சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Dec 2014

மதுக்கடைகளை மூடுங்கள்: கலெக்டரிடம் கதறிய பெண்!

மதுக்கடைகளை மூடுங்கள்!' எனச் சொல்லி நெல்லை கலெக்டரிடம், குழந்தைகளுடன் வந்த பெண் ஒருவர் மனு கொடுத்து  கதறி அழுத காட்சி, கலெக்டர் அலுவலக வட்டாரத்தை பரபரப்புக்குள்ளாக்கியது.

நெல்லையை அடுத்த பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகத்தாய் என்ற விமலா. இவரது கணவர் பார்வதி குமார். குடிக்கு அடிமையாகி உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், கடந்த அக்டோபர் மாதம் மரணம் அடைந்தார். பார்வதி குமார் மரணத்தால் நிலைகுலைந்து போய் இருக்கிறது, விமலாவின் குடும்பம். 9 மற்றும் 4 வயதில் சுடலைராஜா, முத்து பார்வதி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

பிள்ளைகளை வளர்க்க வழி தெரியாத நிலையில், உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார், விமலா. கணவன் இறந்து 42 நாள் மட்டுமே ஆகியிருக்கும் சூழலிலும், குழந்தைகளை வளர்ப்பதற்காக பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைக்கு செல்லத் தொடங்கி இருக்கிறார்.
தன்னை போல பல பெண்கள் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுவதற்கு மதுவே காரணம் எனக்ககருதிய விமலா, மதுக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி நெல்லை கலெக்டர் கருணாகரனிடம் மனு கொடுத்தார். அப்போது அவர் தன் கதையை கலெக்டரிடம் எடுத்துக்கூறி பல குடும்பங்களை சீரழிக்கும் இந்த மதுக்கடைகளை மூடவேண்டும் என கண்ணீர் மல்க கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களை நெஞ்சுருக செய்தது.

இது பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘‘எனக்கு 30 வயதாகிறது. எனது கணவருக்கு 35 வயது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. எனது கணவர் பார்வதிகுமார் கட்டட வேலை செய்து வந்தார். ஆரம்பத்தில் அவருக்கு மதுப்பழக்கம் கிடையாது. அதனால் வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து எங்களுடன் நேரத்தை செலவு செய்வார். பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு கூட்டி செல்வார் குழந்தைகள் பிறந்ததும் அவர்களிடம் ரொம்பவே அன்பாக இருப்பார். 
சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. ‘வேலை அதிகமா இருந்ததால் உடம்பெல்லாம் வலிச்சுது. அதனால் கொஞ்சம் குடிச்சேன்..’ என்று அவர் சொல்வார். நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டேன். பிறகு, அவருக்கு குடிப்பழக்கம் அதிகமாயிருச்சு. அடிக்கடி வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பார். பகலில் கூட குடிக்க ஆரம்பித்தார். வேலைக்கு போகும்போதே குடித்து விட்டு சென்றதால் அவருக்கு வேலை கொடுக்கவே யாரும் முன்வரவில்லை.

வேலை இல்லாவிட்டாலும் கடன் வாங்கி குடிக்க ஆரம்பித்தார். நிறைய பேர் கடனை திருப்பிக் கேட்டு வீட்டுகே வர ஆரம்பிச்சாங்க. அதனால் அவரை குடிக்க வேண்டாம் என்று நான் சொன்னதும், என் மீது கோபப்பட்டார். பிள்ளைகள் அழுதால் கூட எரிச்சல் அடைவார். வேலைக்கு செல்லாமல் குடியே கதி என கிடந்த அவருக்கு கடன்காரர்கள் தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சாங்க. வேலையும் கிடைக்கலை. இந்த மன உளைச்சலில் கடந்த அக்டோபர் 19 ம் தேதி மது பாட்டிலில் பூச்சி மருந்தை கலந்துகுடிச்சுட்டு எங்க குடும்பத்தை நிர்கதியா விட்டுட்டு போயிட்டார்.

என்னை மாதிரியே பல குடும்பங்களிலும் இதே நிலைமை இருக்கு. மதுக்கடைகளை அரசாங்கமே திறந்த காரணத்தினால்தான் எனது குழந்தைகள் சிறு வயதிலேயே தந்தையை இழந்துட்டு அனாதையாக நிக்கி றாங்க. இனியும் எந்த குடும்பத்திலும் இந்த நிலைமை வர வேண்டாம். அதனால் உடனே மதுக்கடைகளை அரசு மூட வேண்டும். அதை வலியுறுத்தியே கலெக்டரிடம் மனு கொடுத்தேன்.

என்னை போல பல குடும்பத்தில் கணவனை இழந்து தவிக்கிறோம். என மகன்களை போல பல குழந்தைகள் ஆறுதல் சொல்லக் கூட ஆள் இல்லாமல் இருப்பாங்க. அந்த குழந்தைகளுக்கு அரசாங்கமே இலவசமாக உயர் கல்வி வரை கொடுக்க வேண்டும்.
இதை எல்லாம் வலியுறுத்தியே மனு கொடுத்தேன். அரசு எவ்வளவு சீக்கிரம் மதுக்கடைகளை மூடுகிறதோ அந்த அளவுக்கு இளம் விதவைகளையும் ஆதரவற்ற குழந்தைகள் உருவாவதையும் தடுக்க முடியும்’’ என்று கண்ணீருடன் சொல்லி முடித்தார்.

மது என்ற அரக்கனால் வாழ்வைத் தொலைத்து வாழும் உதாரணமாக நிற்கும் இந்த அபலையின்ன் குரல் அரசின் செவிகளை எட்டுமா?


No comments:

Post a Comment