சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Dec 2014

ஒரு கிளிக்கில் நீங்களும் ஐன்ஸ்டீனை ஆய்வு செய்யலாம்!



ன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது படைப்புகளை அணுகலாம். அதாவது, ஐன்ஸ்டீன் படைப்புகள் விரல் நுனியில் ஒரு கிளிக்கில் காத்திருக்கின்றன.

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யூனிவர்சிட்டி பிரஸ் தன் வசம் இருந்த ஐன்ஸ்டீன் படைப்புகளை டிஜிட்டல் மயமாககி, எளிதாக தேடக்கூடிய வசதியையும் அளித்திருக்கிறது. சொல்லப்போனால் அறிவியல் பொக்கிஷத்தை ஆன்லைனில் கொண்டு வந்திருக்கின்றனர் என்று சொல்லலாம். இது எத்தனை மகத்தான வாய்ப்பு என்று வியப்பும் ஏற்படுகிறது.


ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம்  உள்ளிட்ட விஞ்ஞான கோட்பாடுகளை அறிந்து கொள்ள புத்தகங்கள் இருக்கின்றன. இணையத்திலும் அநேக வழிகள் இருக்கின்றன. ஐன்ஸ்டின் தொடர்பான பிரத்யேக இணையதளங்களும் இருக்கின்றன. ஆனால் டிஜிட்டல் ஐன்ஸ்டீன் இணையதளத்தில் ஐன்ஸ்டீன் படைப்புகளை அணுகலாம் என்பது தான் விஷேசம். 

ஐன்ஸ்டீன் படைப்புகள் என்றால் அவர் எழுதிய எல்லாவற்றின் தொகுப்பு. ஐன்ஸ்டீனின் இளமைக்காலம் தொட்டு 1923ஆம் ஆண்டு வரை அவர் எழுதியவை , சிந்தித்தவற்றின் குறிப்புகள் எல்லாம் புத்தகமாக தொகுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் இணையவாசிகள் பார்வைக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. ஐன்ஸ்டீனின் காதல் கடிதங்கள், பள்ளி மதிப்பெண் சான்றிதழ் போன்றவையும் இந்த தொகுப்பில் அடங்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆக, ஐன்ஸ்டீன் எனும் மேதை சிந்தித்த மற்றும் செயல்பட்ட விதத்தை அறிந்து கொள்ளவும் , ஆய்வு செய்யவும் இந்த டிஜிட்டல் ஆவணங்கள் உதவியாக இருக்கும்.

பொதுவாக ஐன்ஸ்டீன் போன்ற மேதைகளின் படைப்புகளை , அந்தரங்க கடிதங்களை, குறிப்பேடுகளை நேரில் பார்ப்பது என்பது எல்லோருக்கும் கிடைக்க கூடிய வாய்ப்பு இல்லை. இத்தகைய முக்கிய ஆவணங்கள் அருங்காட்சியகம் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாதுகாக்கப்படும். அவற்றை அணுக வேண்டும் என்றால் சிறப்பு அனுமதி தேவை. அதிலும் ஆய்வு மாணவர்களுக்கு தான் இத்தகைய அனுமதி கிடைக்கலாம்.

ஆனால், இணைய யுகத்தில் இந்த வரம்புகள் இல்லை. ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இணையத்திற்கு கொண்டுவரப்பட்டால் அவற்றை எல்லோரும் அணுகலாம். 

இந்த அற்புதம் தான் இப்போது நிகழ்ந்திருக்கிறது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தால் தொகுக்கப்பட்டு வரும் ஐன்ஸ்டீன் படைப்புகளில் 13 தொகுதிகள் இப்போது ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. பெரும்பாலான தொகுதிகள் மூலமொழியான ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பை கொண்டுள்ளன. தொகுதிகளை டிஜிட்டல் புத்தகமாக எளிதாக புரட்டிப்பார்க்கலாம். விரும்பியதை தேடும் எளிய வசதியும் இருக்கிறது.


ஐன்ஸ்டீனின் அறிவியலை மட்டும் அல்ல, ஐன்ஸ்டீன் எனும் மனிதரையும் இந்த படைப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ஐன்ஸ்டீனின் சகோதரி மாஜா எழுதிய ஆரம்ப கால சுயசரிதையும் இதில் இடம்பெற்றுள்ளது. 

ஐன்ஸ்டீனின் அம்மா அவரது தலையின் பொருந்தா தோற்றத்தை பார்த்து கவலைப்பட்டது, ஆரம்பத்தில் மொழியை கற்பதில் அவருக்கு இருந்த குறைபாடு, பேசும் போது ஒவ்வொரு வரியையும் தனக்குத்தானே மெல்ல மீண்டும் சொல்லிப்பார்க்கும் விநோத பழக்கம் அவருக்கு இருந்தது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை இந்த படைப்புகளில் இடம்பெற்றிருப்பதை பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதே போல பள்ளித்தேர்வு முறையை ஐன்ஸ்டீன் எதிர்த்திருக்கிறார். தேர்வுகள் தேவையில்லாதது, தீங்கானது என குறிப்பிட்டுள்ள ஐன்ஸ்டீன், இதற்கு மாறாக மாணவர்களின் பக்குவம் மற்றும் அவர்களுக்கான பயிற்சிகள் மூலம் ஆசிரியர்கள் மதிப்பிடலாம் என குறிப்பிடுகிறார்.

ஐன்ஸ்டீனின் காதல் கடிதங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சொல்கின்றன என்றால் மற்ற கடிதங்கள் மற்றும் எழுத்து மூலம் அவரது சமூக பார்வையை அறியலாம்.

ஆக, ஐன்ஸ்டீன் பற்றி படிக்கும் வாய்ப்பு இப்போது இணையம் மூலம் சுபலமாகி இருக்கிறது. நீங்கள் விரும்பினால் ஐன்ஸ்டீன் பற்றி ஆய்வும் செய்யலாம். இதற்கு பிஎச்டி பட்டம் தேவை என்றில்லை, ஆன்லைனில் http://einsteinpapers.press.princeton.edu/  என்ற முகவரிக்கு சென்றாலே போதுமானது!



No comments:

Post a Comment