சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Oct 2014

வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்

முதல் நாள் கூடங்குளம்... அடுத்த நாள் சென்னை... மறுநாள் டெல்லி... அது, நாடாளுமன்றமோ, நான்கு பேர் சந்திப்போ... வைகோ வைகோதான். மனிதருக்கு இப்போது வயது 68. ஆனால், நீங்கள் முதல் முதலில் பார்த்தபோது வைகோ எப்படி இருந்தார் என்று யோசித்துப் பாருங்கள். அப்படியேதான் இருக்கிறார் இப்போதும். அதிகாலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு, ஆசுவாசமாக செய்தித்தாள்களைப் புரட்டியபடி இருந்த வைகோவை அவருடைய இல்லத்தில் சந்தித்தோம்




''மனித உடல் இயற்கை கொடுத்த அற்புதமான ஒரு கருவி; கற்பனை செய்ய முடியாத படைப்பு. அந்த இயற்கை சில நியதிகளையும் நமக்கு வகுத்துத் தந்திருக்கிறது. 'இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும்என்பதுதான் அது. உடல் ஆரோக்கியத்தைப் பாழாக்கும் புகையும் மதுவும் எனக்குப் பகை. 'புகையையும் மதுவையும் தொட்டுவிடாதீர்கள்; அது உங்கள் நுரையீரலையும் கல்லீரலையும் எரித்துவிடும். உங்களுக்கு மட்டும் அல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அதுதான் எமன்!’ என்பதுதான் என் தொண்டர்களுக்கு நான் கூறும் அன்பு அறிவுரை. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்'' - கம்பீரமாகச் சிரிக்கிறது கலிங்கப்பட்டிப் புலி.


''என் அம்மா மாரியம்மாவுக்கு இப்போது 90 வயது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார். என் அம்மாவிடம் நான் கற்றுக்கொண்ட முதல் விஷயம் அதிகாலையில் இருந்து உழைப்பது. அடுத்த விஷயம் உணவுப் பழக்கம். காலையிலும் இரவிலும் ஒரு பெரிய டம்ளரில் கண்டிப்பாக பால் குடித்தே ஆக வேண்டும். காலை உணவை சரியாக உண்டேனா என்பதைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிப்பார். மதியம் உணவில் பருப்பும் நெய்யும் கண்டிப்பாக இருக்கும். கூடவே ரசமும் தயிரும் போட்டுக்கொள்ள வேண்டும். இரவிலும் சோறுதான்

திருமணத்துக்குப் பிறகும் அதே உணவு முறைதான். ஆனால், காலத்தின் கட்டாயம், 40 வயதுக்கு மேல் உடலின் மெட்டபாலிசம் மாறுவதால், இட்லி, எண்ணெய் இல்லாத கோதுமை உப்புமா, கோதுமை தோசை காலை உணவிலும், இரவில் சப்பாத்தியும் என் உணவுப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மதியம் வழக்கமான சாப்பாடுதான்.

                                                 

அசைவம் என்றால் ஒரு காலத்தில் எனக்குக் கொள்ளைப் பிரியம். ஆனால், முள்ளிவாய்க்கால் படுகொலைத் துயரம் நேர்ந்த சமயம் நான் அசைவம் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்.


பரம்பரை பரம்பரையாக நம் முன்னோர்கள் கட்டிக்காத்த வீடும் நிலமும் நமக்கு வருகிறதோ இல்லையோ... பரம்பரை நோய்கள் மட்டும் விடாக்கண்டனாய் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. ஆனால், சரியான சிகிச்சைமுறைகளும் உணவுக் கட்டுப்பாடும் இருந்தால் ஓரளவுக்குப் பரம்பரை நோய்களின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். என் அப்பாவுக்கு சர்க்கரை நோய் இருந்ததால், அது எனக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, நான் ருசித்துச் சாப்பிடும் இனிப்புப் பணியாரத்தையும் அதிரசத்தையும் அறவே மறந்துவிட்டேன்.

சர்க்கரை நோய் வராமல் தற்காத்துக்கொள்ள நடைப்பயிற்சி உதவும் என்பதால் அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி நேரம் வேகமாக நடப்பேன். நடைப்பயிற்சி இல்லாத நாட்களில் டிரெட் மில். நடைப்பயிற்சி முடிந்த பின்பு காற்றை வடிகட்டி நுரையீரலுக்குள் செலுத்தும் மூச்சுப் பயிற்சியை செய்து முடிப்பேன். என்னதான் உணவும் உடற்பயிற்சிகளும் இருந்தாலும் சுயப் பராமரிப்பு என்பது முக்கியமான ஒன்று. ஆரோக்கியமான உடலுக்குள்தான் அற்புதமான உள்ளம் இருக்க முடியும். காலைக் கடனை முடித்ததும் சோப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்யுங்கள். எந்தப் பொருளை சாப்பிட்டாலும் தண்ணீர்கொண்டு வாய் கொப்பளியுங்கள். ஏனெனில், அதிகமானக் கிருமிகள் உடனடியாகத் தாக்குவது இந்த இடங்களைத்தான்.''

''அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு உணவையும் தூக்கத்தையும் சரியானபடி கடைப்பிடிப்பது பெரிய சவால் இல்லையா?''

''ஆம்! ஆனால், நேரத்துக்குச் சாப்பிடுவதை ஓர் ஒழுங்காகவே நான் கடைப்பிடிக்கிறேன். அம்மா கற்றுத்தந்த பழக்கம். அதேபோல, தூக்கத்தை எந்தத் தேவதையாலும் பரிசளிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஆறு மணி நேரமாவது உடலுக்கு ஓய்வு கொடுத்தே ஆக வேண்டும். இல்லை எனில், அதுவே சர்க்கரை நோய்க்கும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கும் காரணமாகிவிடும்.  

ஆனால், தேர்தல், பொதுக்கூட்டங்கள் என்று வந்துவிட்டால், தூக்கத்துக்கான நேரத்தை நம்மால் தீர்மானிக்க முடியாது. அந்த மாதிரிச் சமயங்களில் நான் காந்தியவாதி. என்ன பார்க்கிறீர்கள். கிடைக்கும் ஓரிரு நிமிடங்களில்கூட கோழித் தூக்கம் போடுவாராம் காந்தியார். வெளியூர் செல்லும் சமயங்களில் வண்டியிலேயே தூங்கிவிடுவேன். பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவது எனக்குப் பிடித்த ஒன்று.''

''அதிகப்படியான மேடைகளைக் கண்ட பேச்சாளர் என்ற முறையில் சொல்லுங்கள். இத்தனை வயதிலும் குரலின் கம்பீரம் குறையாமல் பாதுகாக்கிறீர்களே... எப்படி?''

''1993-ல் தொண்டையில் ஒரு கட்டி வளர்ந்து அது புற்று நோயாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் காரணமாக அறுவை சிகிச்சைகூட செய்திருக்கிறேன். சிறிய கட்டிதான் அது புற்றுநோய் இல்லை என்று நிரூபணமாகிவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும் என் குரலில் எந்த மாற்றமும் இல்லை. நான் நினைக்கிறேன். குரல், இயற்கை எனக்குத் தந்த சிறப்பான பரிசு. மேடைகளில் பேசத் தொடங்குவதற்கு முன் சூடாக க்ரீன் டீ குடிப்பது வழக்கம்.

தூக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இரவு நேரங்களில் பேசத் தொடங்குவதற்கு முன்பு உணவு சாப்பிடும் பழக்கம் கிடையாது. குளிர்பானங்கள் சாப்பிடுவது எனக்கு குற்றாலத்தில் குளிப்பதுபோல. ஆனால், என் குரலுக்காகக் குளிர்பானங்கள் சாப்பிடுவதையே விட்டுவிட்டேன். குடிப்பதும் குளிப்பதும் கதகதப்பான நீரில்தான். குளிர்பானங்களுக்குப் பதிலாக வேகவைத்த காய்கறிகள் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன்.''


''ஆனால், அடிக்கடி சிறை செல்லும்போது உங்களால் இந்த ஒழுங்குகளை எல்லாம் பின்பற்ற முடியாது அல்லவா?''


''சிறைக்குள் ஓர் ஒழுங்குமுறையை நம்மால் கடைப்பிடிக்க முடியும். அதிகாலை ஐந்து மணிக்கு எழ வேண்டும். ஒன்றரை மணி நேரம் நடைப் பயிற்சி இருக்கும். மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் வாலிபால் மற்றும் மூச்சுப் பயிற்சி. உணவைப் பொருத்தவரை காய்ந்துபோன ரொட்டியும் சப்பாத்தியும்தான் கிடைக்கும். 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுஎனும் கண்ணதாசனுடைய வரிகளை நினைத்து சமாதானம் ஆகிவிடுவேன். மன வலிமையை எந்தத் துன்பத்தாலும் துளைக்க முடியாது.''


''சரி... இந்த மனவலிமையை எங்கிருந்து பெறுகிறீர்கள்?''


''புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்... ஆசைப்பட்ட நூல்களை நெஞ்சுக்குள் குடியேற்றிக்கொள்வதுதான் எனக்கான மனப்பயிற்சி. புத்தக வாசிப்பு என்பது ஒரு வகையில் ஒரு தவம்.

ஒரு விஷயத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை 13 முறை நான் ரத்த தானம் செய்து இருக்கிறேன். 'ரத்ததானம் செய்தால் உடல் எடை குறையும். உடல் நலம் பாதிக்கும்என்கிற தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. உண்மையில் ரத்த தானம் செய்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. தவிர, நம்மால் ஓர் உயிர் காக்கப்பட்டது என்பதை நினைக்கும்போது கிடைக்கும் திருப்தி இருக்கிறதே... ஆரோக்கியம் என்பது அதில் இருந்துதானே பிறக்கிறது.  வாழ்க்கை என்பது எல்லாம்தானே!''




No comments:

Post a Comment