மருத்துவத்தில் இரண்டு வகைகள் உண்டு. வருமுன் காப்பது, வந்தபின் சிகிச்சை. சொல்லுங்கள்... இதில் முதல் வகை மருத்துவம்தானே சிறந்தது!
'ப்ரிவென்ஷன் ஈஸ் பெட்டர் தென் க்யூர்' (Prevention is better
than cure)என்பது ஆங்கிலப் பழமொழி. இதைவிடக் கடுமையான சீனப்பழமொழி ஒன்று உண்டு.The superior doctor prevents sickness; The mediocre doctor
attends to impending sickness; The inferior doctor treats actual sickness.அதாவது, உயர்தர மருத்துவர் வியாதி வராமல் தடுப்பார்; நடுத்தர மருத்துவர் வரப்போகும் நோய்க்கு வைத்தியம் செய்வார்; கீழ்த்தர மருத்துவர்தான் வந்துவிட்ட நோய்க்கு வைத்தியம் செய்வார்.
இதையேதான் தாமஸ் எடிசன் என்கிற பிரபல மருத்துவ அறிஞர் இப்படிக் கூறுகிறார்... The Doctor of the future will give no
medicine - but will concentrate in diet and preventive aspects.'எதிர்கால மருத்துவர் மருந்துகள் கொடுக்கமாட்டார் - நோயைத் தடுப்பதிலும் உணவு முறைகளிலுமே கவனம் செலுத்துவார்’ என்கிறார்.
ஆக, வரும் முன் காப்பதே சிறந்த மருத்துவ முறை என்பதைத்தான் அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.
வரும் முன் காப்பது என்றால்... எப்படி?!
அம்மை, காலரா போன்ற தொற்றுநோய்களைத் தடுப்பதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது அல்ல. இவற்றையெல்லாம்விட முக்கியமான தடுப்புமுறை ஒன்று உண்டு. அது... உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் உள்ள தவறுகளைச் சரிபடுத்திக்கொள்வது.
அப்படி என்ன தவறு செய்து கொண்டிருக்கிறோம் நாம்..?! சொல்கிறேன்..!
பண்டைய மனிதனின் வாழ்க்கை முறையும், இன்றைய மனிதனின் வாழ்க்கை முறையும் எல்லா விஷயங்களிலும் தலைகீழாக மாறியுள்ளன. இதைத்தான் வாழ்க்கை முறை மாற்றங்கள் (Life style changes) என்று சொல்கிறோம். தடம்புரண்ட பல வாழ்க்கை முறைகளை மீண்டும் மாற்றியமைத்தால், பெரும்பாலான உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.
ஆதி மனிதன் உணவுக்காக விலங்குகளைப்போல் வேட்டையாடி வாழ்ந்துவந்தான். கடின உடல் உழைப்பையும், கலப்படமில்லாத காய், கனிகள், இறைச்சி என்ற உணவு முறையையும் அவன் பின்பற்றினான். அப்போதெல்லாம், விபத்துக்களால், கொடிய விலங்குகள் மற்றும் விஷப்பூச்சிகளால், தொற்று நோய்க்கிருமிகளால் மட்டுமே அவனுக்கு மரணம் நேர்ந்தது. அடிக்கடி மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட போர்களும் ஆயிரக்கணக்கில் உயிர்களைப் பலி வாங்கின. ஆனால், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சர்க்கரைநோய், புற்றுநோய் போன்ற வியாதிகளில் மடிந்த மனிதன் எவனும் கிடையாது.
வேட்டையாடுதலை நிறுத்தி, காடுகளைச் சீராக்கி, வயல்வெளிகளை உருவாக்கி, பயிர்த்தொழில்ஆரம்பித்த காலம் முதல் அவனுக்கு உடல் உழைப்பு குறைந்தது; ரத்தக்கொதிப்பு நோய் ஆரம்பித்தது.
காலப்போக்கில், காய், கனிகள் என்கிற இயற்கை உணவு முறைக்கு மாறாக, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்தான் (விஞ்ஞான ஆராய்ச்சியில் மனிதன் பெரிய சாதனைகளைப் புரிந்தது முதலில் சமையலில்தான்!). சமைக்கும்போது, உடலுக்கு நலம் தரும் பல நல்ல சத்துப் பொருட் கள் அழிந்தன. இது போதாதென்று உடலுக்குக் கேடு விளைவிக்கும் பல பொருட்களை உணவில் சேர்த்தான். உதாரணமாக, பொட்டாசியம் எனும் உப்பு உடலுக்கு மிகவும் நல்லது. இதய பாதுகாப்புக்கும், ரத்தக் கொதிப்பைத் தடுப்பதற்கும் இந்த உப்பு அவசியம். சமையலில் இந்த பொட்டாசியம் வெளியேறிவிடுகிறது. ஆனால், உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் சோடியம் (சமையல் உப்பு) சேர்க்கப்படுகிறது. அந்த நாள் முதல்தான் மனிதனுக்கு எண்ணற்ற நோய்கள் தோன்ற ஆரம்பித்தன.
ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சிறுநீரக நோய்கள், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் என அவன் உடல் இருப்பிடமானது அதற்குப் பின்தான் (உப்பைப் பற்றி இன்னும் விரிவாக பிறகு விவாதிப்போம்).
அடுத்து அவன் சமையலில் சேர்க்க ஆரம் பித்தது... அதுதான் எண்ணெய். இறைச்சி, மீன், காய்கறிகளில் இருக்கும் கொழுப்பு போதாதென்று புதிதாக எண்ணெய் போன்ற கொழுப்புகளையும் சேர்த்துக்கொண்டே போனான். புளி, மிளகாய் போன்ற மசாலாக்களையும் கலந்தான்.
நல்ல நிறம் வேண்டும் என்று சிலவற்றையும், நல்ல மணம் வேண்டும் என்று சிலவற்றையும், நல்ல பளபளப்பு வேண்டும் என்று சிலவற்றையும், கெட்டுப்போகாமல் நீடித்துப் பாதுகாக்க என்று சிலவற்றையும் - இப்படியாக புதிது புதிதாக சேர்த்துக்கொண்டே போனான். நாளடைவில், வணிகர்கள் சிலரின் பேராசையால், கலப்படம் என்ற புதிய கலாசாரம் உருவாகியது. எண்ணற்ற நச்சுப்பொருட்கள் உணவில் கலந்தன.
இத்தனை வேதிப்பொருட்களும் உணவில் ஒன்று சேரும்போது, மனிதனுக்குப் புதுப்புது வியாதிகள் வருவதில் வியப்பு ஏது..?!
'அதற்காக மீண்டும் வேட்டையாடி பசியாற முடியுமா..?’ என்கிறீர்களா...
No comments:
Post a Comment