காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மரணம் அடைந்தார். செப்டம்பர் மாதக் கடைசியில் ஒருநாள் சத்தியமூர்த்தி பவன் நிர்வாகியை அழைத்தார்.
`வள்ளியப்பா.. இங்கே வா...!' என்று கூப்பிட்டவர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார்.
பிறகு சொன்னார் `காங்கிரஸ் கட்சிப் பணம் 10 லட்சம் ரூபாய் நம்மகிட்ட இருக்கு. இந்தப் பணம் மாவட்டக் கமிட்டிகள் வசூலிச்சி நமக்கு அனுப்பிச்சதுங்கிறது உனக்குத் தெரியும். அந்தக் கணக்கெல்லாம் உன்கிட்டதான் இருக்கு.
இந்த 10 லட்சம் ரூபாயை இனிமே நாம கையில வச்சிருக்கக் கூடாது. அதை உடனே பேங்கிலே கட்டிட்டு வந்துடு...' என்றார்.
உடனே வள்ளியப்பன், `ஐயா.. பல மாவட்டக் கமிட்டிகள்லேருந்து இன்னும் பாக்கி நெறைய வர வேண்டியிருக்கே...' என்று தயக்கத்தோடு சொன் னார்.
காமராஜர் உடனே, `அதையெல்லாம் கணக்குல இன்னும் நீ பாக்கி எழுதி வச்சிகிட்டு இருக்கியா... அந்தத் தொகையெல்லாம் வராதுப்பா...! அவனவன் கட்சிக்குப் பணம் வசூல் பண்றதுக்காக வெளிïர்களுக்குக் கார் எடுத்துகிட்டு போயிருப்பான்.
டாக்ஸி வாடகை, பெட்ரோல், சாப்பாட்டுச் செலவுன்னு ஏராளமா செலவாகியிருக்கும்...! இதையெல்லாம் கட்சிக்காரவங்க கையிலேருந்தா கொடுக்க முடியும்...? பத்தாயிரம், இருபதாயிரம்னு பாக்கியிருந்தா அதையெல்லாம் விட்டுடு... பெரிய தொகை வரவேண்டியிருந்தா அதுகள மட்டும் என்கிட்டே குறிச்சிக் கொடு. அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கிட்டே கேட்டு வசூல் பண்ணிப்பிடலாம்...'' என்றார்.
அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் பாங்கியில் பணத்தை கட்டச் சொல்வார் என்று வள்ளியப்பன் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, `இன்னிக்கே கௌம்பு... இப்பவே கொண்டு போய்க் கட்டிட்டு வந்துடு...!' என்று அவசரப்படுத்தினார்.
`போறதுக்கு முன்னே அழ.வள்ளியப்பாவுக்குப் போன் போட்டு சொல்விடு...' என்றார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு இந்தியன் பேங்கின் ஆயிரம் விளக்கு கிளையில் தான், (கண்ணம்மை பில்டிங்) வைக்கப்பட்டிருந்தது.
அந்த கிளையின் மேனே ஜராயிருந்த `குழந்தை கவிஞர்' அழ.வள்ளியப்பா, தலைவரிடம் மிகுந்த மரியாதை உடையவர். அவரே நேரடியாக 10 லட்சம் ரூபாய் கட்டுகளை எண்ணினார். எதிர்பாராத விதமாக ஒரு புது நூறு ரூபாய்கட்டில் ஒரு தாள் குறைந்தது.
மீண்டும், மீண்டும் எண்ணிப்பார்த்து விட்டு, அவர் தொலைபேசியில் காமராஜரை தொடர்பு கொண்டார். தலைவர், `சரி... சரி... நான் அனுப்பி வைக்கட்டுமா... நீ இப்போது போட்டுக் கொள்கிறாயா?' என்று கேட்டார் வள்ளியப்பா. `நான் போட்டுவிடுகிறேன்.
தகவலுக்காகத் தான் உங்ககிட்டே சொன்னேன்யா...!' என்று சொல்லிவிட்டுச் `செலானில்' `சீல்' போட்டுக் கொடுத்து விட்டார்.பணம் கட்டிய ரசீதையும், வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் வாங்கிப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.
மாறி, மாறி பார்த்த அந்தப் பார்வையில் தான் எவ்வளவு மகிழ்ச்சி... நிம்மதிப் பெருமூச்சு.ஊரார் தன்னை நம்பி ஒப்படைத்த அந்தப் பொது நிதியை, வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டு வர அவர் காட்டிய அவசரம் அன்று சத்தியமூர்த்தி பவன் நிர்வாகி வள்ளியப்பாவுக்கு புலப்படவில்லை. `தனக்கு முடிவு நெருங்கி விட்டது.'
என்று தலைவர் உள்ளூற உணர்ந்து விட்டாரோ என்னவோப காமராஜர் தன் கையில் பத்து லட்சம் ரூபாய்ப் பணம் வைத்திருந்தார் என்னும் பாவச் சொல்லுக்கு ஆளாகி விடக்கூடாது என்று அந்தப் புண்ணிய ஆத்மா பதறியிருக்கக் கூடும், ஆம்.
அது தான் அவர் கடைசியாக வங்கியில் கட்டிய பணம்.
கொஞ்சம் தாமதித்துக் கட்டலாம், சில நாள் போகட்டும் என்று விட்டிருந்தால் கூட, தலைவரைப் பற்றிய விமர்சனம், விஷமிகளால் வேறு விதமாக வந்திருக்கக் கூடும்.
`பொதுவாழ்வில் கற்பு' என்பதை ஒரு குடும்பப் பெண்ணைப் போலப் பாதுகாத்து வந்த அந்த உத்தமர். கடைசி நிமிடத்திலும் தனது கண்ணியத்தைக் காத்தார்.
செப்டம்பர் இறுதியில் பத்து லட்சத்தை வங்கியில் கட்டினார். அக்டோபர் 2-ஆம் தேதி அவர் மறைந்தார். அவர் படுக்கையில் இருந்த பணம் பத்து ரூபாய்.
No comments:
Post a Comment