சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Oct 2014

நிரந்தரமானவருக்கு இன்று நினைவு நாள்!


'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை... எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை' என்ற கவிஞர் கண்ணதாசனுக்கு இன்று நினைவு நாள்... அதையொட்டி, பழ நெடுமாறன் எழுதிய ‘கவியரசர் என் காவலர்’ எனும் நூலில் இருந்து சில தகவல்கள்... பெருந்தலைவருக்குச் சிலை! பெருந்தலைவர் காமராஜர் மறைந்து முதலாம் ஆண்டு நினைவு நாள் நெருங்கும்போது, சென்னை, திருவல்லிக்கேணியில் சிலர் காமராஜருக்கு சிலை வைப்பதற்கான முயற்சியில் இருந்தனர். அது தொடர்பாக என்னையும் கவிஞரையும் (கண்ணதாசன்) சந்தித்தார்கள். அவர்கள் நிறுவவிருந்த மார்பளவு உருவச் சிலைத் திட்டத்தை அடியோடு மாற்றி தலைவர் காமராஜரின் முழு உருவச் சிலையை கடற்கரையில் நிறுவுவது என்று தீர்மானித்து, அதற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இருந்தேன்.
அது சாதாரண உருவச்சிலையாக இருக்கக் கூடாது என்றும், அது வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் தீர்மானித்தோம். ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண்களைத் திறந்து, அவர்களின் வயிற்றுப் பசியையும் போக்கிய தலைவரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைய வேண்டும் எனறு தீர்மானித்தோம். ஒரு சிறுவனையும், சிறுமியையும் இரு கரங்களில் அரவணைத்தபடி கம்பீரத்துடன் தலைவர் நிற்பது போல அந்தச் சிலையை வடிக்க முடிவு செய்தோம். சிலை தயாராகிவிட்டது. திறப்பு விழாவுக்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கும்போது... காமராஜர் சிலையின் பீடத்தில் பொறிக்க கம்பரின் கவிதை வரிகளை கண்ணதாசன் எடுத்துக் கொடுத்து இந்த வரிகள் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார். தசரதன் இறந்த துயரத்தை பதிவு செய்யும் அந்த வரிகள்... ‘நந்தா விளக்கு அணையா நாயகனே! நாநிலத்தார் நந்தாய்! தனி அறத்தின் தாயே, தயாநிதியே! எந்தாய்! இகல் வேந்தர் ஏந்தே! இறந்தனயே! அந்தோ! இனி வாய்மைக்கு ஆர்உளரே மற்றுலகில் உங்கள் கவிதையையும் எழுதிக் கொடுங்கள் அதையும் சேர்த்து பொறித்து விடலாம் என்றேன் நான். அந்த அற்புதமான வரிகளை உடன் எழுதித் தந்தார் கவிஞர் அது... வாரா விடுதலைஅயை வரவழைத்தாய்; வளரறிவில் தேரா இளைஞர் நலம் தேர்வித்தாய்: எஞ்ஞான்றும் ஊரார் நலம் காக்க உடல் நலத்தைத் தானிழந்தாய் சீராரும் தலைவா! நின் திருமேனி தொழுகின்றோம்! கவிச்சக்கரவர்த்தி, கவியரசர் இருவரின் பொன்னெழுத்துக்களுடன் சிற்பி நாகப்பா ஜெயராமன் வடிவமைத்த அந்தச் சிலைதான் கடற்கரையில் காட்சியளிக்கிறது. வாரியாரும், கவிஞரும்... வாரியாரின் மீது மிகுந்த நேசமும் அவரது சொற்பொழிவின் மீது ஈடுபாடும் கொண்டவர் கவிஞர். கந்தன் கருணை படத்தை தயாரித்தபோது சென்னை, தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதின மண்டபத்தில் வாரியாரின் கந்த புராண சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த கவிஞர், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திரையுலகப் பிரபலங்களுக்கு அழைப்பு கொடுத்தார். வாரியாரின் முருகனின் புகழ்பாடும் அற்புதமான சொற்பொழிவை அப்படியே பதிவு செய்து கந்தன் கருணை திரைப்படத்தில் இணைத்து விட்டார். படத்தில் இடம் பெற்ற அந்தக் காட்சி மிகவும் யதார்த்தமாக அமைந்தது வாரியாருக்கு மேலும் பெருமை சேர்த்தது.
