எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது என நாசா விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த சில வருடங்களாக, மாயன்
நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று இணையத்தளங்களும் திரைப்படங்களும் மக்களை பயமுறுத்தி வருகின்றன. இதற்கு உறுதுணையாக உலகம் பூராவும் நடந்து வரும் காலநிலை மாற்றங்களும் இயற்கை சீற்றங்களும் வலம் வந்தன. மக்கள் உலக அழிவை நம்பினார்களோ இல்லையோ ஆனால் இந்த விடயம் பலரின் சாப்பாட்டு மேசைகளிலும், குடி களியாட்டங்களிலும் நல்லதொரு விவாதப் பொருளாகிவிட்டிருந்தது மறுக்க முடியாத விடயமாகும். மாயன் கலண்டர் என்றால் என்ன என்பது நிறையப் பேரிற்கு தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத
சிலருக்காக இது தெரிந்தவர்கள் இதனை உருட்டி விடலாமே! கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் மாயா என்ற ஓர் இனம் இருந்தது.
3500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனமானது கடந்த 15-ம் நூற்றாண்டில் அழிந்தது. இந்த இனத்தினர் விஞ்ஞானிகளைவிடவும் புத்திசாலியாக வாழ்ந்ததாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. மாயன் இனத்தவர் கட்டிடக் கலை, வான சாஸ்திரம், ஜோதிடம், அமானுஷ்யம், கணித சூத்திரம் போன்ற அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகர்களாக இருந்தனர். இன்றைக்கு இருப்பது போன்ற ஒரு நாட்காட்டியினை அவர்களும் வைத்திருந்தனர். இந்தக் காலண்டர் கிமு 313ல் தொடங்கியது. இதன்படி டிசம்பர் 2012ம் ஆண்டு 21ம் திகதியுடன்
முடிவடைகிறது. அதாவது சூரிய மண்டலத்திற்கு 7நாள் என்பது பூமியைப்
பொறுத்தவரை 25,625 வருடங்களாம். இதனை மாயன் காலண்டர் 5 கால கட்டங்களாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு கால கட்டமும் 5125
வருடங்களைக் கொண்டிருக்கிறது. இதன்படி 4 கால கட்டங்கள்
முடிவடைந்து இப்போது 5வது காலகட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அந்த
நாட்காட்டி 21.12.2012ல் முடிவடைகிறது. அதன்படி 21.12.2012ல் உலகு அழியும் என்று ஒரு சாரார் நம்புகிறார்கள். மாயன் குறிப்புகளில் இருந்த பலவிடயங்கள் அவர்கள் கணித்த படி நடந்திருப்பதால் இதுவும் நடக்கலாம் என்பது பலரின் வாதம். ஆனால் மாயன் நாள்காட்டி முடியும் நாளில் உலகம் அழியும்
என்று அவர்கள் ஓரிடத்திலும் குறிப்பிடப்படவில்லை. உலக அழிவு கணிப்புக்கு துணையாக இணையத் தளங்களில் நிபிரு என்றொரு கிரகத்தின்
உலகை நோக்கிய பயணம் விவாதிக்கப்பட்டது. சுமேரியர்களாள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இக்கிரகம் உலகிற்கு அருகாமையில் வரும் பொழுது துருவ மாற்றம் நிகழும் என்றும் அதனால் பூமி சுழலும் அச்சின் சரிவு மாறி அதனால் பெரும் அழிவுகள் ஏற்படும் என்று எழுதப்படுகிறது. இந்த நிபிரு கிரகத்தைப் பற்றி இணையங்களில் உலாவும் கதைகளின் சிறு தொகுப்பையும்
தந்தால் தான் இணைய எழுத்தாளர்கள் பலர் ஹாலிவுட் படங்கள்
வருவதற்கு எப்படி மூலகாரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது நமக்குப் புரியும். ஒவ்வொரு 3600 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நிபிரு நம்பூமியின் மிக
அருகே வந்து செல்வதாகவும் அப்படி அக்காலத்தில் ஒரு முறை நம்பூமியருகே அக்கோள் வந்த போது அதிலிருந்து பூமிக்கு பறந்து வந்த அனுனாக்கி (Anunnaki) எனப்பட்ட அந்த கும்பல் அவர்கள் ஆதாயத்துக்காக நம் குரோமோசோம்களை சீண்டி அவர்கள் போலவே நம்மை மாற்றி அவர்களுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டு போய்விட்டார்கள். இந்தக்கதை ஈராக்கில் அன்று கோலோங்கியிருங்த சுமேரிய நாகரிகத்தில் கிடைத்த
எச்சங்களில் இருந்து, அவர்களின் சுவடுகளில் கூறப்பட்டுள்ளது. (இது நம் இதிகாசங்களில் நாம் படித்த பறக்கும் ரதங்கள், வானிலிருந்து வந்த வானலோக தேவர்கள், விண்சேனைகள் கதைகளை நினைவு படுத்தவில்லையா?.) 1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 -ஆம்
ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது. 7 பில்லியன் மைல்கள்
தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. இதனை பலரும் புதுசாக கண்டுபிடிக்கப்பட்ட ஏரிஸ்(Eris) என்ற கோள்தான் அது என்கின்றனர். ஏரிஸ் எனப்படும் கோள் உண்மையாகவே இருப்பதாகவும் அது புளுடோ போல் ஒரு சிறிய கிரகம் என்றும் அது சூரியவெளிக்கு அப்பாலேயே தான் சுற்றும் என்றும் நாசா விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இது பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய தூரம் சுமார் 4 பில்லியன் மைல்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இன்னொரு கூட்டமோ இப்படி நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட
மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபிரு” தான் என்கின்றனர். அதன் போக்கை கண்காணிக்கவே அவசரமாக கொண்டு உலகின் மிகப்பெரிய South Pole Telescope- ப்பை நாசா தென் துருவத்தில் கொண்டு நிறுவியுள்ளதாம். உலக அளவில் இதுபதட்டத்தையும்
மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் நாசாவும் அரசும்
இத்தகவலை மறைத்து வருகின்றது என்கின்றனர். எது எப்படி இருப்பினும் நமது உலகத்திற்கு அருகாமையில் இது வரைக்கும் எந்தக் கிரகமோ இல்லை எரிகற்களோ இல்லை என்று நாசா சொல்வதை நம்பலாம். ஏனென்றால்
அப்படி ஏதாவது 2012.12.21 வருவதாக இருந்தால் வேறு யாராவது விண்வெளி கண்காணிப்பாளர் கண்ணிலாவது பட்டிருக்கும். சரி உலக அரசுகள் எல்லாம் சேர்ந்து இதை மறைக்கின்றன என்று நினைத்துக் கொண்டால்
கூட நாம் இருக்கும் சில நாட்களை சந்தோஷமாகக் கழிக்கலாமே! இது வரையில் நாம் நம் மனச்சாட்சிக்கு மாறாக எதையாவது செய்திருந்தால் அதனை மாற்ற கிடைத்த சந்தர்ப்பமாகக் கருதி சரி செய்யலாமே! உலகம் அழியாவிட்டால் கூட
இது நமக்கு நல்லதொரு ஆரம்பமாகட்டுமே! ஆனால் ஓன்று மட்டும் உண்மை. உலகம் அழிய நிபிறு எல்லாம் தேவையில்லை. நாங்கள் அதற்கு செய்து வரும் இறுதிச் சடங்குகளே போதும். அது தானாகவே அழிந்துவிடும் காலம் அதி தொலைவிலில்லை.
No comments:
Post a Comment