சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Oct 2014

ஐந்து நண்பர்களின் ‘பாத்ஷாலா’ பயணம்!


ஐந்து நண்பர்கள், ஐந்து வாரங்கள், ஐந்தாயிரம் கிலோமீட்டர்கள், ஒரு பயணம்.. இதுதான் 'பாத்ஷாலா' தெலுங்கு படத்தின் ஒன்லைன். 'பாத்ஷாலா' என்றால் பாடசாலை என்று அர்த்தம். அந்த பயணமே அவர்களுக்கு பாடசாலையாக அமைவதுதான் படத்தின் கதை. வழக்கமான புழுதி பறக்கும் சண்டைக்காட்சி, இரண்டரை மணிநேர பன்ச் வசனங்கள் என எதுவும் இல்லாமல், அமைதியாக அழகாக ஒரு படம்.

 ஒரே கல்லூரியில் படிக்கும் நந்து (பூபதி ராஜூ), சூர்யா (ஹமீத்), சந்தியா (அனுப்ரியா), ஆதி (சாய் ரோனிக்), சல்மா (ஸ்ரிஷா) ஆகிய ஐந்து பேரும் நண்பர்கள். நான்கு வருட கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு பிரியப் போகிறோமே என்ன செய்வது என கவலையில் இருக்க, ஐவரின் வீட்டிற்கும் சென்று வரலாம் என முடிவு செய்கின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் நபர்கள், விஷயங்கள் எல்லாம் அதுவரை அவர்களுக்கு இருந்த குழப்பங்களைத் தெளிவுபடுத்துகிறது.

 சூர்யாவுக்கு இசையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என ஆசை. ஆனால் முயற்சித்து அதில் தோற்றுவிடுவோமோ என்று பயம். அதேநேரத்தில் சந்தியாவின் மீது காதல். அதை சொல்லவும் பயம். ஒரு கட்டத்தில் அது சந்தியாவுக்குத் தெரிந்து அவளும் காதலை ஏற்றுக் கொள்கிறாள். "நீ அமெரிக்கா சென்று என் நிறுவனத்தை இயக்க ஆரம்பித்தால் என் மகளை நான் தாராளமாக உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்" எனக் கூறுகிறார் சந்தியாவின் தந்தை. இதனால் இசை ஆசையை இன்னும் ஆழத்தில் புதைத்துவிடுகிறான்.




ராஜூவிற்கு தன் ஊரிலேயே விவசாயம் செய்ய ஆசை. ஆனால் அவன் அத்தை, நீ நான் சொல்லும் வேலைக்குதான் செல்ல வேண்டும். அப்போதுதான் என் தம்பியின் பையனான உனக்கு என மகளை கௌரவமாக கல்யாணம் செய்து கொடுக்க முடியும் என்கிறார். ஆதிக்கு, தான் 12 வருடங்களாக காதலித்து வந்த தன் தோழியிடம் காதலை சொல்ல ஆசை.

எப்போதும் அலுவலக வேலைகளிலேயே கவனம் செலுத்தும் தன் அம்மா தனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் ஆசை. இரண்டுமே நடக்கவில்லை. சல்மாவிற்கு உயர் படிப்புகள் படிக்க ஆசை. ஆனால் வீட்டில் உடனே திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்துகின்றனர். எதிர்த்து நிற்க தைரியம் இன்றி நடப்பதை வேடிக்கை மட்டும் பார்க்கிறார். சந்தியாவுக்கு மட்டும் இதுபோன்ற எந்த கவலையும் இல்லை.

அவள் கேட்டதை எல்லாம் உடனடியாக கொடுத்துவிடுவார் அவளின் அப்பா. இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் தொடங்குகிறது இவர்களது பயணம். அதுவரை குறும்பாக மட்டும் செல்லும் அவர்களது பயணத்தை அர்த்தமுள்ளதாக ஆக்க அவர்களுடன் தற்செயலாக இணைகிறார் கார்த்திக். "எனக்கு கேன்சர் சில நாட்களில் இறந்துவிடுவேன்" என அவர்களுடன் அறிமுகமாகிறார் கார்த்திக்.

உடனே எல்லோரும் சோகமாகிவிட, "இங்க பாருங்க... எனக்கு இருக்கறது இரண்டே வழிதான். ஒண்ணு அழுது எல்லாரையும் கஷ்டபடுத்தி சாகறது. இன்னொன்னு எனக்கு என்னெல்லாம் செய்ணும்னு ஆசையிருக்கோ அதெல்லாம் செஞ்சிட்டு சந்தோஷமா சாகறது. இப்ப நான் என்ன செய்யட்டும்?" எனக் கேட்க அவருடன் பயணிக்கின்றனர் அந்த ஐவரும். 

ஸ்கூல் படிக்கும்போது தன் டிஃபனை பிடுங்கித் தின்றவனை தேடிப்பிடித்து ஒரு அடியாவது அடிக்க வேண்டும், தன் காதலைச் சொல்லாததால் தன் நண்பனுக்கு மனைவியாகிவிட்ட தோழியிடம் காதலைச் சொல்வது, குதிரையில் சவாரி செய்வது, கிரிக்கெட் விளையாடி ஜெயிப்பது என தன் ஒவ்வொரு ஆசையையும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து நிறைவேற்றிக் கொள்கிறார்.

கடைசியில் மரணம் அவரை கூட்டிக்கொண்டு செல்ல, அந்த துக்கம் நால்வரின் வாழ்க்கையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அதன்பிறகு அவர்களின் விருப்பங்களை நோக்கி அவர்கள் தைரியமாக செல்வதாக முடிகிறது படம்.




'வில்லேஜ் லோ விநாயகடு', 'குதிரித்தே கப்பு காஃபி' போன்ற படங்களைத் தயாரித்த மஹி.வி.ராஹவ் தான் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமாகியிருக்கிறார். இது லோ பட்ஜெட் படம் என்பதால் பெரிய நடிகர்களை நடிக்கவைப்பது இயலாத காரியம்.

இதற்கு ஃபேஸ்புக் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடித்தார் மஹி. நடிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் எங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொள்ளுங்கள் என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் தட்ட வந்து குவிந்தது அப்ளிகேஷன்ஸ். அதிலிருந்து மூன்று பேரை (ஹமீத், சாய் ரானிக், ஸிரிஷா) தேர்ந்தெடுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க வைத்திருக்கிறார்.

 கடைசியாக கார்த்திக் தன் பள்ளியில் மாணவர்களுக்கு சொன்ன வார்த்தைகளோடு முடித்தால் சரியாக இருக்கும், "நீங்க படிக்கிற படிப்பு, ரேங்க், மார்க்ஸ் எந்த அளவுக்கு உங்க வாழ்க்கைல உதவும்னு தெரியல. கிளாஸ் கட்டடிக்கத் தோணுதா அடிங்க, பிடிச்ச பொண்ணுகிட்ட காதலை சொல்லணுமா உடனே சொல்லுங்க.

சேட்டை பண்ணனுமா இன்னிக்கே பண்ணிடுங்க. பின்னால இதுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்காமலே கூட போயிடலாம். அதோட உங்க மனசுல ஞாபகமா இருக்கப்போறது உங்க மார்க்ஸ், ரேங்க்ஸ் இல்ல. நீங்க செஞ்ச சேட்டைகள், குறும்புகள், சின்ன சின்ன சண்டைகள்தான்" அவ்வப்போது இதுபோன்ற படங்கள் வருவது, தெலுங்கு சினிமா மசாலா நெடியில் மட்டும் மாட்டிக் கொள்ளவில்லை என்ற நம்பிக்கை தருகிறது!


No comments:

Post a Comment