சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Dec 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017


சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்

நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை (16.12.14), கிருஷ்ண பட்சம், தட்சிணாயன புண்ய காலம், ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, அஸ்த நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம் பத்தரை நாமகரணம், நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில், பஞ்ச பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில், மதியம் 2 மணி 16 நிமிடத்துக்கு திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.
சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.14 முதல் 17.12.2017 வரை அமர்ந்து, தனது கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார்.



வியாபாரம் தழைக்கும்...
கடந்த இரண்டரை ஆண்டு காலமாக வியாபார வீடான துலாம் ராசியில் அதாவது தராசுத் தட்டில் அமர்ந்து வியாபாரத்தை முடக்கிய சனிபகவான், இப்போது பூமி காரகனாகிய செவ்வாயின் வீட்டில் நுழைகிறார். விருச்சிக ராசிக்குள் சனி அமர்வ தால் வியாபாரம் தழைக்கும்.
மக்களிடையே ஓரளவு பணப் புழக் கமும் அதிகரிக்கும். உலகெங்கும் நிலத்தின் விலை அதிகரிக்கும். பூமியின் பயன்பாடும் அதிகரிக்கும். விளை நிலங்கள் குடியிருப்புகளாக மாறும்.
மண் வளம் குறையும்!
சுனாமி  வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களால் மண் வளம் குறையும். கட்டுமானப் பணிகளுக்கு மணலைப் பயன் படுத்தாமல் வேறு மாற்றுப் பொருளை பயன்படுத்தும் நிலை ஏற்படும். பழைமையான மூலிகைகள், மரம், செடி கொடிகள் அழிவைச் சந்திக்கும். வனங்களைப் பாதுகாக்க கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைக்கு வரும்.
ரசாயனப் பொருட்கள், உரங் களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உருவா கும் தானியங்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.
கூட்டுக்குடும்ப வாழ்வு...
சகோதர காரகனாகவும் செவ்வாய் வருவதால் கூட்டுக் குடும்பங்கள் பிரியும். சகோதரர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகமாகும். சொத்துப் பிரச்னைகளால் பாரம்பரிய குடும்பங்களில் மோதல்கள் மூளும். சொத்து வழக்குகள் அதிகரிக்கும்.
20 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் விபத்து மற்றும் விநோத நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். உலகெங்கும் வன்முறைகளும் அதிகரிக்கும். பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகமாகும். ஒரு பக்கம் அதிக விளைச்சல் இருந் தாலும் மறுபக்கம் உணவுப் பொருள் தட்டுப்பாடும் நீடிக்கும். பருப்பு வகைகளின் விலை அதிகரிக்கும்.
புதிய மருந்துகள்!
அறிவியல் அறிஞர்கள், மருத்து வர்கள் பிரபலம் அடைவர். புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். கேன்சருக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். அதேபோன்று முடக்குவாதம், வெண் தழும்புகள், தோல் நோய்கள் ஆகியவற்றை தடுக்கவும், குணப்படுத்தவும்  புதிய மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படும்.
மனித குலத்தை சீரழிக்கும் வைரஸ்கள் நிறைந்த ஏவுகணைகள், வெடிமருந்துகள், ரசாயன குண்டுகள் தயாரிப்பதில் சில நாடுகள் தீவிரமாக இறங்கும். எல்லைப் பகுதியில் அறிவிக்கப்படாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும்.  எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை உயரும்.
பாதுகாப்பு துறை மேம்படுமா?

