ஜெயலலிதா சிறையில் இருப்பதற்கு ஸ்ரீரங்கம் சென்டிமென்ட் காரணமா?
ஜெயலலிதா மீதான பெங்களூரு சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு தமிழகத்தில் பெரும்பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது. ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி தமிழகம் முழுவதிலும் போராட்டங்கள், கடையடைப்புகள், உண்ணாவிரதம், மவுன ஊர்வலம் என போராட்டங்கள் அடுத்தடுத்து அதிகரித்துக் கொண்டுதான் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை.
இந்நிலையில் ஜெயலலிதா முதல்வர் பதவியிழந்ததற்கும், சிறையில் அடைக்கப்பட்டதற்கும் திருச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி சென்டிமெண்ட் தான் காரணம் என்கிற 'டாக்' பரவலாக எழுந்துள்ளது.
இது குறித்து விசாரித்தோம். " ஸ்ரீரங்கம் தொகுதியில் ஒருகாலத்தில் காங்கிரஸ் அதிகமுறை வெற்றி பெற்று இருந்தாலும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை ஆரம்பித்தபிறகு இன்றுவரை ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
இடையில் ஒருமுறை ஜனதாதளமும், ஒரு முறை தி.மு.க. வெற்றி பெற்றாலும் ஸ்ரீரங்கத்தில் அதிக செல்வாக்கு உள்ள கட்சி என்றால் அ.தி.மு.க.தான். ஆனால் இந்த தொகுதியின் சென்டிமென்ட் என்னவென்றால் ஒருமுறை இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர்களின் அரசியல் வாழ்வு, அதன்பிறகு அவ்வளவு பிரகாசமானதாக இல்லை என்பதுதான் வேதனை. அந்த சென்டிமென்ட்தான் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்திடுச்சின்னு பேச்சு இருக்கு" என்றனர்.
இதுகுறித்து விளக்கமாக தெரிந்துகொள்ள பலரை சந்தித்தோம். அவர்கள் இந்த நேரத்தில் கருத்து சொல்ல விருப்பமில்லை என ஒதுங்கிக்கொண்ட நிலையில் சிவாஜி சமூக நல பேரவையின் மாநில துணைதலைவர் சிவாஜி சண்முகம் நம்மிடம்," ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆர் முன்னிலையில், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வெள்ளி செங்கோல் வழங்கி புரட்சி தலைவி என ஜெயலலிதாவிற்கு பட்டம் வழங்கியவர் முன்னாள் அமைச்சர் ஆர்.செளந்தர்ராஜன்.
எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் 10 வருடங்கள் அமைச்சராக இருந்த இவர், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார். அதன்பிறகு அவரால் அரசியலில் பிரகாசிக்க முடியாமல் போனது, ஒருகட்டத்தில் செளந்தர்ராஜன், அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இறந்துபோனார்.
அடுத்து 1989 தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜனதா தளம் கட்சி சார்பில் வெங்கடேஸ்வர தீட்ஷிதர் வெற்றி பெற்றார். பிறகு அவர் அரசியலிலேயே இல்லை.
அவருக்குபின் 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றவர் அமைச்சரானார் குப.கிருஷ்ணன், ஆனால் இவர் கட்சி தலைமையிடம் ஏற்பட்ட அதிருப்தியால் கட்சி மாறினார். சில வருடங்களுக்கு முன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.எல்.ஏ ஆனார். இப்போது அவரைவிட புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க.வில் ஜூனியர்களான விஜயபாஸ்கர், சுப்பிரமணியன் ஆகியோர்கூட அமைச்சர்களாகிவிட்டார்கள். ஆனால் குப.கிருஷ்ணன் இன்றுவரை எம்.எல்.ஏ.வாகவே நீடிக்கிறார்.
