ஈழ விடுதலையை தாண்டியும் கூட, பொது விடயங்களில் கருணாநிதியை விமர்சிக்கும் அளவுக்கு ஜெயலலிதாவை எவரும் விமர்சிப்பது போல எனக்கு தெரிய வில்லை. எல்லா தளங்களிலும் கண்கூடாக பார்க்கும் விஷயம் இது.
அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் கூட ஜெயலலிதா குறித்து பேசும் போது, மிக கவனமாக வார்த்தைகளை கையாளுகிறார்கள். ஆனால் கருணாநிதிக்கு இந்த தயவு தாட்சண்யங்கள் கிடையாது.
சமூக ஆர்வலர்கள்,பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் கூட கருணாநிதியை திட்டி தீர்க்கும் அளவுக்கு ஜெயலலிதாவை சீண்டுவதில்லை. ஜெயலலிதா என்றால் எல்லோருக்கும் ஒரு பயம் வந்து விடுகிறதா? இல்லாவிட்டால் விமர்சிக்கும் அளவுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எதுவும் இல்லையா?
ஆயிரத்து நூறு கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை கொண்டு கட்டப்பட்ட தமிழ்நாடு தலைமை செயலகத்தை,கருணாநிதி கட்டினார் என்ற ஒற்றை காரணத்திற்காகவே, மருத்துவமனையாக மாற்றியே தீருவேன் என்று சபதம் எடுத்திருக்கும் ஜெயலலிதாவை ஏன் பத்திரிக்கைகள் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க தயங்குகிறார்கள்? உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கும்,பழி தீர்ப்புகளுக்கும்,ராசி பலன்களுக்கும் மக்களின் வரிப்பணம் தான் கிடைத்ததா?
தெற்காசியாவின் மிக சிறந்த நூலகமான அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கியே தீருவேன் என்று சபதம் எடுத்து எல்லோரிடமும் வாங்கி கட்டியது மறந்து போய் விட்டதா? எத்தனை முறை பட்டாலும், எத்தனை பேர் கையால் குட்டு வாங்கினாலும் உங்கள் மற மண்டைகளுக்கு ஒரு நாளும் உறைக்காதா?
ஒவ்வொருநாளும் சட்டசபை நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது, என் எண்ணத்தில் உதிப்பது எல்லாம், அண்ணா தி.மு.க சட்டசபை உறுப்பினர்கள், ஒவ்வொருவரின் முகத்திலும் காரி உமிழ வேண்டும் போல தோன்றுகிறது.
மக்கள் பிரச்சினைகளை இவர்கள் பேசுவார்கள் என்று பார்த்தால், ஜெயலலிதா குறித்த துதி பாடலுக்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. ஜெயலலிதாவை சிரிக்க வைப்பதற்காகவும், குளிர வைப்பதற்காகவும் மட்டுமே இவர்கள் சட்டசபைக்கு செல்கிறார்கள். ஆனால் இந்த கூமுட்டைகள் தான் இப்படி பேசுகிறது என்றால், அதை மறுத்து சொல்ல வேண்டாமா ஒரு பொறுப்பான முதல்வர். ஆனால் அவரோ இதை எல்லாம் தீவிரமாக ரசித்து, வாய் விட்டு சிரித்து, புளகாங்கிதம் அடைகிறார். என்ன ஒரு மன நிலை பாருங்கள். இவர்கள் பேசி சிரிக்கவும், கூத்தடிக்கவுமா தமிழ்நாடு சட்டமன்றம் இருக்கிறது? இதற்காக தானா நம் வரிப்பணம் முழுவதும் விரயமாகிறது?
அன்பார்ந்த பத்திரிக்கையாளர்களே! பத்திரிக்கை தர்மம் என்ற ஒன்று இருக்குமானால் தயவு செய்து, தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஆட்சியாளர்களின் அவலங்களை, தங்கள் தனிப்பட்ட பகைகளை பழி தீர்த்து கொள்வதற்காக, இவர்கள் மக்கள் வரிப்பணத்தில் செய்யும் அழிச்சாட்டியங்களை எல்லாம் மக்கள் முன் மிக சரியாக எடுத்து வைக்க வேண்டியது உங்கள் தலையாய கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் கூட சட்டசபை தீர்மானம் போட்டோம் நாங்கள் என்று சொன்னார்களே.ஏன் இதோ திருப்பதிக்கு வரும் ராஜபக்சே எல்லா தமிழனுக்கும் பொது எதிரி தானே. கருணாநிதியின் ஆட்கள் கருப்பு சட்டை அணிந்து கபட நாடகம் ஆடி விட்டு போகட்டும். அவர்களை நாம் கண்டு கொள்ளவே வேண்டாம். ஈழ மக்கள் மீது அக்கறை இருந்தால் அண்ணா தி.மு.க வும், ஏன் மற்ற அமைப்புகளோடு சேர்ந்து ராஜபக்சேவை எதிர்க்கும் போராட்டத்தில் களம் இறங்க கூடாது?அண்ணா தி.மு.க காரன் எல்லாம் தமிழன் இல்லையா? உங்கள் கட்சி தலைவி ஜெயலலிதாவிடம் இவை குறித்து பேசுவதற்கெல்லாம் உங்களுக்கு தைரியம் கிடையாதா? நீங்கள் ஒரு வலுவான ஆளும் மாநில கட்சி. நீங்களும் சேர்ந்து இந்த போராட்டத்தில் களத்தில் இறங்கினால் மத்திய அரசுக்கு எந்த அளவுக்கு ஒரு தலைவலியாக அமையும் என்பதை உணர வேண்டாமா? நம் ஒற்றுமை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிகாரனுக்கு எல்லாம் ஒரு கிலியை ஏற்ப்படுத்த வேண்டாமா?
இது கருணாநிதிக்கு வக்கலாத்து வாங்கும் பதிவு அல்ல. கருணாநிதியை விமர்சிக்கும் அதே அளவுக்கு ஜெயலலிதாவும் விமர்சிக்க பட வேண்டியவர் என்பதற்கான பதிவு.
No comments:
Post a Comment