காவல், ராணுவ துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். இந்த துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கடத்தப்படவும் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இந்திய ராணுவத்துக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும். புதிய தளவாடங்கள், ஏவுகணைகளை இந்தியா வாங்கும். சீனாவுடன் சுமுகமான நட்புறவு உண்டாகும்.
மக்களிடையே சேமிப்புகள் குறையும். சிற்றின்பத்துக்கு பலர் அடிமையாவார்கள். பகை வீட்டில் சனி அமர்வதால், மக்களிடையே மனஅமைதி குறையும். மன இறுக்கம், அழுத்தத்தினால் தற்கொலைகள் அதிகமாகும்.
சாஃப்ட்வேர் துறை என்ன ஆகும்?
வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். சாஃப்ட்வேர், சினிமா துறைகளில் வேலைத் தட்டுப்பாடு அதிகமாகும். பேங்கிங், இன்ஷூரன்ஸ் துறைகள் வளர்ச்சி அடையும். அரசாங்க பங்குகளின் ஒருபகுதி தனியார்வசப்படும். ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, அமெரிக்க நாடுகளில் தீவிரவாத தாக்குதலின் அச்சம் அதிகமாகும். இந்தியாவில் தீவிரவாதிகள் கடுமை யாக ஒடுக்கப்படுவார்கள். என்றாலும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் தொடரும்.
பாரம்பரிய சின்னங்களை பாது காக்க புதிய சட்டங்கள் வரும். அதேபோல விலைநிலங்கள், நீர் நிலைகளைப் பாதுகாக்கவும் சட்டங்கள் வரும். நதிகள் இணைப்பு, சுத்தப்படுத்துவதற்கான திட்டங்களும் அமலுக்கு வரும்.நாடெங்கும் புதிய பாதைகளும் அமைக்கப்படும். துறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும்.
வயதானவர்கள் வளம் பெறுவர்!
வயதானவர்களின் எண்ணிக்கை கூடும். வயதானவர்களுக்கு ஆரோக்கியமும் அதிகரிக்கும். பல துறைகளில், நடுத்தர வயதைத் தாண்டியவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
சனி பகவான் ரிஷபத்தைப் பார்ப்பதால் ஆடு மாடுகளை விநோத நோய் தாக்கும். நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து, கலப்பின மாடுகள், ஆடுகள், கோழி களின் எண்ணிக்கை அதிகமாகும். மரபணு மாற்றப்பட்ட காய், கனிகள் சந்தையில் திணிக்கப்படும். பாரம்பரியமான உணவுகளை மக்கள் விரும்பி உண்பார்கள். உணவே மருந்து என்பதையும் மக்கள் உணரக் கூடிய அமைப்பு உண்டாகும். சிவாலயங்கள் பாதிப்படையும்.

ரிஷபமும் சிம்மமும்!
ரிஷப ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பாதிக்கும். சின்ன சின்ன அறுவை சிகிக்சைகளும் வந்துபோகும். சிம்ம ராசியையும் சனிபகவான் பார்ப்பதால் உலகெங்கும் ஆளுபவர்களுக்கு அருகிலுள்ளவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். இரண்டாம் கட்ட அதிகார வர்க்கங்களின் கை ஓங்கும். இதய நோயாளிகள் அதிகரிப்பார்கள். ரத்த அழுத்தம், ரத்தக் கொதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களும் அதிகம் ஆவார்கள். மக்கள் நிம்மதியைத் தேடி அலைவார்கள்.
சனி தன் வீடான மகரத்தை பார்ப்பதால் புதிய தொழிற்சாலைகள் உருவாகும். பழைய தொழிற்சாலைகள் சீரழியும். புதிய பணக்காரர்கள் உருவாவர். உலகெங்கும் அரசியலில் மாற்றம் உண்டாகும். பல வருடங்களாக ஆட்சிப் புரிந்த கட்சிகள் வலுவிழந்து புதிய கட்சிகள் வலுவடைந்து ஆட்சி அமைக்கும். சனிபகவான் விருச்சிக ராசியில் அமர்வதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்படும்.
பெண்ணாதிக்க வீட்டில் சனியின் பார்வை...
சனி பகவான் 7ம் பார்வையால் பெண்ணாதிக்க வீடான ரிஷபத்தைப் பார்ப்பதால், பெண்கள் மறைமுகமாக ஒடுக்கப் படுவார்கள். பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும். எனினும், பெண்களும் மாறுபட்ட வகையில் யோசிப்பார்கள். வியாபாரம் மற்றும் பெரிய பொறுப்புகளில் இருக்கும் பெண்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
முகத்தைப் பாதிக்கும் நோய்கள் உலகெங்கும் பரவும். முக சீரமைப்பு, பல் சீரமைப்புக்கு நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகும். மலைகள் அதிகமாக பாதிப்படையும். மலைச்சரிவு, மண் சரிவால் உயிரிழப்புகள் அதிகரிக்கும். குறுந்தொழில்கள் பாதிப்படையும். வியாபாரத்தில் அயல்நாட்டில் இருப்பவர்களின் முதலீடுகள் அதிகமாகும். அதனால் பாரம்பரியமாக இங்குத் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ராணுவம், அணு உலை, விண்வெளி மற்றும் செயற்கைகோள் ரகசியங்களைக் கடத்தும் உளவாளிகள் கண்டறியப்படுவார்கள். நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். பல பெரிய மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கை விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும். மாணவர் கள், இளைஞர்கள் இடையே பாலுணர்வு பற்றிய விழிப்பு உணர்வு அதிகரிக்கும். திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அவர்கள் பெரிய பதவியில் அமர்வார்கள்.

சனிப்பெயர்ச்சியும் அரசியலும்!
விபச்சாரத்தைத் தடுக்க புதிய சட்டங்கள் வரும். போதை மருந்து தடுப்புச் சட்டங்களும் மிகக் கடுமை ஆகும். நதிகள், கடலில் கலக்கும் கழிவுகளைச் சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்படும்.

மத்திய அரசில் குழப்பங்கள் உருவாகும். மத்திய அரசில் பெரிய பொறுப்புகள் வகிப்பவர்களுக்கு உடல் நிலை பாதிப்படையும். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் விபத்து களில் உயிரிழக்க நேரிடும்.
தமிழகத்தில் அரசியல் மாற்றங் கள் அதிகரிக்கும். மூன்று அணிகள் உருவாகும். தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சி உருவாகவும் வாய்ப்பு உண்டு.
விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும். விளையாட்டுத் துறை நவீனப்படுத்தப்படும்.
ரத்தத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரிக்கும். ஹீமோகுளோபின், கால்சியம் சத்துக் குறைபாடால் பலருக்கும் புதிய நோய்கள் வரும். பொதுவாக மக்களிடையே தூக்கம் குறையும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும்!
ஆகமொத்தத்தில், இந்த சனிப் பெயர்ச்சி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த பணப் பற்றாக்குறை மற்றும் பணமுடக்கம் ஆகியவற்றில் இருந்து உலகை விடுபடவைக்கும். உலகெங்கும் தாராளமயமாக்கலால் வியாபார அபிவிருத்தி, பணப்புழக்கம் அதிகரிப்பு, சாதிக்கும் எண்ணம், போட்டி மனப்பான்மை மற்றும் ஆரோக்கியத்தின் மீது அக்கறையை வளர்க்க வைப்பதாக அமையும்.

சில பரிகாரங்கள்...

பூமி காரகன் மற்றும் சகோதர காரகனாகிய செவ்வாய் வீட்டில் சனி பகவான் அமர்கிறார். எனவே, விளை நிலங்களை விற்பதைத் தவிருங்கள். உடன்பிறந்தவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரவேண்டாம். ரத்தத்துக்கு அதிபதியான செவ்வாயின் வீட்டில் சனி அமர்வதால் விபத்தில் சிக்கியவர்களுக்கு, ரத்த தானம் செய்வது நல்லது. பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். செவ்வாய் அதிகாரப் பதவிகளுக்கு உரிய கிரகம். எனவே, அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வது நல்லது. பொதுவாக 'விருச்சிக சனி’ மக்களிடையே பரபரப்பையும், அமைதியின்மையையும் உருவாக்கும்.
இறை வழிபாடும், இனிய செயல்களும், உதவும் மனப்பான்மையும் உலகம் செழிக்க உதவிசெய்யும்.

No comments:

Post a Comment