கவிஞரின் ஞாபகமறதி... கவிஞர் ஒரு முறை அறிஞர் அண்ணாவைப் பார்க்க அவரது வீட்டுக்கு சென்றிருந்தார். அண்ணா ரொம்பவும் சுமாரான சட்டையை அணிந்திருந்தார். அதை பார்த்த கவிஞர் அண்ணாவிடம் அந்த சட்டையை உடனே கழற்றித் தரும்படிக் கேட்டார். அண்ணாவும் கழற்றித் தர, கவிஞர் "நான் இதை அளவுக்காக எடுத்துச் செல்கிறேன் ஜப்பான் சில்க்கில் ஒரு டஜன் சட்டை தைத்து எடுத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு போய் விட்டார். அத்தோடு அந்த விஷயத்தை கவிஞர் மறந்தும் விட்டார். அதன் பிறகு சில வாரங்கள் கழித்து மீண்டும் அண்ணாவைப் பார்க்க அவரது வீட்டுக்கு வந்தார் கவிஞர். அந்த நேரம் பார்த்து அண்ணா மேல் சட்டை எதுவும் அணியாமல் உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டு இருந்தார். ''என்ன அண்ணா வெற்றுடம்போடு இருக்கிறீர்கள்?'' என்று கேட்க, அண்ணாவோ, ''ஆமாப்பா போட்டிருந்த சட்டையையும் நீ பிடுங்கிக் கொண்டு போய் விட்டாய்... என்ன செய்வது?'' என்றார் குறும்புடன். கவிஞருக்கு அப்போதுதான் உரைத்தது. முதல் வேலையாக கடைக்குப் போய் ஒரு டஜன் ஜப்பான் சில்க் சட்டைகளை தைத்து கொண்டு வந்தார். பாட்டதிபரும், பட அதிபரும்... கவிஞர் 'வசந்த மாளிகை' படத்துக்கு விஜயா ஸ்டூடியோவில் பாட்டெழுத உட்கார்ந்திருந்தார். அங்கிருந்த கட்டிலில் படுத்துக் கொண்டு கவிஞர் யோசிக்க, அந்தப் படத்தின் அதிபர் ராமா நாயுடு மற்றும் இசை கலைஞர்களும் கீழே உட்கார்ந்து கவிஞரது பாடல் வரிகளுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். அப்போது அந்த வழியாகச் சென்ற விஜயா ஸ்டூடியோவின் உரிமையாளர் நாகிரெட்டி கோபம் அடைந்தார். ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் தனது அறைக்குப் போய்விட்டார். அதன்பின்னர் ராமா நாயுடுவை அழைத்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ‘‘தொழில் செய்கிற இடத்தில் பயபக்தி வேண்டாமா? இதென்ன படுத்துக் கொண்டு பாடெழுதும் பழக்கம்'' என்று கடிந்து கொண்டார்.
அதற்கு ராமா நாயுடு, கவிஞரைப் பற்றி சொல்லி நாகி ரெட்டியை சமாதானப்படுத்தினார். நாகி ரெட்டி, ‘‘நல்லது நாயுடு... அவர் பாட்டை முடித்த பிறகு என்னிடம் கொண்டு வந்து காட்டுங்க’’ என்று சொல்லி நாயுடுவை அனுப்பி வைத்தார். மறுநாள் அந்தப் பாட்டை நாகிரெட்டியிடம் கொண்டுபோய்க் காட்டினார் ராமா நாயுடு. அதைப் படித்த நாகி ரெட்டி அந்த தாளை அப்படியே பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டார். மறுநாள் அதே அறைக்கு கவிஞர் வந்தபோது புதிய மெத்தை, தலையணை, திண்டு போடப்பட்டிருந்ததைக் கண்டு கவிஞர் திகைத்தார். தயாரிப்பாளரான கவிஞர்... திரைஉலகில் எல்லோருக்கும் வரும் ஆசை கவிஞருக்கும் வந்தது. சரத் சந்தரின் கதையைத் தழுவி மாலையிட்ட மங்கை படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார் . அதற்கு கதாநாயகான நடிக்க டி.ஆர்.மாகாலிங்கத்தைத் தேர்வு செய்தார் கவிஞர். அவரது திரைஉலக நண்பர்கள் திகைப்படைந்தனர். டி.ஆர்.மகாலிங்கத்தின் புகழ் மங்கி இருந்த காலம் அது. அவரை வைத்துப் படம் எடுத்தால் ஓடுமா? என்ற சந்தேகத்தை கிளப்பினர். கவிஞர் தான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. தனது பாடல்களை பாடி நடிக்க சிறந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் ஒருவரே என்று கவிஞர் நம்பினார். படத்தில் மொத்தம் பதினேழு பாடல்கள். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. படம் மகத்தான வெற்றி பெற்றது. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு புது வாழ்வைக் கொடுத்தது. இப்படத்தின் வெற்றிக்காக அவருக்கு புதிய செவர்லெட் காரை கவிஞர் பரிசாகக் கொடுத்தார்.

No comments:

Post a Comment