அடுத்த 1996 தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயவன். அவர் அதன்பிறகு அரசியலில் இருந்தே காணாமல் போய்விட்டார். 2001ல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.கே.பாலசுப்பிரமணியன், அமைச்சராகவும் இருந்தார். அதன்பிறகு அவர் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. கடந்த 2009 எம்.பி தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார், வெற்றி வாய்ப்பை இழந்தார். நீண்ட முயற்சிக்கு பிறகு அ.தி.மு.க திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரானார். அந்த பொறுப்பும் அடுத்த பத்து நாட்களுக்குள் பறிக்கப்பட்டது.
இது இப்படியென்றால் 2006ல் இங்கு போட்டியிட்ட பரஞ்ஜோதி, மாவட்ட செயலாளராக ஆனார், பிறகு அமைச்சரானார். ஆனால் சர்ச்சையில் சிக்கி அனைத்தையும் இழந்து இப்போது எம்.எல்.ஏ.வாகவே இருக்கிறார். பல வருடங்களாக அமைச்சராக முயற்சி செய்கிறார் அது நடக்கவே இல்லை. ஒருமுறை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டவர்கள் அரசியலில் ஓகோவென உயருவார்கள். அதேவேகத்தில் அவர்களுக்கு சருக்கல் ஏற்படுவது என்பது கடந்த முப்பது வருடங்களாக ஸ்ரீரங்கம் தொகுதி சென்டிமெண்டாக உள்ளது. அதில் கடந்த 2011ல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராகவும் ஆன முதல்வர் ஜெயலலிதாவும் சிக்கியிருக்கிறார் என்றார்.
அடுத்து நம்மிடம் பேசிய சிலர், "ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் 1977க்கு முன்னாள் மொட்டை கோபுரமாக இருந்தது. அப்போதெல்லாம் ராத்திரி வேளையில் கோயிலை பூட்டிட்டுதான் போவாங்க. இதேபோல் ராஜகோபுரத்திற்கும் இந்திய அரசுக்கும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டால் கூட இரண்டு அரசுக்கும் ஆபத்து என்பது ஐதீகம்.
கடந்த 1978ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அகோயல மடத்தின் ஜியரின் ஆலோசனையை கேட்டு 13 நிலைக்கலை புனரமைக்கவும், மொட்டை கோபுரத்தை ராஜகோபுரமாக கட்டுவதற்கு உத்தரவிட்டார். இந்த பொறுப்பை எடுத்துக்கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா இதற்கான பணிகளை செய்து முடித்தார். எப்போது ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டதோ அதிலிருந்துதான் இலங்கையில் போர் தீவிரம் அடைந்தது.
கடந்த 25.3.87ல் ஸ்ரீரங்கம் கும்பாபிஷேகம் நடந்தது. அந்தவிழாவில் எம்.ஜி.ஆரும், இந்திய குடியரசு தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் கலந்துகொண்டார்கள். எம்.ஜி.ஆர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் கலந்துகொண்ட இந்த விழாதான் கடைசிவிழா, அதன்பிறகு அவரது உடல்நிலை மிகவும் பலவீனமானது எல்லாம் பலருக்கு தெரியும்.
இந்நிலையில் இந்த முறை ஜெயலலிதா ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிகளை துவக்கி வைத்துள்ளார். அடுத்தவருடம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அவரது போதாதகாலம் அவருக்கு இஷ்ட தெய்வமான ரெங்கநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் முதல்வராக கலந்துகொள்ள முடியாத நிலை அவருக்கு நேர்ந்திருக்கு" என்றனர்.
ஸ்ரீரங்கத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெயலலிதா சிறையிலடைக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத பந்தலில் மைக்பிடித்தவர்கள், "ரெங்க நாதா... உனக்கு மனசாட்சியே இல்லையா...?எங்கம்மா ஜெயலலிதா உன் கோயிலுக்கு எவ்வளவு செஞ்சிருப்பாங்க, எத்தனை பேருக்கு அன்னதானம் போட்டிருப்பாங்க, அவங்கள போய் ஜெயில்ல அடைச்சிட்டியே ரெங்க நாதா..!" என முழங்கி கொண்டிருந்தார்கள்.
No comments:
Post a Comment