சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Dec 2012

பக்கிங்காம் கால்வாய்


சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.
 
ஹிந்து முதலான நாளிதழ்களில் கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நான் சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்" தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய். இதைப் பற்றி நான் இங்கே பதியக் காரணம் இந்த விஷயம் மீடியாக்களால் பேசப் படவில்லை என்பதும், நமது பாடப் புத்தகங்களிலும் பெரிதாக எந்த விவரங்களும் தரப்படவில்லை என்ற ஆதங்கம் தான். இதை அரசாங்கம் குப்பைகளாலும் இடி பொருட்களாலும் நிரப்பி மறைத்து விட முயல்வது ஒரு தேச அவமானம். தொலை நோக்குப் பார்வை (அப்படின்னா) இல்லாத நமது தமிழக அரசாங்கங்கள் ஆங்கிலேயர் விட்டுப் போன ஒரே புதையலையும் மண்ணாக்கி விட்ட அநியாயம் இது.
 
                              1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து 420 km நீளத்தில் விஜயவாடாவையும் விழுப்புரம் மாவட்டத்தையும் இணைக்கும் இந்த அதிசயம் உருவானது. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்ல இது பெரிதாக உபயோகப் பட்டு இருக்கிறது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப் பட்ட இந்தக் கால்வாய், சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. மற்ற பகுதிகளில் இன்னும் பெரிதும் பாதிக்கப் படாத இந்தக் கால்வாய் 80 சதவீதம் இன்னும் உபயோக நிலையிலேயே உள்ளது. சென்னை நகரின் குறுக்கே ஓடும் 30 km நீளமான பகுதி மட்டுமே கடும் நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி விட்டிருக்கிறது.
                           MRTS என்ற பறக்கும் ரயில் திட்டம் இந்தக் கால்வாயை ஒட்டியே திட்டமிடப் பட்டது. இந்தக் கால்வாயே ஒரு MRTS என்பது யாருக்குமே புரியவில்லை என்பது பரிதாபம் தான். இந்த ரயில் பாதை கட்டுமானம் பெரும்பாலான இடங்களில் இந்தக் கால்வாயை சிதைத்து விட்டிருக்கிறது. சில ரயில் நிலையங்கள் பக்கிங்ஹாம் கால்வாயை நிரப்பிக் கட்டப் பட்டிருப்பது போன்ற ஒரு முட்டாள்தனம் உலகத்தின் எந்த மூலையிலும் காணக் கிடைக்காத ஒன்று. 2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தமிழக மற்றும் ஆந்திர அரசுகளிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் பெரிதாக ஒரு முயற்சியும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
                       பல கோடி செலவில் சாலைகள் அமைத்து நம்மிடம் சுங்கம் வசூலிக்கும் அரசு, இது போன்ற எளிய இயற்கையான போக்குவரத்து வழிகளை ஏன் மறந்து விட்டிருக்கிறது? இன்றைய தேதிக்கு இது போன்ற திட்டத்தை அமைக்க எத்தனை ஆயிரம் கோடிகள் தேவைப்படும் என்று யாராவது யோசித்தால் தேவலை (200% மந்திரி வரிகள் தனி).
              ஒவ்வொரு முறை விமானத்தில் பறக்கும் போதும் பல இடங்களில் ஸ்கேல் வைத்துப் போட்டது போல நேராகத் தெரியும் இந்த பக்கிங்ஹாம் கால்வாய் நாம் எவ்வளவு அறிவில்லாமல், பொறுப்பில்லாமல் வாழ்கிறோம் என்பதை ஒரு அளவுகோல் போல நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு:http://en.wikipedia.org/wiki/Buckingham_Canal
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் படிப்பிணை பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment