மகளை தொந்தரவு செய்த அரசியல் பிரமுகரை தட்டிக் கேட்ட போலீஸ் எஸ்.ஐ., சுட்டுக்கொலை:
பஞ்சாபில், மகளை, "ஈவ்-டீசிங்' செய்த, அகாலி தள கட்சி பிரமுகரை தட்டிக் கேட்ட, போலீஸ் எஸ்.ஐ., கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்."பணியிடங்களிலும், வெளியிடங்களிலும் பெண்களுக்கு, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, மத்திய, மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், பஞ்சாபில் நடந்துள்ள இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமிர்தசரஸ் மாவட்ட, அகாலி தளம் கட்சியின், மாவட்ட செயலராக இருப்பவர், ரஞ்சித் சிங் ராணா. இவரும், இவரின் நண்பர்கள் சிலரும், போலீஸ் எஸ்.ஐ., ரவிந்தர்பால் சிங் மகளை, சில நாட்களாக, பின்தொடர்ந்து, தொந்தரவு செய்து வந்தனர்.எஸ்.ஐ., மகள், வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறார். அலுவலகம் சென்று வரும் போது, தினமும், ராணா தொந்தரவு செய்வதை, அந்தப் பெண், தன் தந்தையிடம் தெரிவித்தார்.
நேற்று முன்தினம், அமிர்தசரசின், செகார்தா பகுதியில் உள்ள, ராணாவின் வீட்டுக்கு, தன் மகளுடன், எஸ்.ஐ., ரவிந்திரபால் சிங் சென்றார். அங்கு தன் நண்பர்களுடன் இருந்த ராணாவுக்கும், எஸ்.ஐ.,க்கும் தகராறு ஏற்பட்டது.எஸ்.ஐ.,யை துப்பாக்கியால் சுட்டார் ராணா. இதில், காலில் காயமடைந்த எஸ்.ஐ., ரோட்டில் வந்து விழுந்தார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை, பொதுமக்கள், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது, வேகமாக வந்து வழிமறித்த ராணா, எஸ்.ஐ., மார்பில் துப்பாக்கியை வைத்து, சுட்டுக் கொன்றார்.இதில், அருகில் அதிர்ச்சியுடன், அலறிக் கொண்டிருந்த மகளுக்கும் காயம் ஏற்பட்டது. சுட்டுக் கொன்றதும், எவ்வித பதட்டமும் இல்லாமல், தன் நண்பர்களுடன் அந்த இடத்தை விட்டு ராணா சென்றார்.
எஸ்.ஐ., சுட்டுக் கொன்ற தகவலை, போலீசாருக்கு, பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும், போலீசார், நீண்ட நேரமாக வரவில்லை.இதனால், மக்கள் கடும் கோபமடைந்தனர். சாலையில் அமர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி அறிந்த போலீசார், ராணாவை தேடி சென்றனர்; அவர் தலைமறைவாகி விட்டார்.நேற்று அவரை கைது செய்துள்ள போலீசார், சிறையில் அடைத்தனர். தகவல் தெரிந்ததும், அகாலி தளம் கட்சியிலிருந்து, ராணா நீக்கப்பட்டார்.
No comments:
Post a Comment