சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Dec 2014

ஓட்ஸுக்கு 'ஓ' போடலாமா?

ந்தியச் சந்தையில் ஓஹோ வரவேற்பில் இருக்கிறது ஓட்ஸ். 'எடையைக் குறைக்கிறது, எனர்ஜியை அதிகரிக்கிறதுஎன்று தாங்களாகவே கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு வாலன்டியராக ஓட்ஸ் பயன்பாட்டை அதிகரித்துக்கொள்கிறார்கள் பலரும். அதிலும் 40 வயதைத் தொட்டுவிட்ட பெண்கள் மத்தியிலும் கல்லூரி மாணவிகள் மத்தியிலும் ஓட்ஸ் இரு வேளை அல்லது ஒரு வேளை உணவாகவே மாறிவிட்டது. உண்மையிலேயே ஓட்ஸ் இந்த அளவு மகத்தான உணவுதானா

ஓட்ஸ் என்பது தாவரத்தில் இருந்து கிடைக்கும் பொருளே. அரிசி, கோதுமை போலத்தான் இதுவும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஓட்ஸ் பயன்பாடு அதிகம் இருந்தாலும் உற்பத்தி அளவு மிகக்  குறைவு. ரஷ்யா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கணிசமாக உற்பத்தியாகிறது. ஓட்ஸ்பற்றி விரிவாகப் பேசும் கோவையைச் சேர்ந்த குடல் நோய் சிகிச்சை நிபுணர் கோகுல் கிருபாசங்கர், ''கடந்த நான்கு வருடங்களாக இந்தியாவில் ஓட்ஸ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஓட்ஸில் நார், இரும்பு, கலோரீஸ், புரதம், கொலஸ்ட்ரால், கால்சியம், வைட்டமின் பி6, பி1, பி2 உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன. ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும். இது உடல் ஆரோக்கியத்துக்கான நல்ல விஷயம். எடை குறைப்புக்கு ஓட்ஸை உட்கொள்வது நல்லதுதான். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை ஓட்ஸ் குறைப்பதால், மாரடைப்பு வரும் வாய்ப்பும் குறையும்.

சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை முடிந்த அளவுக்குக் குறைக்க வேண்டும் என்று மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது. என்னதான் அரிசி உணவைக் குறைத்துக்கொண்டாலும் உடம்பில் சர்க்கரை அளவு ஏறுவதும் இறங்குவதுமான சிக்கல்கள் இருக்கும். ஆனால், ஓட்ஸ் சாப்பிடும்போது சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சீராக இருக்கும். மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு ஓட்ஸ் நிச்சயம் கை கொடுக்கும். காரணம், இதில் இருக்கும் நார்ச் சத்து. காய்கறிகள், பழங்களில் காணப்படுகிற 'பைட்டோ கெமிக்கல்’ (Phyoto Chemical) ஓட்ஸிலும் இருப்பதால் ஹார்மோன் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப் பை மற்றும் வாய்ப் புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைகின்றன.

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். கோதுமை, ராகி போன்ற தானியங்களில் இருக்கும் அளவு சத்துக்கள் ஓட்ஸில் இல்லை. புரதம், நார், இரும்பு, கால்சியம், கலோரிகள் ஆகியவை மூன்றிலும் கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் இருக்கின்றன. கோதுமை, கேழ்வரகு போல் ஓட்ஸும் சிறந்தது எனச் சொல்வதுதான் சரி. நம் ஊர் கேழ்வரகு, கம்புக்குப் பெரிய விளம்பரம் இல்லை. ஆனால், ஓட்ஸுக்குப் பெரிய அளவில் விளம்பரம் இருக்கிறது. மிக அதிகமாக விளம்பரப்படுத்தப்படும் எந்தப் பொருளும் சந்தையைத் தனதாக்கிக்கொள்ளும் என்பதற்கு ஓட்ஸும் ஓர் உதாரணம்'' என்கிறார் தெளிவாக.
டயட்டீஷியன் இந்திராணி, ''கேழ்வரகு, கோதுமை எல்லாவற்றிலும் சுவை இருக்கிறது. ஆனால், ஓட்ஸில் தனிப்பட்ட சுவை எதுவுமே கிடையாது. சுவைப் பிரச்னையைச் சரிக்கட்டத்தான் இப்போது ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட் ஃப்ளேவர்களில் ஓட்ஸைச் சந்தைப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். பொதுவாக, பாலோடு சேர்த்தோ அல்லது தண்ணீரோடு சேர்த்தோ, ஓட்ஸைச் சாப்பிடலாம். ஓட்ஸை வேகவைத்து அத்துடன் பழத் துண்டுகள், கொத்துமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடுகிற பழக்கமும் இருக்கிறது. சுவைக்காகப் பல விஷயங்களை அதிகமாக ஓட்ஸோடு சேர்த்தால், ஓட்ஸின் பயன் முழுமையாக உடம்புக்குக் கிடைக்காது. அளவுக்கு அதிகமாக ஓட்ஸை எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

அனைத்து வயதினரும் ஓட்ஸ் சாப்பிடலாம். இரண்டு வேளைக்குப் பதில் ஒருவேளை உணவாக மட்டும் சாப்பிடுவதுதான் நல்லது. காலையில் இதைச் சாப்பிட்டால் வயிறு நிறைந்ததுபோல் இருக்கும். இதனால் இடையில் நொறுக்குத் தீனி சாப்பிடத் தோன்றாது. ஆனாலும், கேழ்வரகு, கோதுமை, கம்பு மாதிரியான நம் ஊர் தானியங்களைவிட ஓட்ஸ் சத்துமிக்கதும் இல்லை. நன்மையில் உயர்ந்ததும் இல்லை'' என்கிறார் ஒப்பீட்டு உதாரணத்துடன்.

உங்க ஓட்டு இனியும் ஓட்ஸுக்குத்தானா... இல்லை, நம்ம உள்ளூர் உற்பத்திக்கா?!





No comments:

Post a Comment