சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Oct 2014

‪உணவு யுத்தம்‬! ‪ - புரோட்டா‬ vs ‪சமோசா‬

பயணம் செய்கிறவர்கள் முந்தைய காலங்களில் தாங்களே கட்டுச்சோற்றை கையில் எடுத்துக்கொண்டு போவார்கள். ஒருமுறை புளியோதரை ெய்து கொண்டு போனால் ஒருவாரம் வரை வைத்து சாப்பிடுவார்கள்.

இதுபோலத்தான் வடஇந்தியர்கள் தங்கள் பயணத்தில் ரொட்டியைச் சுட்டு, துணியில் மூடிவைத்து நாள்கணக்கில் சாப்பிடுவார்கள். இன்று பயணத்தில் உணவு கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
குடும்பத்துடன் சுற்றுலா போகிற நாளில்தான் உணவை கையில் கொண்டு போகிறார்கள், அதுவும் ஒருவேளை உணவுதான்.

தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் சாலைகளில் பயணம் செய்யும்போது தரமான உணவகங்கள், அதுவும் குறைந்த விலையில் கிடைப்பதைக் கண்டிருக்கிறேன். கர்நாடகாவில் நான்கு பேர் பயணம் செய்தோம். காலை உணவுக்கு உடுப்பி அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம். தோசை, அடை, பொங்கல், வடை என சாப்பிட்டோம். நான்கு பேர்கள் சாப்பிட்ட மொத்த பில் 96 ரூபாய்.
ஓர் ஆளுக்கு காலை உணவுக்கு இருபத்தைந்து ரூபாய்கூட செலவில்லை. இதே உணவை சென்னையில் சாப்பிட்டிருந்தால் குறைந்த பட்சம் 600 ரூபாய் பில் வந்திருக்கும். இதே நிலைதான் வடஇந்தியாவிலும் காலை உணவுக்கு அதிகபட்சம் முப்பது ரூபாய்க்கு மேல் ஒருநாளும் செலவானதில்லை.

