சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Dec 2014

டெல்லியை உலுக்கிய உபேர்: கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?


கால் டாக்ஸி என்பது நகர வாழ்க்கையின் அங்கம் என்றாகிவிட்ட நிலையில், டெல்லியில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் அனைவரையும் பதற வைத்திருக்கிறது. டெல்லியில் ‘உபேர்’ (UBER) என்ற நிறுவனத்தின் வாடகைக் காரில் பயணம் செய்த 27 வயதான பெண், அதன் டிரைவரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து அடுத்த நாளே டிரைவர் ஷிவ்குமார் யாதவ் கைது செய்யப்பட்டு விட்டார். ஆனால், கைதுக்குப் பிறகுதான் அதிர்ச்சி காத்திருந்தது. ஷிவ்குமார்தான் குற்றவாளி என்பது தெரிந்த பின்னர், இதுவரை ஐந்து பெண்கள் ஷிவ்குமார் மீது புகார் கொடுத்திருக்கின்றனர்.
‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராம்பூரில் வைத்து ஷிவ்குமார் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான். வெளியில் தெரிந்தால் அவமானம் என்பதால் மறைத்துவிட்டேன்’ என்று ஷிவ்குமாரின் அத்தையே புகார் கொடுத்துள்ளார். ராம்பூர் அருகே நாக்லதார் என்ற இடத்தில் குப்பை அள்ளும் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்திருக்கிறான். அந்தப் பெண்ணும் புகார் அளித்துள்ளார். அதேப் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவரும் புகார் தந்திருக்கிறார். ஏற்கனவே 2003ஆம் ஆண்டு ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் ஷிவ்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறான். 2006ல் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டான். 2008ஆம் ஆண்டு மறுபடியும் இன்னொரு வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டான். 2011ல் வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டு ஏழு மாதங்கள் உள்ளே வைக்கப்பட்டான். இப்படி கடந்த 15 ஆண்டு காலமாக தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, அதற்காக சட்டப்படி தண்டிக்கப்பட்ட நபர்தான் ஷிவ்குமார். இப்படிப்பட்ட கிரிமினல் பின்னணிக் கொண்ட ஒரு நபரை உபேர் நிறுவனம் எப்படி வேலைக்கு சேர்த்தது என்பதுதான் இப்போது அனைவரது மனதிலும் உள்ள கேள்வி. இதற்காக ‘உபேர்’ மன்னிப்புக் கேட்டுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் டாக்ஸிகளை டெல்லி மாநில அரசு தடை செய்துள்ளது. மேலும் இந்தப் பிரச்னை பல புதிய விவாதங்களையும் கிளப்பி உள்ளது. ‘உபேர்’ என்பது வழக்கமான கால் டாக்ஸி நிறுவனம் அல்ல. இதன் சேவையைப் பயன்படுத்த, இந்நிறுவனத்தின் ஆப்ஸை உங்கள் செல்போனுக்கு டவுண்லோட் செய்ய வேண்டும். அதன் வழியேதான் டாக்ஸியை முன்பதிவு செய்ய முடியும். வாடகையை பணமாக செலுத்த முடியாது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழியேதான் செலுத்த முடியும். டிரைவருக்கும், வாடிக்கையாளருக்கும் எந்த ஒரு பண பரிவர்த்தனையும் நடக்காது. செலுத்தும் வாடகைக் கூட இந்திய ரூபாயாக அல்லாமல் அமெரிக்க டாலரில்தான் கணக்கிடப்படும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் துவங்கப்பட்ட நிறுவனம் இது. நான்கே ஆண்டுகளில் உலகின் 45 நாடுகளில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தி இருக்கிறது. ‘உபேரின்’ இப்போதைய வர்த்தக மதிப்பு 18 பில்லியன் டாலர். சந்தையில் ஏற்கனவே இருக்கும் வாடகை கார் நிறுவனங்களை அதிவேகமாக பின்னுக்குத் தள்ளிவிட்டு ‘உபேர்’ முன்செல்வதற்குக் காரணம், அதன் புதியவகை பிசினஸ் மாடல். ஏற்கனவே வாடகை கார் உரிமம் வைத்திருக்கும் யார் ஒருவரும் உரிய ஆவணங்களைக் கொண்டு இந்நிறுவனத்துடன் இணைந்துகொள்ள முடியும். வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வாடகையில் 20 சதவிகிதம் ‘உபேர்’ நிறுவனத்துக்கு கமிஷனாக போய்விடும். மீதி 80 சதவிகிதம் அந்த காரின் டிரைவருக்கு அதாவது அதன் உரிமையாளருக்குப் போகும். இந்த பிசினஸ் மாடலைக் கொண்டு சரசரவென வாடகை கார் சந்தையை கைப்பற்றியிருக்கும் ‘உபேர்’ அதே அளவுக்கு சர்ச்சைகளையும் சம்பாதித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவதாகவும், ஆன்லைன் மூலம் பணம் பெறுவதில் முறையற்ற வணிகம் நடைபெறுவதாகவும் ‘உபேர்’ மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ‘உபேர்’ சேவை தடை செய்யப்பட்டுள்ளது. கனடா, தைவான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகள் ‘உபேர்’ மீது பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளன. தற்போது டெல்லி பிரச்னையைத் தொடர்ந்து ‘இணையம் வழியே செயல்படும் வாடகை கார் நிறுவனங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் தடை விதிக்கலாம்’ என்று மத்திய அரசு சொன்னது. இதைத் தொடர்ந்துதான் டெல்லி அரசு தடை விதித்தது. மகாராஷ்டிரா அரசோ, உபேர் மட்டுமின்றி, ஓலா, டாக்ஸி பார்சுயர் ஆகிய மூன்று நிறுவனங்களையும் தடை செய்துள்ளது. இதில் ஷிவ்குமார் யாதவ் என்ற தனி நபரும், ‘உபேர்’ என்ற தனி நிறுவனமும் மட்டுமே பிரச்னை அல்ல. மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் இத்தகைய நிறுவனத்தை கட்டுப்படுத்த; கண்காணிக்க எவ்வித ஏற்பாடும் அரசிடம் இல்லை என்பதுதான் உண்மையான அபாயம்.
ஷிவ்குமார் யாதவ் கொடுத்துள்ள நன்னடத்தை சான்றிதழ் போலியானது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி உபேர் நிறுவனத்துடன் இணைந்திருக்கும் 4000 டாக்ஸி டிரைவர்களின் பின்னணி குறித்த விவரமும் அந்நிறுவனத்திடம் இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது எல்லாம், ‘கவனமாக இருக்க வேண்டும்’, ‘ஆண் துணையோடு வெளியில் செல்ல வேண்டும்’ என்று திரும்ப திரும்ப பெண்ணை நோக்கி அறிவுரை வழங்குவது பொருளற்றது. பெண்ணுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கித் தர வேண்டியது அரசின் கடமை!

No comments:

Post a Comment