சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Oct 2014

‘அம்மா’வை மிஸ் பண்ணும் தலைமைச் செயலகம்!


'தேரடி வீதியில் தேவதை வந்தா, திருவிழானு தெரிஞ்சுகோ...’ என்பதுபோல முன்னாள் முதலமைச்சர் சென்னையில் இருந்தாலே, களைகட்டும் தமிழகத்தின் தலைமைச் செயலகமான ஜார்ஜ் கோட்டை, இப்போது திருவிழா முடிந்த திடல்போல நிற்கிறது. 'தமிழ்நாட்டுக்கு 'முதலமைச்சர்’ என ஒருவர் இருக்கிறாரா?’ என்று சந்தேகம் வரும் அளவுக்கு கப்சிப் அமைதியில் இருக்கிறது கோட்டை வட்டாரம். 'ஜெயலலிதாவுக்கு முன்’... 'ஜெயலலிதாவுக்குப் பின்’ என பல அலேக் மாற்றங்கள் தலைமைச் செயலகத்தில். நுழைவாயிலில் பார்வையாளர்களை சோதனை செய்யும் இடத்தில் காக்கிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

முன்பெல்லாம் சிகரெட், பீடி, பான்பராக், பிளேடு, சீப்பு போன்றவை நுழைவாயில் சோதனையில் பெட்டி பெட்டியாகப் பறிமுதல் ஆகும். இப்போது அந்தப் பெட்டிகள் காலியாகக் காற்றாடுகின்றன. கோட்டை வளாகம் சுற்றிலும் வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் பேனர்கள் அகற்றப்படவே இல்லை. அமைச்சர்கள் வரும் போர்ட்டிகோ அருகே புகைப்பட மாடம் ஒன்று உண்டு. இதை ஜெயலலிதாதான் முன்பு திறந்து வைத்தார்.

ஜெயலலிதாவின் புகைப்படங்களுடன் அன்றாட நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் அங்கே இடம்பெறும். அதோடு டிஜிட்டல் ஸ்கிரீனிலும் ஜெயலலிதா மின்னிக்கொண்டிருப்பார். 'முதலமைச்சர் மாற்றம்’ நிகழ்ந்த பிறகும் அந்தப் புகைப்பட மாடத்தில் எந்த மாற்றமும் இல்லை. அர்னால்டு சந்திப்பு, அமைச்சரவைக் கூட்டம், அம்மா உணவகம் திறப்பு... என ஜெயலலிதா கடைசியாகப் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்களுக்குப் பிறகு, அது அப்டேட் ஆகவே இல்லை.

ஒரு மாநில முதலமைச்சர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையின் பதவியேற்பு என்பது இந்திய அளவிலான தலைப்புச் செய்தி. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழ்நாட்டின் அமைச்சரவை பதவியேற்பு என்ற ஒன்று நடக்கவே இல்லை என்பதுபோல, அது தொடர்பான ஒரு புகைப்படத்தைக்கூட கோட்டை வளாகத்தில் எங்கேயும் காணமுடியவில்லை.

நான்கு ஆண்டுகள் சிறைவாசம் என்ற தண்டனை காரணமாக எம்.எல்.ஏ பதவியை ஜெயலலிதா இழந்துவிட்டதால், 'ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது’ என சட்டமன்றம் அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரை அப்படியான அறிவிப்பு வரவில்லை (இனிமேலும் வருமா?)! 'இது தொடர்பான அறிவிப்பு மற்றும் இணையதளக் குறிப்புகளில் 'ஜெயலலிதாவுக்கு பதவி பறிப்பு’ என எப்படிக் குறிப்பிட முடியும் என்கிற பயம்தான்!’ என்கிறார்கள் சட்டமன்ற ஊழியர்கள்.

 இதனால்தான், 'ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருக்கிறது என்பதை உடனே அறிவிக்க வேண்டும்’ எனச் சொல்லிக் கிளம்பினார் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன். ஆனால், சட்டமன்ற வளாகத்தில் அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. சட்டமன்றத்தைப் பொறுத்தவரை ஸ்ரீரங்கத்தின் எம்.எல்.ஏ ஜெயலலிதாதான். அதன் அதிகாரபூர்வ இணையத்தளத்திலும் அதே விவரம் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் இருக்கிறது. தலைமைச் செயலக வளாகத்திலேயே ஆச்சர்யமாக 'தமிழக முதலமைச்சர்’ அறை மிகவும் அமைதியாக இருக்கிறது. பார்வையாளர்கள் யாரும் இல்லை; கையில் கோப்புகளோடு காத்திருக்கும் அதிகாரிகள் இல்லை.


ஆழ்கடல் அமைதியோடு தனிநபராக தன் அறையில் அமர்ந்து தமிழகத்தை 'நிர்வகித்துக்கொண்டிருக்கிறார்’ தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்! நிதியமைச்சராகப் பணிபுரிந்த பழைய அறையிலேயேதான் இப்போது முதலமைச்சராக அமர்ந்திருக்கிறார். சிரிப்பு என்றால் துளி சிரிப்பு... அட ஒரு மலர்ச்சியான புன்னகையைக் கூடப் பார்க்கமுடியவில்லை அவர் முகத்தில். குனிந்த தலை நிமிராமல் வருகிறார்; போகிறார். பதவியேற்ற நான்கைந்து நாட்களாக அமைதியாக இருந்தார்.

 சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, ஆங்காங்கே அ.தி.மு.க போராட்டம் என விவகாரம் நீதிமன்றப் படியேறிய பிறகு சுதாரித்து, அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இப்போது கோப்புகளைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவர் மட்டும் ஓ.பி.எஸ்-ஸோடு வலம்வருகிறார்கள். முதலமைச்சர் சார்பாக வெளியாகவேண்டிய அறிக்கைகளில், 'அம்மா வழியில் ஆட்சி புரிந்துவரும் தமிழ்நாடு அரசு’ எனக் குறிப்பிடச் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். ஆண்டு முடிவதற்கு இரண்டு மாதங்கள் இருந்தாலும்கூட, புதிய முதல்வர் பதவி ஏற்றால் அவரின் படத்தோடு அரசு காலண்டர் அச்சடிக்கப்படும்.

ஆனால், இப்போது அது இல்லை. அவ்வளவு ஏன், அரசு அலுவலகங்களில் மாட்டுவதற்காக 'முதலமைச்சரின் அதிகாரபூர்வப் படம்’ என தமிழக அரசின் செய்தித் துறை ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து அனுப்பும். அதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நல்ல படம் என ஒன்று இதுவரை தேர்ந்தெடுக்கப்படக்கூட இல்லை. ஜெயலலிதா முதலமைச்சராகப் பணிபுரிந்த 'சி.எம் சேம்பர்’, துப்பாக்கி ஏந்திய போலீஸின் பலத்த பாதுகாப்போடு இப்போதும் இருக்கிறது.

ஜெயலலிதாவின் கார் நிற்கும் போர்ட்டிகோவில் இப்போது காக்கைகள் சாவகாசமாகத் தீனிகளை மேய்ந்து கொண்டிருக்கின்றன. முன்னரெல்லாம் ஜெயலலிதா கோட்டைக்கு வருவதற்கு முன்பே, அந்த போர்ட்டிகோவில் நின்று அட்டென்டண்ஸ் போடும் அமைச்சர்கள், இப்போது அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை. பூங்கொத்தும் கையுமாக நிற்பது, காலில் விழுவது, பயந்து நடுங்குவது என எந்தக் கவலையும் இல்லாமல் முகத்தில் சந்தோஷ மின்னலுடன் வலம்வருகிறார்கள் சில அமைச்சர்கள்.

  ஜெயலலிதாவைச் சந்திக்க முடியாது என உத்தரவாதமாகத் தெரிந்தாலும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைவாசலில் சில மணி நேரங்கள் காத்திருப்பதைக் கடமையாகச் செய்துவந்தார்கள் அமைச்சர்கள். இதனால் கோட்டையில் எந்த வேலையும் நடக்காமல் முடங்கியது. ஆனால், வாரக்கணக்கில் அப்படியே போட்டது போட்டபடியே இருக்க முடியாது என்பதால், இப்போதுதான் ஆய்வுக் கூட்டங்கள், கோப்புக் கையெழுத்துகள் என செயலில் இறங்கியிருக்கிறார்கள் சில அமைச்சர்கள்.


 முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா கடைசியாக வெளியிட்ட அறிவிப்பு... 'சலுகை விலையில் அம்மா சிமென்ட்’. அந்த அறிவிப்பு அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1,000 ரூபாய் மதிப்புள்ள 'அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம்’ வழங்கப்படும் என்ற அறிவிப்பும் 'அம்மா’ வந்தால்தான் நடைமுறைக்கு வருமாம். 'அம்மா உணவகம்’, 'அம்மா உப்பு’, 'அம்மா மருந்தகம்’ ஆகிய திட்டங்களில், 'அம்மா’ பெயருக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்றாலும், ஜெயலலிதாவுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது.

ஆனால், அது அவ்வளவு கண்டிப்பாக நடைமுறைக்கு வரவில்லை! ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே, கோப்புகளில் அமைச்சர்கள் நினைத்ததுபோல கையெழுத்துப் போட முடியாது. 'கோப்பில் துறை செயலாளர் கையெழுத்துப் போட்டால், இறுதியாக நீங்கள் போடுங்கள்’ என்பதுதான் அமைச்சர்களுக்கு முன்பு அம்மா இட்ட கட்டளை. 'அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அம்மாவின் செயலாளர்களான ஷீலா பிரியா, ராம மோகன ராவ், வெங்கடரமணன் ஆகியோரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’ எனவும் சொல்லப்பட்டிருந்தது.

 இப்போது ஜெயலலிதா இல்லாததால் எல்லாமே அதிகாரிகள்தான். ஆக, இப்போது அரசின் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள்தான் கோட்டையை ஆட்சி செய்கிறார்கள். அதற்கு எந்தச் சிக்கலும் வராமல் பார்த்துக்கொள்கிறார் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 'அம்மா’ வகுத்த பாதையில் சீரும் சிறப்புமாக இயங்குகிறது தமிழக அரசு!



No comments:

Post a Comment