அதே சமயம், வடமாநிலங்களில் உள்ள தென்னிந்திய உணவகங்களில் சாப்பிடப் போய்விட்டால் தமிழகத்தைப்போல இரண்டு மடங்கு வசூல் செய்துவிடுகிறார்கள். டெல்லியில் உள்ள பிரபல தென்னிந்திய உணவகத்தில் ஒரு தோசை விலை ரூ.300. அதற்கும் காத்துக்கிடக்க வேண்டும். உணவை விற்பதில் ஏன் இந்த பேதம், ஏமாற்றுத்தனம்.
தமிழக சாலையோரக் கடைகளில் தரமான உணவும் கிடைப்பதில்லை, விலையும் மிக அதிகம். குடும்பத்துடன் பயணம் செய்கிறவர்கள் சென்னையில் இருந்து மதுரை போய் சேருவதற்குள் 1500 ரூபாய் உணவுக்கு செலவிட வேண்டிய நிலை உள்ளது.
பகல் பயணத்தில் உணவு கிடைப்பது ஒருவித கொள்ளை என்றால் இரவு பயணத்தில் கேள்வியே கிடையாது. அதுவும் புறவழிச் சாலைகளில் சைவ உணவகங்கள் இரவு பத்து மணியோடு மூடப்பட்டுவிடுகின்றன என்பதால், சாலையோர அசைவ உணவகங்களில் கொள்ளை விலையில் உணவை விற்கிறார்கள். அந்த உணவு சாப்பிட்ட அரைமணி நேரத்தில் வயிற்று வலியை உண்டாக்கக்கூடியது. குழந்தைகளால் அவற்றைச் சாப்பிடவே முடியாது.
இரவு பயணத்தில் சாலையோர பரோட்டாக்களைப் போல மனிதர்களை தண்டிக்கக் கூடிய உணவு எதுவுமில்லை, ஆனால், எதைப்பற்றியும் கவலையில்லாமல் மக்கள் பின்னிரவு மூன்று மணிக்கும் பரோட்டாவை பிய்த்துப்போட்டு கருஞ்சிவப்பு சால்னாவை ஊற்றி அள்ளி அப்புகிறார்கள். பசிதான் அதற்குக் காரணம் எனச் சொல்ல முடியாது.
'ஒரு ஜான் வயிறே இல்லாட்டா...
இந்த உலகில் ஏது கலாட்டா?
உணவுப் பஞ்சமே வராட்டா...
நம்ம உயிரை வாங்குமா பரோட்டா?’
என்ற பாடலை 1951-ல் வெளியான 'சிங்காரிபடத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் - ராகினி ஜோடி ஆடிப்பாடுவார்கள். பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பாக ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தில் தமிழகத்துக்கு மைதா மாவு அரசாங்கத்‌தால் அறிமுகம் செய்யப்பட்டு அதிலிருந்து பரோட்டா சாப்பிடும் பழக்கம் உருவானது என்கிறார்கள்.
இன்றைக்கு தமிழகத்தில் ஒருநாள் பரோட்டா கிடைப்பது நின்று போனால் பெரிய போராட்டங்களும் கொந்தளிப்புகளும் உருவாகிவிடும். எந்த ஊருக்குப் போனாலும் இரவு உணவகக் கடைகளில் பரோட்டா சக்கைப்போடு போடுகிறது. தமிழர்களின் முக்கிய இரவு உணவு இன்று பரோட்டாதான். நல்லவேளை அதை வீட்டில் தயாரிக்க இன்னமும் பழகவில்லை.
இந்தியா மட்டுமின்றி வங்காளதேசம் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, என எங்கும் பரோட்டா சாப்பிடும் பழக்கமிருக்கிறது. பரோட்டா சாப்பிட்டால், உடல் நலத்துக்குக் கேடு. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என நோய்கள் வரக்கூடும் என்கிறார்கள் டயட்டீஷியன்கள். காரணம் பரோட்டா, முழுக்க முழுக்க மைதாவால் செய்யப்படும் உணவு. அத்துடன் அதற்குத் தொட்டுக்கொள்ளும் சால்னா, போன்ற கிரேவிகளில் அதிக காரம் மற்றும் மசாலா சேர்க்கப்படுகின்றன.
பொதுவாக, உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள் பரோட்டா சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், அறிவு உழைப்பாளிகளுக்கு பரோட்டா நல்லதல்ல.
ஆசைக்காக எப்போதாவது சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு ஏற்றதன்று என்கிறார்கள். மைதா எப்படி உருவாக்கப்படுகிறது தெரியுமா? நன்றாக மாவாக அரைக்கப்பட்டக் கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை 'பென்சாயில் பெரோசிடேஎன்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். இதுதவிர, 'அலாக்சின்என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் செயற்கை நிறமூட்டிகளும் சேர்க்கப்படுகிறது. அலாக்சின், சோதனைக்கூடத்தில் எலிகளுக்குத் தரப்படும் பரிசோதனை ரசாயனமாகும். மைதாவில் நார்ச்சத்து கிடையாது. ஆகவே, அதில் செய்த உணவை சாப்பிடுவது நமது ஜீரண சக்தியைக் குறைத்துவிடும்.

இதுபோலவே பயணத்தில் சாப்பிடக்கூடாத இன்னொரு உணவு சமோசா. எந்த எண்ணெய்யில் செய்திருக்கிறார்கள், எப்போது செய்தார்கள், சமோசாவுக்குள் எந்தப் பொருட்களைத் திணித்து வைத்திருக்கிறார்கள் என எதுவும் தெரியாது. இதை நாக்கு கண்டுபிடித்துவிடாமலிருக்க புதினா சட்னி கொடுத்துவிடுவார்கள்.
வட இந்தியாவில் தயாரிக்கப்படும் சமோசாவும் தமிழகத்தில் தயாரிக்கப்படும் சமோசாவுக்கும் பெயரும் வடிவமும் மட்டும்தான் ஒன்றுபோலிருக்கின்றன, சுவையும் தரமும் ஒப்பிடவே முடியாது.
சமோசா மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அறிமுகமான உணவு. டெல்லியை ஆண்ட மொகலாயர்கள் காலத்தில் அறிமுகமாகியிருக்கிறது. தெற்காசிய நாடுகளில் பிரபலமான சிறு தீனியாக சமோசா உண்ணப்படுகிறது. அரபு உலகில் சமோசா விருப்பமான உணவாகும்.
14-ம் நூற்றாண்டுக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது. கவி அமீர் குஸ்ரு சமோசா பற்றி ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். இதுபோலவே துக்ளக் ஆட்சியில் வந்த பயணியான இபின் பதூதாவும் சமோசாவில் மசித்த இறைச்சி வைக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிடுகிறார்.
அக்பர் காலத்தில் சமோசா விருப்ப உணவாக அரண்மனையில் இருந்திருக்கிறது என்பதை அயினி அக்பரி குறிப்பிடுகிறது. கோவாவில் வசித்த போர்த்துக்கீசியர்கள் சமோசாவில் சிக்கன், மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றைச் சேர்த்து உருவாக்கியிருக்கிறார்கள். அதன் பெயர் 'சமுகாஸ்’.
'குட்டி சமோசாஹைதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஈரானிய உணவகங்களில் மட்டுமே ஆரம்ப காலங்களில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், வங்களாதேசம், பர்மா, மலேசியா என ஆசிய நாடுகளில் சமோசா விதவிதமான சுவைகளில் கிடைக்கின்றன.
உகாண்டா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் சமோசா பிரபலமானது. உணவு வேளைகளுக்கு இடையில் ஏற்படும் பசியை போக்கிக்கொள்ள உழைப்பாளிகள் பலரும் சமோசாவைத்தான் முக்கிய உணவாகக் கருதுகிறார்கள். ஆனால் அதன் தரம் மற்றும் பயன்படுத்தப்படும் எண்ணெய் முதலியன மோசமான பின்விளைவுகளை உருவாக்குவதாகயிருக்கிறது.
உணவுப் பண்பாட்டில் நாம் பழங்குடி மக்களை பின்தங்கியவர்களாக நினைக்கிறோம். ஆனால், அவர்களிடம் துரித உணவுப் பழக்கமோ, இதுபோல சமோசா, பஜ்ஜி, நூடுல்ஸ் சாப்பிடும் பழக்கமோ கிடையாது.

நான் மத்தியப் பிரதேச பைகா பழங்குடி மக்களில் சிலரை அறிவேன். ஒருமுறை அவர்களோடு இணைந்து போபாலில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள பயணம் செய்ய நேர்ந்தது.
அந்தப் பயணத்தில் நான் அவர்களிடமிருந்த உணவுக் கட்டுப்பாட்டினைக் கண்டு வியந்து போனேன். பயண வழியில் தென்படும் எந்த உணவுப் பொருள்களையும் சாப்பிட அவர்கள் ஆசை கொள்வதேயில்லை. ஒருவேளை ஏதாவது ஓர் உணவை வாங்கிக் கொடுத்தால்கூட சாப்பிட மறுத்துவிடுகிறார்கள்.
சரியாக மதிய உணவை 12 மணிக்கு எடுத்துக் கொள்கிறார்கள். மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் இரவு உணவை முடித்துவிடுகிறார்கள். இரவு 12 மணிக்கு மேல் சிக்கன் நூடுல்ஸ் சாப்பிடுகிற ஓர் ஆதிவாசியை எங்கும் காண முடியாது. அதுபோலவே உணவைச் சாப்பிடும் போதும் அவசரப்படுத்துவதில்லை. மெதுவாக, நன்றாக அரைத்து மென்று விழுங்குகிறார்கள். சாப்பிடும்போது வேறு எந்த யோசனையுமில்லை, பேசிக் கொள்வதுமில்லை. வயிற்றில் கொஞ்சம் பசியிருக்கும்படியாக பார்த்துக்கொள்கிறார்கள். விழா நாட்களில் மட்டுமே முழுவயிறு சாப்பாடு. இவர்களின் உணவுக்கட்டுப்பாடும் பழக்கமும் ஏன் நமக்கு வராமல் போய்விட்டது.
இன்று நீண்டதூரப்பயணங்களுக்காகச் சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. அதிவேக ரயில்கள், பேருந்துகள் என முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கான உணவைப் பொறுத்தவரை அதே மோசமான நிலைதான்.
கூச்சம் பார்க்காமல் உடல் நலத்தில் அக்கறையுள்ளவர்கள் இனி வீட்டிலிருந்தே தேவையான உணவை கொண்டு போக வேண்டியதுதான்.
முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் என ஒரு நாளில் பல்லாயிரம் பேர் ரயிலில் பேருந்தில் பயணம் செய்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரின் ஒரே புகாராக இருப்பது உணவு சரியில்லை என்பதுதான். ஆனால், இந்தக் குரல் யாரை எட்ட வேண்டுமோ அவர்களுக்கு கேட்பதேயில்லை.
ஒருவேளை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு என ரயில்வேயில் தனி உணவு அளிக்கபடுகிறதா என்ன?

ஒரேயொரு நாள் அவர்கள் ரயிலில் வழங்கபடும் உணவை, அல்லது நெடுஞ்சாலையோர உணவுகளை சாப்பிட்டுப்பார்க்கட்டும் அப்போது தெரியும் மக்களின் அவலநிலை.

No comments:

Post a Comment