ஐ.நா., சபையில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு கரைப்பகுதியில் அவசர அவசரமாக 3 ஆயிரம் வீடுகளை கட்ட இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.
ஐ.நா., சபையில் சமீபத்தில் நடந்த, பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு அந்தஸ்து வழங்கக்கோரும் மசோதா 193 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையை நேற்று கூட்டி இது தொடர்பாக விவாதித்தார். அப்போது, பாலஸ்தீனத்திற்கு சொந்தமான, தற்போது இஸ்ரேல் வசம் உள்ள மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிய குடியிருப்புகளை கட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. அப்பகுதியில் யூதர்களை பெருமளவில் வசிக்க வைப்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் இந்த முயற்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை வருங்காலத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கும், சுமூக முடிவுக்கு எதிரானதாகும் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, பாலஸ்தீனம் என்ற நாடு பேப்பர் அளவிலேயே இருக்கும் என்றும், அவை ஒரு போதும் செயல்பாட்டிற்கு வராது என்பதை பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் தெரிவித்துள்ள ஒரு அறிவிப்பாகவே இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment