் இருந்ததால், இந்தப் பழத்துக்கு, 'கிவி’ என்று பெயர் வைத்தனர். 'சீனத்து நெல்லிக்கனி’ என்றும் இதை அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment