சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Dec 2014

பா.ஜ. கூட்டணியில் இருந்து விலக வைகோ முடிவு?

சென்னை: பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகப் போவதாகவும், இது தொடர்பாக 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து, முதன்முதலாக பா.ஜ.க. கூட்டணியில் வைகோ இணைந்தார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கடந்த வாரம் சார்க் மாநாட்டின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசிய மோடி, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, ''பிரதமர் மோடி தரம் தாழ்ந்து விட்டார். தமிழின அழிப்பை செய்யும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை வாழ்த்தியதோடு, அவர் மீண்டும் அதிபராக வரவேண்டும் என்று மோடி சொல்வது தவறு'' என்று கூறினார்.

இதற்கிடையே, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் கூட்டணியோடு ஊழலற்ற கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி பா.ஜ.க.வை எரிச்சலடைய வைத்தது. குறிப்பாக தே.மு.தி.க.வை வைகோ தனது பக்கம் இழுக்க பார்ப்பது பா.ஜ. தலைவர்களை கடுப்பேற்றியது.  

இந்நிலையில், ''பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் வைகோ ஒருமையில் பேசி வருகிறார். அவர் இதை நிறுத்தாவிட்டால் பாதுகாப்பாக திரும்ப முடியாது. மேலும், அவர் நாவை அடக்காவிட்டால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது. அவரை எப்படி அடக்குவது என்பது ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டனுக்கும் தெரியும்'' என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக கூறியிருந்தார்.

எச்.ராஜாவின் இந்த பேச்சு ம.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காரைக்குடியில் உள்ள எச்.ராஜா வீட்டை சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் செவந்தியப்பன் தலைமையிலான ம.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், எச்.ராஜாவின் பேச்சுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் உள்பட பல அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், ''பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோவை வெளியேற்ற வேண்டும் எனவும், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ தானாகவே விலக வேண்டும்'' எனவும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமியும் அடிக்கடி கூறி வருகிறார்.

அதேபோல், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், ‘‘மத்திய அரசை வைகோ விமர்சனம் செய்வது சரியல்ல’’ எனக் கூறி வருகிறார். பா.ஜ.க. தலைவர்களின் இந்த தொடர்பேச்சு ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா உடன் வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்டவர்களை கூட்டணி வைக்க பெரும் முயற்ஸி எடுத்த தமிழருவி மணியனும், பா.ஜனதா அரசின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றும், வைகோ பா.ஜனதா கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக வைகோ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் 8 ஆம் தேதி சென்னையல் நடைபெறவுள்ள ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் வைகோ, அதன் பின்னர் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, வரும் 2016 சட்டமன்ற தேர்தலின்போது, பா.ம.க. தலைமையிலான புதிய கூட்டணி அமையும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தற்போது வைகோவும் பா.ஜ.க.வில் விலக முடிவு செய்திருப்பது 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலின்போது புதிய கூட்டணி அமைவதற்கான அச்சாரமாகவே கருதப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த தமிழக கட்சிகளில் விஜயகாந்தின் தே.மு.தி.க. மட்டுமே தற்போது அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment