விசுவாசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டைக் கூற வேண்டுமென்றால், வரலாறு படித்த அனைவரும் ஒருமித்த குரலொடு உரைக்கும் பெயர் ‘கர்ணன்’.
செஞ்சொற்றுக் கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்தாலும், செய்நன்றி மறவாமல், விசுவாசத்திற்கு ஒரு விலாசமாக இருந்தவன். ’சக(கா)வாசம்’ சரியில்லை என்றாலும், விசுவாசத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவன். பலர் முன்னிலையில், தான் அவமானப்பட்டுக் கிடந்த போது, தன் மானம் காத்த துரியோதனனுக்கு, தன் இன்னுயிர் தந்து, தன் நன்றியை காணிக்கையாக்கியவன்.
தன்னை நம்புகிறவர்களுக்கு, அவர்களின் நம்பிக்கைக்கு எந்த மாசும் ஏற்படாதவாறு இருப்பவர்களே, விசுவாசியாக கருதப்படுவர்.
விசுவாசம் என்பது நமது நாட்டின் மீது காட்ட பட வேண்டிய வாசம் மட்டுமல்ல. நமது வீட்டிலுள்ள அனைவரிடத்திலும், உற்றார் உறவினரிடத்திலும், நண்பர்களிடத்திலும், ஏன் அலுவலகத்திலும் கூட காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இது, இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். அதாவது, தொழிலாளி மட்டும் முதலாளிக்கு விசுவாசமாக இருந்தால் போதாது, முதலாளியும் தொழிலாளிக்கு விசுவாசமாக இருத்தல் அவசியம். எந்த வாசம் மறைந்தாலும், விசுவாசம் மட்டுமே என்றும் மணம் வீசிக் கொண்டு தான் இருக்கும்.
விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொண்டு, பணம், பதவிகளை அடைந்து சுகமாக வாழ்ந்து கொண்டிருப்போர் நம்மிடையே ஏராளம். அதுவும், இவர்களின் விசுவாசத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பாங்கு, அனைவரையும் வியக்க வைக்கும்.
செல்போன் ரிங்டோனில் அரம்பித்து, மோதிரம், செயின், போஸ்டர், ஃப்ளக்ஸ் பேனர்கள் வரை, இவர்களின் விசுவாச விளம்பரங்கள், கொஞ்சம் திகட்டத்தான் செய்கின்றன. தலைவர் ஒருவரின், வாகன பதிவு எண்ணையே, தங்களின் புதிய வாகன பதிவு எண்ணாக பதிவுச் செய்யும் இவர்கள் அடிக்கும் ’ஸ்டண்ட்’, தான், தங்களின் விசுவாசத்தை காட்டும் தற்போதைய டிரண்ட். இதன் மூலம், இவர்கள் அடைந்த/அடைகிற/அடையவிருக்கிற லாபங்கள் எண்ணிலடங்கா.
இதிலும், ஒரு படி மேலே போய் இடைச்சொருகலாக தற்போது ’உண்மையான விசுவாசி’ என்ற விளம்பரங்கள் வேறு. விசுவாசம் என்றாலே உண்மையும் அதில் அடக்கம். ’உண்மையான விசுவாசி’ என்றால் ’தலையில்லாத முண்டம்’ என்பது போல் அல்லவா உள்ளது. எந்த வாசத்திற்கும் உருகாதவர், விசுவாசத்திற்கு உருகுவார் என்பதுதான் இவர்களது தாரக மந்திரம். அதில் தான் இருக்கிறது இவர்களது தந்திரம். தந்திரம் பலிக்கவில்லை என்றால், சுகத்திற்காக, இருந்த இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தாவி, தங்களின் விசுவாசத்தை(?) நிருபிப்பர்.
பல ஆண்டு காலம் ’விசுவாசமாக’ இருப்பதாக காட்டிக் கொண்டு, “சுகவாசியாக” இருந்து, அதுவும் போதாமல் ’சுகபோகவாசி’யாக மாற ஆசைப்பட்டு, இப்போது ’தெருவாசி’யாகிப் போனவர்களின் கதை அனைவரும் அறிந்ததே.
எனவே.. விசுவாசத்திற்கு விலாசமாக இருங்கள், சுகவாசம் உங்கள் முகவரி தேடி வரும்
No comments:
Post a Comment