சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Dec 2012

மகிழ்ச்சி





நேற்றும் வழக்கம் போல ரயிலில் செல்லும்போது எனது போனில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தேன். இரவு சுமார் 10.15 மணி இருக்கும். ரயிலில் நான் இருந்த பெட்டியில் நான்கைந்து பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். 

ரயில் கிண்டி நிலையத்தில் நின்ற போது ஒரு இளம்பெண் தனது மொபைலில் பேசியபடியே நான் இருந்த பெட்டியில் ஏறினாள். பல இருக்கைகள் காலியாக இருந்தபோதும் நான் இருந்த இருக்கைக்கு எதிரே உள்ள இருக்கையில் வந்தமர்ந்தாள். அதுவரை நான் அவள் முகத்தை கவனிக்கவில்லை. எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தபின் செஸ் விளையாட தோன்றவில்லை. 


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை. ஆனால் அவள் வெளிப்படுத்திக் கொண்டிருந்த மனோபாவங்கள் நான் இதுவரை எந்தப் பெண்ணிடமும் பார்த்திராததாக இருந்தது. அவள் அவ்வளவு மகிழ்ச்சியுடன் எதிர் முனையில் இருந்த நபரிடம் பேசிக்கொண்டிருந்தாள். யாரிடம் பேசுகிறாள், என்ன பேசுகிறாள் என்றெல்லாம் தெரியாது, ஆனால் அவளுக்கு பிடித்த நபருடன், அவளுக்கு பிடித்த விஷயத்தை பேசிக் கொண்டிருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தது.

என்னால் அவளையே பார்த்துக்கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை. நான் பார்ப்பதை அவள் கவனித்துவிட்டாள். எனினும் அதை ஒரு பொருட்டாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை. ஈர இதழ்கள் விரிந்தபோதேல்லாம் முத்துப் பற்கள் தலை காட்டிச் சென்றன.

பொதுவாக காலை நேரத்தில் தான் பூக்களின் இதழ்கள் ஈரத்தன்மையுடன் இருக்கும். மாலை நேரத்தில் வாடித்தான் இருக்கும். இவளின் இதழ்கள் மட்டும் அந்த இரவு நேரத்திலும் பனிவிழுந்த மலர்போல ஈரமாகவே இருந்தன. காரணம் எதிர்முனையில் ரீங்காரமிடும் வண்டின் ஓசையாக இருக்கலாம். வண்டின் ஓசைகேட்டு இதழ் விரிந்து, வண்டுக்கு வேலை வைக்காமல் பூவிலிருந்து தானாகே தேன் வழிந்து விரைவில் வந்து எடுத்துச் செல் என்று சொல்லாமல் சொல்கிறதோ என்று நினைக்கத் தோன்றியது.

அவளால் வெட்கத்தை அடக்க முடியவில்லை. திடீரென்று சிக்னல் இல்லாமல் அவள் செல் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அப்போதும் அவள் முகத்தில் நாணம் போகவில்லை. மாடு அசை போடுவதைபோல அந்த நபரிடம் பேசியதை எண்ணி எண்ணி தன்னாலேயே சிரித்துக் கொண்டிருந்தாள்.




அதற்குள் அந்த நபரிடம் இருந்து மீண்டும் போன் அடித்தது. ஒரு வினாடி கூட தாமதிக்காமல் உடனே எடுத்தாள். மீண்டும் பழைய மாதிரியே சிரிப்பு, வெட்கம் எல்லாமே. 

அதற்குள் பல்லாவரம் நிலையம் வந்து விட்டது. எழுந்து சென்று விட்டாள்.

கொஞ்ச நேரம் அவள் அடைந்த மகிழ்சியை எனக்கும் தந்த இறைவனிடம் நான் கேட்பதெல்லாம் இந்த முன்பின் தெரியாத பூங்கொடியின் மகிழ்ச்சி என்றென்றும் இதே போல நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான்.


விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment